காதல் படத்தின் மூலம் பிரபலமான பரத் நடித்துள்ள அவரது ஐம்பதாவது படம் லவ். இது ஒரு காதல் கதையாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. வெறுப்பு, கசப்பு, விரக்தி,துரோகம் என்று பல்வேறு எதிர்மறையான பகைமை உணர்ச்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் உள்ளது .லவ் என்பதற்குப் பதிலாக கிரைம் என்று வேண்டுமானால் பெயர் வைத்திருக்கலாம்.
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ்.
இந்தப் படத்தில் பரத் வாணி போஜன், விவேக் பிரசன்னா படேனியல் ஆனி போப், ராதாரவி, ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார்.
இது மலையாளத்தில் வெளியான படத்தின் ரீமேக் தான்.
பரத்துக்கும் வாணி போஜனுக்கும் திருமணம் நடக்கிறது.வாணி போஜன் ராதாரவியின் ஒரே செல்ல மகள். வியாபாரத்தில் இழப்புகளைச் சந்தித்த பரத் விரக்தியில் இருக்கிறார் குடிக்கு அடிமையாகிறார்.
தம்பதிகளான பரத் – வாணிபோஜன் இடையே ஒரு நிகழ்வில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகிறது. இதில் பரத்தால் தாக்கப்பட்ட வாணிபோஜன் கொல்லப்படுகிறார். அவரது உடல் பாத்ரூமில் மறைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பரத்தும் தற்கொலைக்கு முயல்கிறார்.
அப்போது நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். அனைவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை.அடுத்த சிறிது நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் டேனியும் வருகிறார். நடுவே வாணிபோஜனின் அப்பா ராதாரவியும் வந்து செல்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது.உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் வாணி போஜனும் உயிருடன் வந்து நிற்கிறார். இது என்ன கலாட்டா என்று நினைத்தால் பரபரப்பான திருப்பங்கள் என்று நினைத்துக் கொண்டு யூகிக்க முடிகிற சம்பவங்களையும் காட்சிகளையும் கொண்டு படத்தை முடிக்கிறார்கள்.
பரத் உடல் எடை கூட்டி, தோற்றத்தில் கவர்கிறார். அவர் தனக்கான நடிப்புத் தருணங்களை சரிவரப் பயன்படுத்தவில்லை.
இவரும் வாணிபோஜனும் அசல் கணவன் – மனைவி போலஉணர வைத்து சண்டை போடுகிறார்கள்.வாணி போஜனின் தோற்றமும் நடிப்பும் நல்ல முன்னேற்றம்.
ஒரு காட்சியில் வந்தாலும் பாசமிகு தந்தையாக ராதாரவியின் பாத்திரம் முத்திரை.
விவேக் பிரசன்னா, டேனி இருவரும் கொடுத்த வேலையை முடிந்தளவு செய்துள்ளார்கள்.
படத்தின் மையக்கரு ஒரு பிரச்சினையை பற்றி பேசுகிறது. தம்பதியினர் இடையே நிலவும் ஈகோ ,அதன் மூலம் ஏழும் பிரச்சினைகளைச் சிறப்பாக படம் ஆக்கி உள்ளார்கள்.
குடும்பத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடங்கி, வீட்டுக்கு வீடு பிரச்சினை எப்படி நிறம் மாறுகிறது மாறுகிறது என சொன்ன விதம் பரவாயில்லை.
குறிப்பிட்ட அளவிலான லொகேஷன்கள் படத்தின் சிக்கனத்தைக் காட்டுகிறது. இருந்தாலும்
குறைந்த அளவு நடிப்புக் கலைஞர்களை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தை பார்க்க வைத்த விதத்தில் ஒளிப்பதிவாளர் பி. ஜி .முத்தையாவின் பங்கு பெரியது.
படத்தின் பல போதாமைகளை ஒளிப்பதிவு நிரப்புகிறது.
திரைக்கதையில் நல்லவிதமான போக்குக்கும் திருப்பங்களுக்கும் வாய்ப்பு இருந்தால் அதைச் சரியாக செய்யாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.