‘அம்…ஆ’ திரைப்பட விமர்சனம்

திலீஷ் போத்தன்,தேவதர்ஷினி, ஜாஃபர் இடுக்கி, மீரா வாசுதேவ் ,டி ஜி ரவி, சுருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு நடித்துள்ளனர்.தாமஸ் செபாஸ்டியன் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். காப்பி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

தாய்க்கும் -குழந்தைக்குமான பாசப் போராட்டமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

பாரம்பரியம் குலையாத ஒரு மலைக் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி.அவர் அப்பா அம்மா என யாரும் இல்லாத தனது பேத்தியை அன்பு காட்டி வளர்த்து வருகிறார்.அந்த கிராமத்திற்கு சாலைப் பணி மேற்பார்வையாளராக திலீஷ் போத்தன் வருகிறார்.அவர் தேவதர்ஷினி அவரது பேத்தி குறித்து பலரிடம் விசாரிக்கிறார்.இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் எதையோ தேடுகிறார்.அவரைப் பார்த்து தேவதர்ஷினி பதற்றமாகிறார் தன்னிடம் இருந்து குழந்தை பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்.

திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது கண் தெரியாத முதியவர் ஒருவர் சந்தேகப்படுகிறார்.திலீசைக் கண்டு தேவதர்ஷினி அஞ்சுவது ஏன் ?அந்தக் குழந்தையின் பின்னணி என்ன என்பதே ‘அம்…ஆ’ திரைப்பட மீதிக் கதை.

இக்கதையை பரபரப்பான உணர்வுபூர்வமான திரைக்கதை மூலம் ஒரு சஸ்பென்ஸ் தில்லராக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இதுவரை அசட்டுத்தனமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேவதர்ஷினி,இதில் உணர்ச்சிகரமானபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.அதிகம் பேசாமலேயே அவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற போராடும் இடங்களில் பயம், பீதி , பாசம் என்று ஏகப்பட்ட பாவனைகளைக் காட்டி நடித்துள்ளார்.

இயல்பான நடிப்பு வெளிப்பாடுகளின் மூலம் முதல் பாதிப் படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் திலீஷ் போத்தன்.அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் மர்ங்களை விதைத்துச் செல்கிறார்.

ஊர்த் தலைவராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவன், டிஜி ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்ஸியர், மாலா பார்வதி எனப் பிற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அனிஷ்லால்.ஆர்.எஸ்-ன் கேமரா மலை கிராமத்தின் ஆபத்தையும், அம்மக்களின் வாழ்க்கையையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.படம் பார்க்கும் நாமும் அந்த கிராமத்தில் வசிப்பது போன்ற உணர்வைப் பெறுகிறோம்.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசை அந்த மலைக் கிராமத்து பண்பாடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நன்றாகவே கடத்தி உள்ளது.

ஒரு மலைக் கிராமத்தின் பின்னணியில் அங்கு உள்ள மனிதர்கள் மற்றும் குறைந்த அளவிலான பாத்திரங்களை வைத்துக் கொண்டே ஒரு முழுமையான திரைக்கதை அமைத்து நம்மைத் தடுமாறாமல் அந்தக் கதையில் பயணிக்க வைத்துவெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் தாமஸ் செபாஸ்டியன் .

கவிபிரசாத் கோபிநாத்தின் எழுத்தும், தாமஸ் செபஸ்டியனின் இயக்கமும் ஒரு சாதாரண கருவை மிக சுவாரஸ்யமான படமாக மாற்றியிருக்கிறது.

முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் திரில்லராகச் செல்கிறது. இரண்டாம் பாதியில் குழந்தைக்கும், தாய்மைக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லி பார்வையாளர்களின் இதயம் நெகிழச்செய்து விடுகிறார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘அம்..ஆ’நிச்சயமாகப் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும்.