‘ஆண்டவன் கட்டளை ‘ விமர்சனம்

ak1தன்னுடைய முந்தைய இரண்டு திரைப்படங்களையுமே கவனிக்கத்தக்க படைப்புகளாக கொடுத்துள்ள இயக்குநர் மணிகண்டனின், மூன்றாவது  படைப்புதான் ‘ஆண்டவன் கட்டளை’.

‘நேர்வழி நில்’ என்று கூறினால் மதிக்கமாட்டார்கள்.உண்மையிலிருந்து விலகாதே என்றால் காது கொடுக்க மாட்டார்கள்.ஆனால் நல்ல கதையாக்கினால் கேட்க,பார்க்க வைக்கமுடியும். இதை உணர வைத்துள்ளார் இயக்குநர்.ஒரு பொய் சொன்னால் அதைத் தெரிந்து சொன்னால் மேலும் மேலும் பொய் சொல்ல வேண்டி என்னவெல்லாம் அலைக்கழிய நேரிடும் என்பதே கதை.

 

காந்தி என்கிற விஜய் சேதுபதி ஒரு பொறுப்பான இளைஞன். பெற்றோரை இழந்தவர். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனையே இன்னமும் அடைக்க முடியாமல் தவிப்பவர். அதற்கு மேலும் தொழில் செய்வதற்காக அக்காவின் நகைகளை வாங்கி அடகு வைத்து தொழில் செய்து பணத்தை இழந்து கடனில் தத்தளித்து வருகிறார்.

எப்படியாவது  லண்டனுக்கு வேலை தேடிச் சென்று தன் குடும்பக் கஷ்டத்தைப் போக்க முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல தீர்மானிக்கிறார்.அதற்காக  இருவரும் கிராமத்தில் இருந்து சென்னை  வருகிறார்கள். வந்தவர்கள்  இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை கேட்டு, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரைப் போடுகிறார்கள்.

விஜய் சேதுபதி தனது  மனைவி பெயரை கார்மேகக் குழலி என்று பொய்யாக குறிப்பிடுகிறார். ஆனால் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கிறது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் சோர்வடைந்த விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடகக் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.

திடீரென்று நாசர் லண்டனில் தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றம் செய்யப் போவதாகச் சொல்கிறார். இந்தக் குழுவினருடன் விஜய் சேதுபதியையும் அழைக்கிறார்.அப்போது, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை தயார் செய்யும்படி கூறுகிறார். அந்த நாடக கம்பெனியில் வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட்டை பார்த்து, அதில் குறிப்பிட்டிருக்கும் அவரது மனைவி யார் என விசாரிக்கிறார்.தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், விசா எளிதில் கிடைக்க பொய் சொன்னதையும் கூறுகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி அந்த பெயரை எப்படி நீக்குவது என்று வக்கீலிடம் சென்று ஆலோசனை கேட்கிறார். அதன்படி அந்த பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அவளை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைத்து, விவாகரத்து வாங்கி விவகாரத்தை முடிக்கத் திட்டம் போடப்படுகிறது.

அதன்படி அலைந்து கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்கக்கூடிய  டிவியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் ரித்திகா சிங்கைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இறுதியில் ரித்திகா சிங், அப்படி மனைவியாக நடிக்க சம்மதித்தாரா? விஜய் சேதுபதி சம்பாதிக்க வெளிநாடு போனாரா? என்பதே மீதிக்கதை.

எப்போதும் மணிகண்டன் சமூகத்தில் நடக்கும் அவலங்களைப்பேசுபவர்.இதிலும் பேசியுள்ளார்.பாஸ்போர்ட் முறைகேடுகள்,இடைத்தரகர்கள் தொடங்கி  சென்னையில் வாடகை வீடு, விவாகரத்து  வரை பலவும் பற்றி பேசியுள்ளார். மற்றபடி எல்லாக்காட்சிகளிலும் இயல்பு மாறாமல் கதை சொல்லியுள்ளார்.சினிமாத்தனங்களைத் தவிர்த்துள்ளார்.

விஜய் சேதுபதியைப் பார்த்தால்குறை யொன்றுமில்லை . யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக வரும் போது ரசிகர்கள் உற்சாகமடைவர்.

‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங்கும், விஜய் சேதுபதிக்கு  ஈடுசெய்துள்ளார் எனலாம். ஒவ்வொரு காட்சிக்கும் அவரது முகபாவனைகள் என ரசிக்க வைப்பவை.நாயகனின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

கே-யின் இசையில் பாடல்கள் குறையில்லை. பின்னணி இசையில் தனது முழு பலத்தைக்காட்டியுள்ளார். சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகு, தெளிவு.
மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ சமூக அக்கறையுள்ள சத்தான கதையுள்ள படம்.