‘ரெட்ரோ ‘திரைப்பட விமர்சனம்

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், சுஜித்சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி,விது,கஜராஜ், தமிழ், பிரேம்குமார்,சந்தோஷ் நாராயணன் நடித்துள்ளனர்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,எடிட்டிங் ஷபிக் முஹம்மத் அலி, கலை ஜாக்கி -மாய பாண்டி,
2D புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜோதிகா, சூர்யா தயாரித்துள்ளனர்.சக்தி பிலிம். ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான கதைக் களத்தில் படம் எடுத்துப் பெயர் பெற்றவர். கதாநாயக நடிகர் சூர்யா தனக்கென ஒரு புதுரகப் படத் தேடலில் உள்ளவர். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளது தான் ‘ரெட்ரோ’ திரைப்படம்.

சூழலின் அழுத்தத்தால் சிறு வயதிலிருந்தே சிரிப்பை மறந்த ஒரு நாயகன், அடிமை விலங்கில் சிக்குண்டு சிரிப்பைத் தொலைத்த தனது சமுதாய மக்களைத் துயரத்திலிருந்து எப்படி மீட்டு ஆனந்தப் புன்னகையை வரவழைக்கிறான் என்கிற கதை.

கதையின் பயணம் எப்படி? ஒரு களேபரத்தில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்டு அனாதையாக நிற்கிறது. அக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார்  தூத்துக்குடியையே கலக்கி வரும் பெரிய தாதா ஜோ ஜு ஜார்ஜின் மனைவி. பாரி வேல் கண்ணன் என்று பெயரிட்டுப் பாசமும் காட்டி வருகிறார். ஆனால், அந்தக் குழந்தையை வளர்ப்பு மகனாகக் கூட ஏற்காமல் பாரா முகம் காட்டுகிறார், பகைமையும் பாராட்டுகிறார் ஜோஜு.ஒரு கட்டத்தில் அவனிடம் வீரமும் கோபமும் இருப்பதை அறிந்து அவனை அடியாளாகப் பயன்படுத்த நினைக்கிறார்.எப்படியும் தன்னை வளர்ப்புத் தந்தை ஜோ ஜு கொன்று விடுவார் என்று உன் மனசு சொல்கிறது அனாதையாக வந்து சேர்ந்த மகனுக்கு. தந்தை கடத்தி வரும் தங்க மீனை அவருக்குத் தெரியாமல் கைப்பற்றி மறைத்து வைக்கிறார் பாரி,அதாவது சூர்யா. இந்நிலையில் பாரியின் காதலி பூஜாவை ஜோ ஜு கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது அவரது கையை வளர்ப்பு மகனான சூர்யா வெட்டித்துண்டாக்குகிறார்.

இம்மோதலில் பதற்றமும் கலக்கமும் அடைந்த காதலி ஊரை விட்டுச் செல்கிறார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து மணம் செய்ய எண்ணும் சூர்யா அடிதடி வன்முறைகளை கைவிட்டு பிறரைச் சிரிக்க வைத்து சிகிச்சை செய்யும் ஒருவராக மாறுகிறார். ஆனால் சூழ்நிலை அவரை மீண்டும் ஆவேசக்காரனாக மாற்றுகிறது. அதன் பிறகு எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன. அவை என்ன என்பதுதான் இந்த 165.30  நிமிட ரெட்ரோ’ படத்தின் முடிவைத் தேடிச் செல்லும் திரைக்கதையின் பாதை.

பாரி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா.பல்வேறு விதமான போக்குகளையும் பாணிகளையும் காட்டி நடிக்கும் பாத்திரம். .அதில் அநியாசமாக நடித்து சில இடங்களில் அனுதாபத்தையும் பல இடங்களில் கைத்தட்டல்களையும் அள்ளுகிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார்.

பூஜாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து,திருமண ஆயத்த விழாவில் ஆட்டம் பாட்டம் என அமர்க்களம் செய்துள்ளார் சூர்யா.
இடையிடையே ஜோ ஜு ஜார்ஜுடன் நடத்தும் மோதல்,பரபரப்பை ஏற்றி இருக்கிறது. காட்சியை விறுவிறுப்பாக்குகிறது.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊர்களில் நிகழ்கிறது கதை.காதல், யுத்தம், கல்ட், அந்த ஒருவன் என்று வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு நிறம் காட்டுகிறது.
அடுத்த கதைக்களம் அந்தமானில் தொடங்கியதும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்குப் பயணிக்கிறது கதை. அங்கு கல்ட் சண்டை வீரராக மாறுகிறார் சூர்யா.வீரம் செறிந்த தனி ஒருவனாக மோதல் போட்டிகளில் வெல்வதும் எதிரிகளை துவம்சம் செய்வதும் கைத்தட்டல்களை அள்ளும் காட்சிகள்.

பூஜா ஹெக்டே தனது அலங்கார உடைகளைத் துறந்து எளிமையான உடையுடன் பாந்தமாக வருகிறார்.இயல்பான நடிப்பை வெளிக்காட்டவும் தவறவில்லை.
காலணி ஆதிக்கக் காலத்தையும் காட்டுகிறார்கள். அப்போது நாசர் வருகிறார். தற்காலத்து அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் வருகிறார்.
பழங்காலத்தைக் காட்டும்போது அதன் பின்னணியில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.படம் பார்ப்பவர்களுக்கு வேறொரு உலகத்திற்கு சென்று வந்த உணர்வைத் தருகின்றன காட்சிகள்.சுமார் பத்து நிமிடங்கள் ஓடும் ஒரே ஷாட் டில் எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சி அசர வைக்கிறது.
சர்வாதிகாரிக்கு புரட்சிதான் பொழுதுபோக்கு, உச்ச கட்ட கோழைகள் தான் சர்வாதிகாரிகள் போன்ற
தெறிக்கும் வசனங்கள் ஆங்காங்கே உண்டு.

சூர்யா ஆவேசம் கொள்கிற போதெல்லாம் பூஜா ஹெக்டே  தடுப்பணை போட்டு அவரை அறவழிக்குத் திருப்ப நினைக்கிறார் .ஆனாலும் அடங்காத சிறுத்தையாக சூர்யா சீறுகிறார்.அப்படியான காட்சிகளில் அனல் தகிக்கிறது.

வழக்கமான மசாலா ஆக்சன் படமாக எடுக்காமல் இயக்குநர் புதுப்பாணியிலான கதைப் பின்னணியை எடுத்துக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் உள்ளன. அவர் பாடல் காட்சியில் ஆடியும் நடித்துள்ளார்.

அதேபோல் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு பல இடங்களில் காட்சிப் பிரம்மாண்டத்தை கொடுக்க தவறவில்லை.

மொத்தத்தில் சூர்யாவின் மாறுபட்ட ஸ்டைலுடன் கூடிய வித்தியாசமான படைப்பு’ரெட்ரோ’ திரைப்படம். ,நம்பி வருபவர்களை ஏமாற்றாது .