டோவினோ தாமஸ், கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பாசில் ஜோசப், ஹரிஷ் உத்தமன், மதுபால், ரோகினி, பார்வதி, கபீர் டி நடித்துள்ளனர்.ஜித்தின் லால் இயக்கி உள்ளார்.
மூன்று தலைமுறைக் கதையாக உருவாகி உள்ளது. கதை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்ததை ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது.
தாத்தா ஒரு திருடன் .அந்தத் திருட்டுப்பழி மூன்றாவது தலைமுறையான பேரன் அஜயனைப் பாதிக்கிறது.செய்யாத குற்றத்திற்கும் பழி வந்து செல்கிறது.இப்படிப்பட்ட நிலையில் அந்தக்கிராமத்தின் மதிப்புக்குரிய தலைவர் நம்பியாரின் மகள் லட்சுமியை பேரன் அஜயன் காதலிக்கிறான்.காதலுக்குப் பெருந்தடைகள்.அந்த ஊரின் மானத்தை காப்பாற்றுவதற்காக அவன் வீரதீர செயலில் இறங்குகிறான்.முடிவு என்ன என்பதுதான் ‘ஏ ஆர் எம் ‘படத்தின் கதை.
சுருக்கமாக, ARM .தலைப்பின் பொருள் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ அதாவது அஐயனின் இரண்டாவது திருட்டு என்பது.முதல் திருட்டு பொருள் திரட்டு, இரண்டாவது திருட்டு ஊர்த் தலைவரின் மகளின் இதயத்தைத் திருடியதைக் குறிப்பிடுவதாகும்.ஆகாயத்திலிருந்து பூமியில் விழுகிற எரிகல் ஒன்று, சியோதி என்கிற பொக்கிஷ விளக்காக மாறுகிறது. விலைமதிப்பற்ற அந்தப் பொருள் ஒரே பரம்பரையைச் சேர்ந்த மூன்று நபர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதே ARM (அஜயண்டே ரண்டாம் மோஷனம்) என்றும் கூறலாம்.
ஒரு திருடனைக் கதை நாயகனாக வைத்து இப்படி ஒரு மூன்று தலைமுறைக் கதையாக இணைத்து உருவாக்க முனைந்த அந்த துணிச்சலுக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.டோவினோ தாமஸ் தொடர்ந்து வசீகரிக்கும் பாத்திரத் தேர்வுகளை செய்கிறார், மேலும் ARM அவரது 50வது படம்.மூன்று தலைமுறையில் நடக்கும் கதையில் மூன்று பாத்திரங்களை ஏற்று தனித்தனியாக நம்மை உணர வைக்கிறார். மூன்று கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டை முகபாவனையில் மட்டுமின்றி, உடல் மொழியிலும் வெளிப்படுத்தி .தனித்துவம் காட்டியுள்ளார்.
மூன்று டொவினோ, மூன்று நாயகிகள் என ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்கள். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பெரிதாக வேலையில்லை. சுரபி லக்ஷ்மி மணியனின் மனைவியாக, குறைந்த அளவிலான காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். கணவன் மீது திருப்படுப்பட்டம் சுமத்தி, காவலர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சி, அருவியில் கணவன் விழும்போது வெளிப்படுத்தும் அலறல் என உதாரணங்கள்.கிருத்தி ஷெட்டியின் பாத்திர அமைப்பும் தோற்றமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பார்ப்போர் மனதில் இடம் பிடிக்கிறது.
வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன், பொற்கொல்லனாக வரும் ஜெகதீஷ், நாயகனின் தாயாக வரும் ரோகினி, நண்பனாக வரும் பாசில் ஜோசப் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மதிப்பு சேர்க்கிறார்கள்.ஜோசப் தனது பாத்திரத்தில் நகைச்சுவை ரசம் காட்டுகிறார். இப்படித் துணை நடிகர்கள் கதைக்கு பக்கபலமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஜித்தின் லால் தனது அறிமுகத்திற்கான கதையை வித்தியாசமான திசையில் தேர்ந்தெடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
திரைக்கதையில் மேலும் நேர்த்தி காட்டி இருக்கலாம்.யூகிக்க முடிகிற காட்சிகளாக இருப்பது ஒரு சிறு பின்னடைவு.
மூன்று வெவ்வேறு காலகட்டத்தை மிகச் சிறப்பாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறார் கலை இயக்குநர் கோகுல் தாஸ்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி நம்மை முழுதாக உட்கவர்ந்து கேரளத்தின் கலாச்சாரங்களுக்குள் நம்மை இறக்கி வைக்கிறது. முதல் பாதி முன் கதையில் எரிகல் நட்சத்திரம் அதில் இருந்து எடுக்கப்பட்ட மூலப்பொருள் கொண்டு உருவாக்கப்படும் தெய்வ விளக்கு, அரசரின் நம்பிக்கைத் துரோகம் என்று காட்சிகள் வருகின்றன.இரண்டாம் பாதியில் கேரளத்துக் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கதகளி, கோவில் திருவிழாக்கள் களரி சண்டை போன்றவை வருகின்றன.அவை திரைப்பட ஊடகத்தில் காட்சி அனுபவத்தைத் தருபவை.
ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் ஜோமோன் டி ஜான் சில காட்சிகளைக் கவரும் தருணங்களை வழங்கி இருக்கிறார். திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் கூடுதலாக கவர,பின்னணி இசையும் அபாரம்.ஷமீர் முகமதுவின் எடிட்டிங் படத்தின் வேகத்தை மேம்படுத்த முயன்றுள்ளது.
.வழக்கமான ஃபார்முலா சினிமா கதைகளில் இருந்து மாறுபட்டுத் தெரியும் இந்தக் கதை அதன் கூறு முறையாலும் மாறுபட்டுள்ளது.கதாபாத்திரத்தையும் அதன் உணர்வுகளையும் மட்டும் பின் தொடர்ந்து செல்கிற திரைக்கதை பார்ப்பவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.