இனிகோ பிரபாகர் ,வேதிகா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் , செண்ட்ராயன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் நடித்துள்ளனர். பிரபதீஷ் சாம்ஸ் இயக்கியுள்ளார். ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபாதீஷ் சாம்ஸ் தயாரித்துள்ளார்.
திரைப்படம் ஒரு விஞ்ஞான ஊடகம் என்றால் அனைத்து வகையான கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் அதில் இடம் உண்டு. தொன்மங்களையும் அமானுஷ்யங்களையும் இணைத்து மாய யதார்த்த கதைகள் ஹாலிவுட்டில் பிரபலம் .தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் மிக குறைவு அப்படி ஒரு முயற்சியாக வந்துள்ளது தான் ‘கஜானா’ .
ஒரு புதையல் ரகசியம் தேடும் சில கதாபாத்திரங்களில் பயணம் தான் இந்தப் படம் எனலாம்.
திரைப்படங்களில் எத்தனையோ விலங்குகளைப் பார்த்திருக்கிறோம் . புராணங்களில் நம்மால் அறியப்பட்ட யாளி என்கிற விலங்கை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
நாகமலை பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து மறைத்து வைத்த புதையல் உள்ளது.அது யாளி என்ற விலங்கால் பாதுகாக்கப்படுகிறது. அந்த யாளியோ டைனோசர் காலத்திற்கு முந்தியதாகும்.அந்தப் புதையலில் உள்ள பொக்கிஷத்தை எடுக்க பலர் முயற்சித்து உயிரை விட்டிருக்கிறார்கள்.ஆனாலும் அந்த சாகசப் பயணத்தைத் தொடர அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.தொடர் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நாயகன் இனிகோ பிரபாகர் தனது குழுவினருடன் நாகமலை செல்கிறார். மறுபக்கம், அதே புதையில் வேட்டை முயற்சியில் அகழ்வாராய்ச்சி செய்யும் வேதிகாவும் இறங்குகிறார். இவர்கள் மட்டுமா? இன்னொரு புறம் யோகி பாபுவும் ‘மொட்ட’ ராஜேந்திரனும் அந்த காட்டுக்குள் நுழைய பயணப்படுகிறார்கள்.
அந்தப் புதையல் பகுதியில் பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் நவரத்தின கற்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.பல காலமாக
அதனைக் கைப்பற்றப் போராடுகிறார் சாந்தினி. அவர் கருட இனத்தின் தலைவி. இந்நிலையில் இனிகோ பிரபாகர் அந்த இடத்தை நெருங்கும் போது, அவரிடம் இருந்து அதனைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்.
நவரத்தின கற்களைக் கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற்றதா? அங்கு யாளி இருப்பது உண்மையா?தன்னிடம் வருபவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்த அந்த காட்டுக்குள் சென்றவர்களின் நிலை என்ன? நாகமலையைச் சுற்றி இருக்கும் மர்மமான மாய உலகத்தின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விஷுவல் தொழில்நுட்பம் மூலம் விடை சொல்வதே ‘கஜானா’.
தமிழ் சினிமாவின் சாகசப் படங்கள் வருவது குறைவு .அத்துடன் மிகை யதார்த்தம் தொழில்நுட்பம் போன்றவற்றை இணைத்து பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் ‘கஜானா’ சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே திடுக்கிடும் காட்சிகள் மூலம்நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.அடுத்தடுத்த காட்சிகளில் யானை, புலி, குரங்குகளுடனான சண்டைக்காட்சி, பாம்பு என பலவித விலங்குகளை நவீன தொழில் நுட்பம் மூலம் காட்சிப்படுத்தி நம் விழிகளை வியப்பால் விரிய வைக்கிறார்கள்.இறுதியில் யாளி விலங்கை திரையில் தோன்ற வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.அந்த விலங்கின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கும் வி.எப்.எக்ஸ் நிபுணர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அட்வெஞ்சர் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அச்சமின்றி உலா வரும் யோகி பாபு மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணி செய்யும் காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ரகம்.
பொக்கிஷத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் வேதிகாவின் நுழைவுக்கு கதையில் உரிய இடம் உண்டு. அவரது திரைத் தோற்றம் படத்திற்குக் கூடுதல் பலம். இரண்டாம் கட்ட நாயகியாக வளர்ந்து வரும் சாந்தினி இதில் ஏற்றுள்ள வேடம் இதுவரை நடித்திராதது.எதிர்மறை நிழல் கொண்டது.கருட இனத்தைச் சார்ந்த அவரது கதாபாத்திரம் மற்றும் அதன் அனிமேஷன் காட்சிகள் நிச்சயம் சிறுவர்களைக் கவரும்.பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் ஆகியோரது அனுபவமிக்க நடிப்பு படத்திற்கு அனுகூலம்.
ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ,அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தையும் அமானுஷ்யத்தையும் தனது காட்சிகளின் மூலம் ரசிகர்களை உணர வைக்கிறார்கள்..கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப ஒளிப்பபதிவு செய்துள்ள விதம் நன்று.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் கூடுதல் பிரம்மாண்டம் தருகின்றன.
படத்தின் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு அதை சரியான படி தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் கே.எம்.ரியாஸ்.
தனது அதீத கற்பனைக் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் இந்த ‘கஜானா’-வை பிரமாண்ட படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூற வேண்டும்.
மொத்தத்தில், ‘கஜானா’ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவரும் பொழுதுபோக்குப் படம்.