நட்சத்திரச் சமையல் கலைஞரான அனுஷ்கா தனது தாயுடன் லண்டனில் வசித்து வருகிறார். தன் தாயைக் காதல் திருமணம் செய்த தந்தை பிரிந்து விட்டதால் தனது அம்மாவுக்கு நேர்ந்த வாழ்க்கை குறித்து அனுஷ்காவிற்கு வருத்தம் இருக்கிறது .அது ஆண்கள் மீதான வெறுப்பாகவும் திருமண வாழ்க்கை மீதான ஒவ்வாமையாகவும் மாறி விட்டது.
உடல் நலிவுற்ற நிலையில் தனது இறுதி நாட்களை இந்தியாவில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறார் அம்மா. தாயும் மகளும் இந்தியா வருகிறார்கள். கடைசித் தருணத்தில் ‘இதுவரை எனக்குத் துணையாக நீ இருந்தாய். இனிமேல் உனக்கென ஒரு துணையைத் தேடிப் போ’ எனச் சொல்லிவிட்டு உயிர் விடுகிறார்.ஏற்கெனவே காதல், திருமணம், வாழ்க்கை குறித்த அவநம்பிக்கை கொண்ட அனுஷ்கா திருமணம் செய்யாமலேயே குழந்தைப் பெற்றுக் கொள்ள எண்ணு கிறார். அதன்படி உயிரணு தானம் பெற நல்ல டோனரைத் தேடுகிறார்.ஸ்டாண்டப் காமெடியன் நவீன் அறிமுகமாகிறார். முதலிலேயே உண்மையைச் சொல்லாமல் பழகும் அனுஷ்கா மீது நவீன் காதல் கொள்கிறார். பிறகுதான் அனுஷ்காவின் நோக்கமும் எதிர்பார்ப்பும் தெரிய வருகிறது. அதன்பின் அந்தக் காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.
படத்தில் அன்விதா ரவாலி ஷெட்டியாக அனுஷ்கா ஷெட்டியும் சித்து பாலி ஷெட்டியாக நவீன் பாலி ஷெட்டியும் நடித்துள்ளனர். பாத்திரங்களின் பெயரில் மட்டுமல்ல அவற்றின் தன்மையிலும் பொருத்தம் நன்று.
சற்றே இடைவெளிக்கு பின் வந்துள்ள அனுஷ்காவிற்கு இந்தக் கதைக் தளம் புதியது தான் அதன் தேர்வே பாராட்டத்தக்கதாக உள்ளது.மீண்டும் அவரைப் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.அதன்படி அவரும் பெரிதாகக் குறை இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நவீன் பொலிஷெட்டி படம் முழுக்க தனது துறு துறு உடல் மொழியால் ஆற்றலின் மையமாக விளங்குகிறார்.வீட்டில் பயந்த சுபாவி ,வெளியில் கலகலப்பு இளைஞன் .ஸ்டேண்ட் அப் காமெடி வழியாகவும் கலக்கி நல்லதொரு ஸ்கோர் செய்கிறார்.நம்பிக்கையூட்டும் நடிப்பு வெளிப்பாடுகள்.
ஒரு வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார் அறிமுக இயக்குநர் மகேஷ் பாபு.
மாறுபட்ட கதைக் கருவை எடுத்துக் கொண்டு சற்றுப் பிசகினால் தடம்மாறிப் போகும் கம்பி மேல் நடக்கும் அதன் ஆபத்தை உணர்ந்து சுவாரஸ்யம் குறையாமலும் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இவருக்குப் பக்கபலமாகத் திறமையான நடிகர்களையும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் போன்ற அனுபவமிக்கவர்களை அழகாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.படத்தின் பெயரை அழகாகத் தமிழில் வைத்திருக்கலாம். படத்தின் தலைப்பு தான் கொஞ்சம் அந்நியமாக ஒட்டாமல் உள்ளது. மற்றபடி தெலுங்கில் இருந்து மொழி மாற்றப்பட்டது தெரியாத அளவிற்குத் தமிழில் தர உழைத்து உள்ளார்கள்.
கதாநாயகன் நாயகிக்குக் குரல் தேர்வு சரியானது.அது மட்டுமில்லாமல் நாசர், துளசி எனத் தமிழ் நடிகர், நடிகைக்கு அவர்களே குரல் கொடுத்திருப்பதும் ‘இது ஒரு தமிழ்ப்படம்’ என்ற உணர்வைக் தருகிறது.இசையமைப்பாளர் ரதனும் தமிழர் என்பதால், பாடல்களிலும் அந்நியத்தன்மை இல்லை.
மொத்தத்தில் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ நல்லதொரு உணர்வைச் சொன்ன படம் என்று நம்பிக்கையைத் தருகிறது.