உதவி இயக்குநர்களால்தான் எங்களுக்குப் பெருமை என்று. ‘காதல் காலம்’ படவிழாயில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசினார்
பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.ஏ.சோம சுந்தரா இயக்கியுள்ள ‘காதல் காலம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.
விழாவில் பாடல்களை வெளியிட்டு பாக்யராஜ் பேசும்போது “இங்கு என்ன பேசுவது? பேசுவதற்குப் பயமாக இருக்கிறது? தினசரி செய்தித்தாள்கள் படிப்பவன் நான். அப்படி இன்று படித்துக் கொண்டு இருக்கும் போது, மனிதனுக்கு இயற்கை கண்கள் 2 வைத்திருக்கிறது.காதுகள் 2 வைத்திருக்கிறது. ஆனால் வாயை மட்டும் ஒன்றுதான் வைத்திருக்கிறது. ஏன் தெரியுமா? அதிகமாகப் பார்க்கவேண்டும் நிறைய கேட்க வேண்டும் ,ஆனால் குறைவாகவே பேச வெண்டும். அப்படிப் பேசுவதற்குமுன் அதிகமாக பார்க்க வேண்டும் ,கேட்க வேண்டும் என்றிருந்தது.
அப்புறம் கொடூரமான 4 விலங்குகளில் நாக்கும் ஒன்று என்று இருந்தது.அதை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்.யோசித்துப் பேசு என்றிருந்தது. அப்புறம் பிடித்த ஒரு வரி இருந்தது. நல்ல வரியாக அதைப் பார்த்தேன் மௌனம்தான் பாதுகாப்பான,காட்டிக்கொடுக்காத நண்பன் என்றிருந்தது. மேலும் படித்துப்பார்த்த போது சொல்லாண்மை என்பது முக்கியம் என்றிருந்தது. அது திருடனைக் கூட திருத்தக் கூடியது என்றிருந்தது.ஒரு பத்திரிகையாளனாக எழுத்தாளனாக நான் அதிகம் பேசுவதை விட உற்றுக் கவனிக்கவே விரும்புவேன்.
இந்த விழாவில் பாண்டியராஜன் வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தது மகிழ்ச்சி.. அவர் உயர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஆரம்ப காலத்தில் அப்போது அவர் வேலை கேட்டு வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒருமுறை தூயவன் அவர்களின் அலுவலகம் போன போது இவரை என்னிடம் அறிமுகம் செய்து இங்கு இவன் இங்கு ஆபீஸ் பையனாக இருக்கிறான் உங்களிடம் உதவி இயக்குநராக சேர ஆசைப்படுகிறான் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார் .சரி என்றேன்.
மறுநாள் ‘மௌனகீதங்கள்’ படப்பிடிப்பில் படப்பிடிப்பு ஆரம்பித்த போது என்னிடம் எதுவும் சொல்லாமல் க்ளாப் போர்டோடு முன்னால் வந்து நின்றார் ஏய்.. நான் உன்னை வேலைக்கே சேர்த்துக் கொள்ளவில்லையே என்று க்ளாப் போர்டை வாங்கிக்கொண்டு போ ஓரமாக நில் என்றேன். போய் ஓரமாய் நின்று கொண்டார்.
மாலையில் படப்பிடிப்பு முடிந்து பார்த்தால் அங்கேயே ஓரமாக நின்று கொண்டி ருந்தார். அவரைஅழைத்து ‘வாய்யா காரில் ஏறுய்யா’ என்று காரில் ஏற்றிக் கொண்டு போனேன். அப்படி சேர்ந்தவர்தான் இந்த பாண்டியராஜன்.
எங்க டைரக்டர் சொல்வார் பாக்யராஜ் என்னிடம் இருந்தவன் என்று. உதவி இயக்குநர்களால் எங்களுக்குப் பெருமை என்று சொல்வார்.நான் வளர வளர என்னைப் பார்த்து அவர் பெருமைப் பட்டவர். உதவி இயக்குநர்கள் வளர்வதுதான் டைரக்டருக்குப் பெருமை என்பார். அது போல என்னிடம் பணிபுரிந்த சோமு இயக்குநராகியிருக்கிறார் அவர் எடுத்திருக்கும் இந்தப்படம் அவரது நட்பைக் காட்டுகிறது. இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் செல்வராஜ்,இந்த சோமு தன் நண்பர் என்பற்காக நண்பருக்காக நட்புக்காக படம் தயாரிக்க முன் வந்திருப்பது பெரிய விஷயம். செல்வராஜ் பேசும்போது படத்தின் கதை வசனம் க்ளைமாக்ஸ் வரை பேசிவிட்டார். இவ்வளவு வெளிப்படையானவராக இருக்கிறாரே என நினைத்தேன்., இதிலிருந்து அவர்களின் நட்பு புரிகிறது. முதல் படத்தையே நண்பருக்காக முதலீடு செய்திருக்கிறார். இப்படி நண்பர்கள் கிடைப்பது அரிது.
இவர்கள் ஒரேகுடும்பம் மாதிரி படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
இந்த சோமு ‘பாக்யா’வில் வேலை பார்த்தவர். அதிகம் பேசமாட்டார். வேலையை நம்பிக் கொடுக்கலாம்.சொன்ன வேலையை சரியாகச் செய்து முடிப்பவர். பாக்யாவுக்குத் தூண் மாதிரி இருந்தவர். என் பாக்யா காம்வுண்டுக்குள் வந்தவர்கள் பலரும் வாய்ப்பு கிடைத்து நன்றாக இருக்கிறார்கள். சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னும் சிலரும் மேலே வரவேண்டும். அதுதான் எங்களுக்குப் பெருமை..”என்று கூறிய பாக்யராஜ் படக்குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் திருமதி பூர்ணிமா பாக்யராஜ்,இயக்குநர்கள் பாண்டியராஜன், எஸ்.பி.ராஜ்குமார், பாடலாசிரியர் கினேகன் ஆகியோருடன் ‘காதல்காலம்’ தயாரிப்பாளர் தமிழ்க் கொடி பிலிம்ஸ் வெப்படை ஜி.செல்வராஜ்,இயக்குநர் ஜி.ஏ சோமசுந்தரா,புதுமுகங்கள் நாயகன் சந்துரு,நாயகிகள் நித்யாஷெட்டி, சார்வி செக்கூரி , ஒளிப்பதிவாளர் விஜய் ,அரவிந்த், ஷெரீப் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.