யோகி பாபு, டிடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து,சாம்ஸ்,மதுசூதன் ராவ் ஸ்ரீநாத்,மணிகண்டன் நடித்துள்ளனர்.இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி உள்ளார்.இசை பிஜோர்ன் சுராவ்,கதை திரைக்கதை வசனம் எஸ்.ஏ பத்மநாபன், ஒளிப்பதிவு மாசாணி, எடிட்டிங் இளையராஜா,ஸ்டண்ட் ஷார்ப் சிவா, கலை முஜீப்.ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்களின் பட்டாளத்தை வைத்து உருவாகியிருக்கும் படம்.
பணம் நண்பர்களை பிரிக்கும் என்பார்கள். ஆனால் சாலையில் கிடக்கும் ஒரு 2000 ரூபாய் நோட்டின் மூலம்
மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேரும்
நண்பர்கள் ஆகிகிறார்கள்.பணம் சும்மா விடுமா ?அதே நோட்டின் மூலம் பிரச்சினையும் வருகிறது.அது என்ன பிரச்சினை ?அவர்களை அது எப்படி ஆட்டிப் படைக்கிறது அதிலிருந்து அவர்கள் தப்பித்து மீண்டார்களா என்பது தான் லெக் பீஸ் படத்தின் மீதிக் கதை.இது ஒரு கதையா? என்று தோன்றலாம்.டைட்டானிக் படத்தைக் கூட ஒரே வரையில் சொல்லிவிடலாம் தான்.ஆனால் இதைப் படமாக எடுக்கும்போது சுவாரசியமான கலகலப்பான நகைச்சுவை ததும்ப உருவாக்கி இருக்கிறார்கள்.சிரிக்க வைப்பது என்ற நோக்கம் மட்டும் இருப்பதால் எந்தத் தர்க்கத்தையும் பார்க்கக் கூடாது.ருசியான பிரியாணியை மட்டும் சாப்பிட வேண்டும். அதிலுள்ள தக்காளியின் தோலை எடுத்து எண்ணக்கூடாது
மணிகண்டன் குயில் என்கிற பாத்திரத்தில் வருகிறார். அவர் சவுரி முடி வியாபாரம் செய்கிறார்.இந்த பாத்திரத்தைக் கற்பனை செய்வதற்கே யாரும் முயல மாட்டார்கள்.
கருணாகரன் கிளி ஜோசியக்காரர் ஆக வருகிறார்.இதுவும் ஒரு கற்பனை தானே?ஸ்ரீகாந்த் பேய் விரட்டுகிறார்.ரமேஷ் திலக் மிமிக்கிரி கலைஞர்.இந்த கூட்டணியை வைத்து எப்படி கலக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள்.அதைத்தான் இயக்குநர் அடித்து ஆடி இருக்கிறார்.
வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி வரும். கமல், எஸ்வி சேகர், திலீப் தாங்கள் பட்டினியாக இருந்தாலும் ஸ்ரீதேவிக்குக் கேட்க வேண்டும் என்று சாப்பிட்டு விட்டதாகப் போலியாகப் பேசிக்கொள்வார்கள்.தங்கள் வறுமையை மறைத்துக் குரல்களாலேயே, தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வார்கள். அந்தக் காட்சிதான் இந்த நான்கு இளைஞர்களையும் பார்க்கும்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.ஏனென்றால் அப்படித்தான் இவர்கள் தங்கள் வறுமையை மறைத்து நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். எங்கள் வறுமை எங்களோடு போச்சு நீங்கள் சிரியுங்கள் என்று சிரிக்க வைக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
யோகி பாபு தன் பாணியில் சிரிக்க வைக்கிறார்.படம் முழுக்க வருகிறார்.ஆனாலும் மற்றவர்களை ஒப்பிடும்போது அவர் சிரிப்பூட்டும் பங்கு குறைவுதான்.
வாய்ப்பு கிடைத்தால் பொளந்து கட்டும் நடிப்புக் கலைஞர்கள்,மிகை நடிப்பு வராமல் கட்டுப்படுத்தினால் சிறந்த கலைஞர்கள் என்ற பெயர் பெற்ற விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர்களும் தங்கள் நடிப்பனுபவத்தை முகபாவனைகளில்,உடல் மொழிகளில் வெளிப்படுத்துகிறார்கள்.பெரிய நட்சத்திரப் படமாக இது இல்லாவிட்டாலும் இவர்கள் சிறு துண்களாகப் படத்தைத் தாங்கி நிற்கிறார்கள்.
காட்சிகளில் வண்ணமயம் காட்டி கவர்கிறார்ஒளிப்பதிவாளர் மாசாணி.ஒரு வணிக ரீதியான படத்துக்கு என்ன தேவையோ அந்த இசையைக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் பிஜோர்ன் சுராவ் .தன் பங்கான கடமையைச் சிறப்பாகவே செய்துள்ளார்.நகைச்சுவைப் படத்திற்கு தொய்வு வந்து விடக்கூடாது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ்.குறிப்பாக இரண்டாம் பாதியில் இவர் திறம்படப் பணியாற்றி உள்ளார்.
பண மதிப்பிழப்புக் காலத்துக்கு முன்பு தொடங்கிய கதை, பண மதிப்பிழப்பு காலத்துக்குப் பிறகு முடிகிறது. அந்தக் காலகட்டங்களை நினைவு கூர்ந்து காட்சிகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.நிஜத்தில் அது அது மக்களுக்குச் சோதனையான காலமாக இருந்தாலும் அதனை நகைச்சுவையாகக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்கள்.
கிரைம் த்ரில்லர் கதையை நகைச்சுவையாக சொல்ல முடியுமா? அந்த முயற்சியில் தான் எஸ். ஏ. பத்மநாபன் இறங்கி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.தான் ஒரு பாத்திரம் ஏற்றதுடன் இதைப் படமாக ஸ்ரீநாத் இயக்கியுள்ளார்.ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்களைப் பயன்படுத்தி ஒரு முழு நீள கலகலப்பான படமாக மாற்றி உள்ளார்.
இவ்வளவு பேரை நடிக்க வைத்து படத்தின் நோக்கம் சிரிக்க வைப்பதற்கே என்பதை நிறைவேற்றி உள்ளார்.முதல் பாதி மிதவேகத்தில் சென்றாலும் இரண்டாம் பாதியில் அதை ஈடு கட்டி திரையரங்கில் சிரிப்பொலி டெசிபளை உயர்த்தி உள்ளார்.
மொத்தத்தில், இந்த ‘லெக் பீஸ்’ . ‘. ப்ளேட் பிரியாணி .