நேற்று மாலை ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% மதிப்பெண் மட்டுமே பெற்றேன். எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து கல்லூரி வரும்போது ஆங்கிலம் அவசியம் என்றார்.
அதே நேரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறைசூடன், “நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலைவணங்கியதில்லை. அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை பிற மொழிகள் தமிழர்களை வாழவைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆளவைக்கும்” என்றார்.
அடுத்து பேசிய சினேகன், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகணம் கொள்வோம் என்றவர் இப்படி
தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்றார்.
எம்ஜிஆர் கல்லூரியில் ரஜினி அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் அதே நேரத்தில் ‘எழுவாய் தமிழா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை அவர்கள், “வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கிலகலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் தனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் தனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள் என்றவர், தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல.
தமிழை நேசிப்பதால் தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.
எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம் என்றார். மேலும் நானும் ஒரு தமிழ் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்” என்றார்.
விழாவில் பேசிய ஒரிசா பாலு, “இந்தியாவை தவித்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது . எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது நாம்தான் மறந்து விட்டோம் என்றார்” ஆதங்கமாக.
தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.
“தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு” என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.