கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது இல்லை. திரைப்படங்களிலும் நாட்டம் இல்லை. தமிழ் ஈழத்தின் துயரைச் சித்தரிக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தையும், தாயகம் வரும் அகதிகளின் துயரத்தைச் சித்தரிக்கும் ராவண தேசம் திரைப்படத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் புதிய பிரதி என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தையும் கண்டேன்.
ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி நிருபராக இயங்கிய தம்பி சரவணன் 2009 ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் நெருப்பில் கருகிக் கிடந்தபோது என்னுடனே இருந்ததால் நட்பு கொண்டேன். தான் இயக்கிய ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தை முன் திரையிடலில் பார்க்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி அழைத்தபோது, மூன்று முறை நான் தேதி கொடுத்தும் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் அத்திரையிடல் இரத்தாயிற்று. அதுகுறித்து அவர் என் மீது வருத்தம் கொள்ளாமல், மீண்டும் வலியுறுத்தியதால் முன்திரையிடலில் கத்துக்குட்டி திரைப்படம் பார்த்தேன்; மெய்சிலிர்த்துப் போனேன்.
இன்றைய திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் சீரழிகிறதே! என்று நொந்துபோன என் மனதுக்கு அம்மனப் புண்ணை ஆற்றும் மருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.
உழுது பயிர் விளைவித்து உலகோரை வாழ வைக்கும் உழவர் பெருமக்கள் தாங்க முடியாத துன்பத்திற்கும், அல்லலுக்கும் ஆளாகி நலிந்து நொறுங்கிக் கிடக்கின்றனர். அவர்களது வாழ்வைச் சூறையாடும் கார்ப்ரேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வாட்டி வதைக்கும் அரசாங்கங்கள், சுற்றுச் சூழலை நாசமாக்குவது, குறிப்பாக காவிரி தீர மக்களின் எதிர்காலத்தை நாசமாக்க வளைத்துவிட்ட மீத்தேன் எரிவாயுத் திட்டம் இவற்றை எல்லாம் எதிர்த்து மக்கள் போர்க்கொடி உயர்த்தும் உணர்வினை கத்துக்குட்டி திரைப்படம் பிரமிப்புடன் ஏற்படுத்துகிறது.
இத்திரைப்படத்தில் இரத்தம் கொட்டும் வன்முறைக் காட்சிகள் இல்லை; ரெட்டை அர்த்த ஆபாச பேச்சுகள் இல்லை; காமக் களியாட்டங்கள் இல்லை; மது அருந்தும் காட்சிகளைக் கொண்டே மதுவின் தீமையைச் சித்தரிக்கிறது.
பசுமை குலுங்கும் செந்நெல் வயல்கள், நெஞ்சை ஈர்க்கும் கிராமத்து வாழ்க்கை, விவசாய நிலங்களை அபகரிக்கும் ஆபத்து அனைத்துமே உள்ளத்தைக் கவர்கின்றன. மீத்தேன் எரிவாயுவை எதிர்த்து என் போன்றவர்கள் ஆயிரம் மேடைகளில் பேசுவதால் ஏற்படும் தாக்கத்தை இந்த ஓர் கத்துக்குட்டி திரைப்படம் அற்புதமாக ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தை அரசியல் தலைவர்களும், கலை உலக படைப்புப் பிரம்மாக்களும் காண வேண்டும் என விரும்பி, செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நான்கு பிரேம் முன்திரையிடல் அரங்கத்தில் நானே திரையிட ஏற்பாடு செய்தேன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களும், படைப்புப் பிரம்மாவாக நான் மதிக்கும் பாரதிராஜா அவர்களும் கத்துக்குட்டி திரைப்படம் கண்டார்கள்; பாராட்டிப் போற்றினார்கள்.
அக்டோபர் 1 ஆம் தேதி கத்துக்குட்டி திரைப்படம் தமிழகம் எங்கும் திரையிடப்படும் என்ற விளம்பரச் சுவரொட்டிகளைக் கண்டு மகிழ்ந்தேன். ஆனால், ஒன்றாம் தேதி காலையில் தொலைக்காட்சிகளில் கத்துக்குட்டி திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தடை! என்ற செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இயக்குநர் சரவணனிடம் விசாரித்தபோது, முதல் நாள் வரையிலும் நேசமாகப் பேசிவந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் உடனடியாக குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என்று முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை ஆணை பெற்றுவிட்டார். ஏன் என்றே புரியவில்லை என்றார். நீதிமன்றத்தில் படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் வழக்குத் தொடுத்து அன்றே தடை விதிப்பது பெரும்பாலும் நடைபெறுவது இல்லை.
தயாரிப்பாளரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. பணத்தைச் செலுத்துவதற்கு தவணை நிபந்தனை நீதிமன்றம் விதித்திருக்கலாம். நீதிமன்றத்தை நான் குறைகூறுவது முறையல்ல. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நீதி தேவதையைப் பற்றி எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை திரையிட திரையரங்குகள் கிடைப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும்கூட கத்துக்குட்டி எதிர் நீச்சல் போட்டு வெல்வான் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைகோவின் வார்த்தைகள் பலிக்கட்டும்!