ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சதீதா ராய், மாயா ஸ்ரீ நடித்துள்ளனர். சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.தயாரிப்பு நீலம் புரொடக்ஷன்ஸ்.
இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.தொலைந்து போன தாயைத் தேடும் மகன்களின் பாசப் போராட்டம் தான் இந்தப் படம்.
கதைப்படி ஊர்வசிக்கு 5 பிள்ளைகள். இரண்டு மகள்கள் ,மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.முதுமையின் விளைவாக அவருக்கு ஞாபகமறதி ஏற்படுகிறது.
அதனால் மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, ஆள் தெரியாமல் பேசி பிரச்சனைக்கு உள்ளாவது என்று ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதன் மூலம் அவர் பெற்ற பிள்ளைகள் அசௌகரியத்திற்கும் சங்கடத்திற்கும் பிரச்சினைக்கும் உள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் பிள்ளைகள் பாசத்தின் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது வெளியேறி விடுகிறார்.கிளம்பிச் சென்றவர் கொல்கத்தாவில் இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. மகன்கள் மாறன் மற்றும் தினேஷ் இருவரையும் ஊர்வசியைப் பார்த்து அழைத்து வருமாறு போலீசார் அனுப்புகின்றனர்.ஆனால் அந்த அண்ணன் தம்பிகளுக்குள் பேச்சு வார்த்தை இல்லை.மனதால் விலகி இருக்கும் அவர்கள் இருவரும் எப்படி மொழி தெரியாத ஊருக்குச் சென்று தனது தாயை அழைத்து வந்தார்களா? பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார்களா? அவர் மீண்டும் பத்திரமாக இவர்களுடன் சேர்ந்தாரா? என்பதே கதை.இந்தக் கதையை நெகிழ்ச்சியூட்டும் வகையில் கூறி இருக்கிறார் இயக்குநர் சுரேஷ் மாரி .
பேபியாக ஊர்வசி நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் பிரதான அம்சமாக ஒவ்வொன்றிருக்கும். கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ,நடிப்பு,காட்சி அமைப்புகள் இப்படி ஒன்று இருக்கும் .முழுக்க முழுக்க நடிப்பவர்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் படமாக குறிப்பாக ஊர்வசியின் நடிப்பாற்றலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அவரும் அந்த நம்பிக்கையைப் பொய்க்க விடாமல் ஸ்கோர் செய்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்.
ஞாபக மறதியால் அவர் செய்யும் லூட்டிகள் ஜாலிப் பட்டாசுகள் என்றால், தினேசிடம் அழுதுகொண்டே தனது இயலாமையை வெளிப்படுத்துவது ,இரவு ரோந்து போலீசிடம் நான் ஸ்டாலின் பிரண்ட் என சொல்வது என ஒவ்வொரு வகை நடிப்புக்கும் காட்சிகள் உள்ளன.
சங்கராக தினேஷ், செந்தில் ஆக மாறன், சக்தியாக சேகர் நாராயணன், செல்வியாக மெலடி டார்கஸ் ,ரமணியாக தாட்சாயிணி சங்கரின் மனைவியாக இஸ்மத் பானு, செந்திலின் மனைவியாக சபீதா ராய், சக்தியின் மனைவியாக மாயாஸ்ரீ என அனைவருமே மனதில் பதிகிறார்கள்.
தினேஷ் படம் முழுவதும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
அண்ணன் தம்பிகளுக்குள் மூத்தவன் இளையவன் என்கிற ஆணவச் சிக்கல் எழுவதைப் படத்தில் காட்டி உள்ளார் இயக்குநர்.அண்ணன் தம்பிகளாக மாறன், தினேஷ் என இரு நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் தினேஷ் மற்றும் மாறனுக்கு உதவி செய்யும் ராணுவ வீரராக நடித்துள்ளவர் உண்மையில் அம்மாவை தேடிச் சென்ற சகோதரர்களுக்கு உதவியவர் என்பதை இயக்குநர் கடைசியில் சொல்கிறார்.இது போனஸ் சுவாரஸ்யம். முதுமையிலும் மீண்டும் குழந்தை பருவம் வருவது போல் வயதானவர்களின் நடத்தை இருக்கும் என்பதைப் படத்தில் கூறியுள்ளார் இயக்குநர்.எந்திர யுகத்தில் நாம் தொலைத்துவிட்ட, மறந்து விட்ட, தவிர்த்துவிட்ட பல உணர்வுகளைப் படத்தில் காட்டி உள்ளார் இயக்குநர்.
பெற்ற மனத்தின் பாசத்தவிப்பையும் பிள்ளைகளின் சொல்ல முடியாத பரிதவிப்பையும் சொல்கிறது இந்தப் படம். படத்தைப் பார்த்து விட்டு கண்ணில் படும் மனிதர்களிடம், தனியாகத் தெரியும் வயதானவர்களிடம் ஜெ பேபியைக் காண்கிறது மனம்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்று.ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவின் தெருக்களை அப்படியே திரையில் காட்டியுள்ளது.
ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்து அழகான திரைக்கதையாக்கி திரையில் பார்ப்பவர்களை நெகிழ்வூட்டிக் கண்கலங்கும் வகையில் இந்தப் படத்தை வழங்கியுள்ள இயக்குநரை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டலாம்.