சென்னை 28 – இரண்டாம் பாகத்தில் ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல தயாராக இருக்கிறார் பிரேம்ஜி அமரன்
நடிகர், பிரேம்ஜி அமரன். பத்து வருடத்திற்கு முன் சென்னை 28 திரைப்படத்தில் இவர் பேசிய “என்ன கொடும சார் இது….” என்ற வசனம், இன்றளவும் இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இவருடைய மின்னல் வேக ‘பீல்டிங்’ தான் சென்னை 28 முதல் பாக ஆட்டத்தின் தனி சிறப்பு…..ஆனால் கைக்கு நேராக வரும் பந்தை மட்டும் பிடிக்க தவறி விடுவார்….. வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் சென்னை 28 – ஆட்டத்தின் இரண்டாம் பாகத்தில் எப்படியாவது பந்தை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி, கடும் பயிற்சிகளை மேற்கொண்ட ‘சீனு’ (பிரேம்ஜி அமரன்), சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் திருமணம் ஆகாத இளைஞராகவே வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 – II திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அதே அணியினர் தான், இந்த ஆட்டத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தன்னுடைய துள்ளலான இசையால் இசை பிரியர்களை தன் வசம் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா சென்னை – 28 – II பாகத்தின் இசையமைப்பாளராக திகழ்வது மேலும் சிறப்பு.
“எங்கள் சென்னை 28 திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எங்கள் அணியினரின் உற்சாகமும், வேகமும் சிறிதளவு கூட குறையவில்லை.துடிப்பான அணியாக நாங்கள் செய்ல் படுவதற்கு அதுவே முக்கிய காரணம். எங்களின் இரண்டாம் பாகத்தை நாங்கள் கிராமத்து பிண்ணனியில் படமாக்கி இருக்கிறோம்.ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்தோடு வைத்துக் கொள்ளும் சுவாரசிய காட்சிகள் பல எங்களின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றது.. இந்த இரண்டாம் ஆட்டத்தை காண வரும் ஒவ்வொரு இளம் ரசிகர்களும் சிக்ஸர் கோட்டை தாண்டி நான் அடிக்கும் பந்தை பிடிக்க தயாராக இருங்கள்…. அதுமட்டுமின்றி, நான் தோன்றும் காட்சிகள் அனைத்தும் இளம் பெண்களின் மனதை வெல்ல கூடியதாக இருக்கும்….” என்று தனக்குரிய தனித்துவமான குறும்பு பாணியில் சொல்கிறார் ‘சீனு’ என்கின்ற பிரேம்ஜி அமரன்