‘படவா’ திரைப்பட விமர்சனம்

விமல் ,சூரி ,ஸ்ரீதா ராவ்,கே ஜி எஃப் ராம் , தேவதர்ஷினி, நமோ நாராயணன் ,வினோதினி வைத்தியநாதன்,செந்தில் ,சரவண சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். கே .வி . நந்தா இயக்கியுள்ளார்.இசை ஜான்பீட்டர்.ஒளிப்பதிவு ராமலிங்கம், எடிட்டிங் வினோத் கண்ணா, கலை சரவண அபிராமன்.
ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் ஜான் பீட்டர் தயாரித்துள்ளார்.

குறும்புகள் செய்பவர்களை ப படவா என்று திட்டுவார்கள்.கெட்டவர்களைக் கூட அப்படி திட்டுவதுண்டு.அந்த வகையில் விமல் ஒரு குறும்புக்காரராக நல்லது எதுவும் செய்யாதவராக இருக்கிறார். எனவே அவர்தான் இந்தப் படத்தில் படவா.

சிவகங்கை மாவட்டம் மரகாத்தூர் என்ற கிராமத்தில் பொறுப்பற்றுத் திரியும் ஒரு வாலிபன்தான் விமல்.பெரியோர்களுக்குப் பிடிக்காத அனைத்தையும் பட்டியல் போட்டுச் செய்கிறார். இவருடைய தொந்தரவு தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பினால் தான் தேறுவார் என்று ஊர் மக்களே சேர்ந்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அங்கே அவர் மதுபானங்கள் விற்கும் பாரில் வேலை செய்கிறார்.சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார். மலேசியாவில் அவருக்கு 10 கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்று ஒரு கதை கிளம்புகிறது. அதனை ஊர் மக்கள் நம்புகிறார்கள்.அது பொய் என்று விமலைக் காதலிக்கும் ஶ்ரீதாவுக்குத் தெரிகிறது.ஊர் திரும்பிய விமல் அதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருக்கிறார்.நண்பர்கள் நெருக்கிக் கேட்டபோது என் வாயால் அப்படி நான் சொல்லவில்லையே அவர்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ? என்று கேட்கிறார்.சூரி தான் இதைப் பரப்பி விட்டது தனக்கு இதில் பங்கு இல்லை என்கிறார்.ஆனால் ஊர் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறது.

ஊரில் அவரை ஒரு கோடிஸ்வரனாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் மீது ஒரு நல்ல அபிமானம் வந்து அவரை ஒரு பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தலைவர் பதவியை வைத்து ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அதன் படி முயற்சி செய்கிறார். அந்த ஊரின் குளம், கண்மாய்களை ஆழப்படுத்தி பொதுப்பணிகளை முடித்து விடுகிறார். நிலத்தடி நீரை உறிஞ்சி சாகுபடிநிலத்தை அழிக்கும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறார்.இதனால் அவருக்கு ஊரில் நல்ல பெயர் கிடைக்கிறது. அந்த ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சி என்று பரிசும் கிடைக்கிறது.அவர் மேல் மதிப்பு கூடி மக்களும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.ஆனாலும் அந்த பத்து கோடி ரூபாயை நினைத்துக் கொண்டு மக்கள் அவரிடம் ஏதாவது பண உதவி கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நேரத்தில் சில இனிப்பான சம்பவங்கள் நடக்கின்றன. அதன் விளைவு என்ன என்பதுதான் ‘படவா’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கெட்ட பையனாக அதாவது படவாவாக விமல் நடித்துள்ளார். வழக்கம் போல அவரது படங்களில் தெரியும் டெம்ப்லேட் நாயகன் பாத்திரம்தான் என்றாலும் சில சுவாரசியமான,கலகலப்பான காட்சிகளால் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நாயகியாக வரும் ஸ்ரீதா சுமாரான தோற்றம் சுமாரான நடிப்பு என்று வருகிறார்.சூரி தன் பங்குக்கு சிரிக்க வைக்க மகிழ்கிறார். குறிப்பாக அவர் கழிப்பறைக்குச் செல்லும் காமெடி அதற்கான வெளிப்படுத்தும் முக பாவனைகள் சிரிப்புத் தோரணங்கள்.
கேஜிஎப் ராம் ஒரு வில்லனாக வருகிறார். பெரிதாக மிரட்ட வாய்ப்பில்லை.
தேவதர்ஷினி, நமோ நாராயணன் ,வினோதினி வைத்தியநாதன்,செந்தில்,சரவண சக்தி போன்ற சிலரும் நடித்துள்ளனர். தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார்கள்.

ஒரு பொறுப்பற்றவன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்தால்அவனைப் பொறுப்புள்ளவனாகவும் நல்லவனாகவும் மாற்ற முடியும் என்கிற கருத்தை நகைச்சுவை முலாம் பூசப்பட்ட இந்த கதையில் பூடகமாகச் சொல்லி இருக்கிறார்கள். சிரிக்க வைக்க வேண்டும் என்றே படத்தை எடுத்துள்ளார்கள்.சில காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன, சில நெளிய வைக்கின்றன.

இந்த பட்ஜெட்டுக்கேற்றபடி தன்னால் முடிந்த அளவுக்குச் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் .படத்தில் ஜான் பீட்டர் இசையில் மிதமான ரகத்தில் பாடல்கள் உள்ளன. மொத்தத்தில் செந்தமிழ் நாட்டுப் பின்னணியில் கிராமிய பின்புலத்தோடு ஒரு பொழுது போக்குச் சித்திரமாக ‘படவா’ வந்து இருக்கிறது.கிராமியப் பின்னணியில் நடுத்தரமான ஒரு கலகல பட அனுபவம்.