‘நரி வேட்டை’திரைப்பட விமர்சனம்

டொவினோ தாமஸ்,சுராஜ் வெஞ்சார மூடு, சேரன்,பிரியம்வதா கிருஷ்ணன்,ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ் தியோ ஃபைன்,நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார்,அப்புன்னி சசி ,குமார் சேது,உன்னிகிருஷ்ணன், வினோத் போஸ் , தொம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் அனுராஜ் மனோகர்,எழுத்து அபின் ஜோசப்,ஒளிப்பதிவு விஜய், இசை ஜேக்ஸ் பிஜாய்,கலை இயக்கம் எம். பவா, சண்டைப் பயிற்சி ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள், படத் தொகுப்பு சமீர் முகமத்.தயாரிப்பு இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் ,ஷியாஸ் ஹாசன்.

கேரளாவில் ஒரு கிராமத்தில் வாழும் வாலிபர் வர்கீஸ் .விவசாயம் லாபகரமாக இல்லாததால் நல்ல வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அவருடைய காதலி நான்சி வேலைக்குச் செல்பவர். பொருளாதார ஏற்றத்தாழ்வு காதலுக்கு குறுக்கே நிற்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் வேலை வருகிறது. அது ஒரு வேலையா என்று தவிர்க்க பார்க்கிறார். பலரும் அறிவுரை கூறவே, அந்த வேலையில் சேருகிறார் வர்கீஸ்.

கேரளாவின் மலைப்பகுதியில் ஆதிவாசிகள் தங்களுக்குக் குடி இருக்க நிலம் வேண்டும் என்று போராடுகிறார்கள்.போராட்டம் பல நாட்களாக தீவிரமடைந்து தொடர்கிறது. அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ஒரு போலீஸ் படை செல்கிறது. அதில் வர்கீசும் இருக்கிறார். அவர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து விட்டார்கள் என்று போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அதற்குச் செல்லும் பஷீர் என்கிற போலீஸ்காரர் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்.அது மாவோயிஸ்டுகளின் வேலை என்று போலீஸ் கூறுகிறது. ஆனால் வர்கீஸ் அதை போலீஸே கொன்றுவிட்டு திசை திருப்பும் நாடகம் என்று கண்டுபிடிக்கிறார். அதை அதிகார அச்சுறுத்தல்களுக்கு எதிராக எப்படி ஒரு மனசாட்சி உள்ள போலீஸ்காரராக அந்த அநீதியை மக்கள் முன் கொண்டு சேர்க்கிறார் ,அதன் விளைவு என்ன என்பதுதான் 139.58 நிமிடங்கள் கொண்ட ‘நரி வேட்டை ‘படத்தின் கதை.

நரி வேட்டை என்பது காவல்துறைக்கு உள்ளேயே இருக்கிற அதிகார நரிகளைக் குறி வைத்து வேட்டையாடுவது என்று புரிந்து கொள்ளலாம்.

படத்தின் கதை பெரும்பாலும் இரண்டே நாட்களில் அதுவும் இரவில் நடப்பதாக இருக்கிறது. 2003 நவம்பர் 11 மற்றும் 12 என்ற இரண்டு நாட்களில் நடக்கிறது.அதற்குள் பிளாஷ் பேக் காட்சிகளும் உண்டு.

இப்படத்தில் வேலை தேடும் வாலிபராக டொவினோ தாமஸ் வருகிறார். அவரது காதலி நான்சியாக பிரியம்வதா கிருஷ்ணன் வருகிறார். நாகரிகமான தோற்றம் மகிழ்ச்சியான போக்கு என்று அவர் வருகிறார். சேரன் உயர் போலீஸ் அதிகாரியாகவும் எந்தப் போலீஸ் படையைக் கட்டுப்படுத்துவராகவும் வருகிறார்.தோற்றத்திலும் உடல் மொழியிலும் எந்தக் குறையும் இல்லாமல் நடித்துள்ளார்.அப்படிப்பட்ட உயரதிகாரியாக சேரன் நடித்துள்ளார் .அதிகார துஷ்பிரயோகத்தை அமல்படுத்துபவராக அவர் ஒரு எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

பஷீர்பாத்திரத்தில் சுராஜ் வெஞ்சார மூடு நடித்துள்ளார். போராட்டத்தின் போதும் அலைக்கழிப்புகளின் போதும் போலீஸ் படும் பாடுகள் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதுவரை படங்களில் பெரிதாகச் சொல்லப்படாத பகுதி  இது என்று கூறலாம்.

கூட்டம் என்றால் போலீசுக்கு பிடிக்காது. ஏதாவது காரணம் சொல்லிப் போராட்டத்தை முடித்து வைக்கவே விரும்புவார்கள்.

படத்தின் காட்சிகள் கேரளாவில் மலைப்பகுதிகளில் காட்டுப் பகுதிகளில் என்று நடக்கின்றன. அந்தப் பின்னணியே  படத்திற்குப் புதிதான நிறத்தைக் காட்டுகிறது. இது மலையாளத்தில் உருவாகி தமிழில் வெளியான படம் என்றாலும் மொழிமாற்றுப்படம் என்கிற உணர்வு இல்லாமல் வசனத்தை மிக இயல்பாக எழுதியுள்ளார் ஆர்.பி பாலா.
காத்தடிச்சா பறந்து போற குடிசையில் வாழ்ந்து கிட்டிருக்கோம்’ போன்ற எளிமையான நல்ல வசனங்களும் படத்தில் உள்ளன.

ஜாக்ஸ் பிஜோயின் இசையில்  பின்னணி இசை மட்டுமல்ல பாடல்கள்யும்  சிறப்பாக அமைந்துள்ளன.வழக்கமான வாத்திய ஒலிகள் இல்லை.
மொத்தத்தில் போலீஸ் சம்பந்தப்பட்ட கதைக்குள் யாரும் பிரித்தறிய முடியாத இழையைப் பிரித்து நெய்து இந்தத் திரைக்கதையை உருவாக்கி வெற்றிகரமாக இயக்கியுள்ளார் இயக்குநர்.

இந்தக் கதையினுடைய ஆதிவாசி மக்களின் உணர்வுகள் அவர்களின் பழக்க வழக்கங்கள் திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் போன்றவை காட்டப்படுகின்றன.
போலீஸ் துறையின் இன்னொரு இருட்டான பக்கத்தைப் காட்டியுள்ளது இந்தப் படம்.