கடைசி கோவணம் வரை உருவி விட்டார்களே : நடிகர்கள் பற்றி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் குமுறல்!

tiruppur4பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ள ஆடியோ திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் அதில் சொல்லியிருக்கிறார்?

சில தயாரிப்பாளர்கள். படம் வெற்றி பெற்றுவிட்டதாக மட்டுமே சொல்கிறார்கள். அவர்கள் படத்தின் லாபக் கணக்கை மட்டும் சொன்னதே இல்லை.

ஆனால் இது அனைத்துமே பொய்யானவை. நடிகர்களை திருப்திபடுத்தவும், அவர்களது மார்க்கெட்டை கூட்டுவதற்காக தயாரிப்பாளர்கள் செய்யும் சதி வேலை இது….

தமிழ் சினிமாவில் படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாருமே இப்போது பெருத்த நஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.

‘கபாலி’ முதல் இப்ப ரிலீஸ் ஆன ‘சிங்கம்-3 வரை இவை எல்லாமே நஷ்டத்தைக் கொடுத்த படங்கள்தான்.

‘பைரவா’வுக்கு நாங்கள் கொடுத்த விலையில் 25 சதவிகிதம் நஷ்டம்தான் கிடைத்த்து.

 

‘கபாலி’யால் நாங்கள் 40 சதவிகிதம் நஷ்டத்தைத்தான் சம்பாதித்தோம். இது தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும வெற்றுப் பெருமைக்காக நூறு நாள், இருநூறு நாள் அப்படீன்னு சீன் போட்டுக்கிட்டிருக்காங்க.

‘ரெமோ’ படம் தமிழகம் முழுக்க ஹிட்டுன்னு சொன்னால், அதை நாங்க ஏத்துக்க முடியாது. ‘ரெமோ’ படத்தால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம்தான்.

மாஸ் ஹீரோக்களெல்லாம் இங்கே லாஸ் ஹீரோக்களாகத்தான் இருக்கிறார்கள்.

மாபெரும் வெற்றி, மக்கள் விரும்பும் வெற்றி, மகிழ்ச்சி, 25-வது நாள், 50-வது நாள், 200-வது நாள்னு விளம்பரம் போடுறீங்களே உண்மையிலேயே தியேட்டர்ல ஓடித்தான் விளம்பரம் போடுறீங்களா…? மனசாட்சியோட விளம்பரம் குடுக்கணும்.

மக்களை வேணா விளம்பரம் போட்டு ஏமாத்தலாம். தொழில்ல இருக்கிற எங்களுக்கு தெரியும் எவ்ளோ நஷ்டம்னு…? சொன்ன இத்தனை படத்துலயும் ஒரு விநியோகஸ்தர்கள்கூட பத்து காசு லாபம் சம்பாதிக்கல. அப்புறம் எதை வைச்சி ‘வெற்றி’ன்னு சொல்றீங்க..?

மேலே சொன்ன நடிகர்கள் படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்களை கூப்பிட்டு என்னிக்காவது பேசியிருக்கீங்களா..? என் படத்தை வாங்கினீங்களே.. லாபம் வந்துச்சா? என்ன கலெக்ஷன் ஆச்சுன்னு என்னிக்காவது கேட்டிருக்கீங்களா…?

படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்.. சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாடுறீங்க… தயாரிப்பாளர் செலவுல. டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி போடுறேன்னு சொல்றீங்க. இன்னொரு நடிகர் டைரக்டருக்கு கார் வாங்கித் தர்றாரு.

தமிழ்நாட்டுல இருக்குற 900 தியேட்டர்ல.. இல்ல.. இருக்குற விநியோகஸ்தர்கள்கிட்ட கேளுங்க… இல்ல உங்க படத்தை ரிலீஸ் செய்யும் 600 தியேட்டர்களின் உண்மையான வசூல் என்னன்னு கேளுங்க.

உண்மையான வசூல் நிலவரம் அந்த நடிகர்களுக்கு தெரியுமா. நிஜமாவே முன்னணி நடிகர்கள் என்று சொல்லும் இவர்களின் நிஜ வசூல் நிலவரம் தெரிஞ்சாதான் படம் எடுக்கிற எல்லார் கஷ்டமும் அவர்களுக்கு தெரியும். அப்பத்தான் நாமா வாங்குற சம்பளம் நியாயம்தானா, விக்கிற விலை சரிதானான்னு தெரியும்.

எனக்கு தெரிஞ்சவரை இனி எல்லா நடிகர்களும் அவங்கவங்க படத்தை நீங்களே வெளியிட்டுக்குங்க. அப்போ உங்களுக்குண்டான உண்மையான வசூல் நிலவரத்தை தெரிஞ்சுக்குவீங்க.

நடிகர்கள் நேரடியாக சொந்த செலவில் படத்தை ரிலீஸ் செய்து அவர்களின் மார்க்கெட் நிலவரத்தை தெரிஞ்சிக்கட்டும்.

என் படம் ரிலீஸ் ஆகும்போது 100 ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்க கூடாதுன்னு ஒரு அறிக்கைவிட முடியுமா..? படம் வரும்போது 500, ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கும்போது கை தட்டி ரசிக்கிறீங்க ஏன்..? டிக்கெட் விலையை ஒரே மாதிரி வைக்க என்னிக்காவது நடிகர்கள் முயற்சி எடுத்திருக்கீங்களா…?

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என 3 பிரிவினர்தான் சினிமாவில் பணம் போடுகிறவர்கள். அவர்களை அழைத்து என்னிக்காவது இந்த நடிகர்கள் பேசியிருக்கிறீர்களா…?

பணம் கொடுத்து வாங்கும் நிலையில் இப்போது எந்த விநியோகஸ்தர்களும் இல்லை. காரணம், கடைசி கோவணம்வரை உருவிவிட்டார்களே… இனி எப்படி நாங்கள் பணம் கொடுத்து படம் வாங்குவது என்று விநியோகஸ்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

இனியும் பொய்யான வெற்றி தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம். உண்மையான நிலையை தெரிந்து கொண்டு தொழில் செய்தால் எல்லாருக்குமே நன்மையாக இருக்கும்…” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம்.