‘Mrs & Mr’ (மிஸஸ் அண்ட் மிஸ்டர்) திரைப்பட விமர்சனம்

வனிதா விஜயகுமார், ராபர்ட்,  செப் தாமு, கிரண், மாஸ்டர் கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன், ,அனுமோகன் வாசுகி, ஸ்வேதா பாரதி, சௌமியா ஜெயராம், சார்மிளா, காயத்ரி ரெமோ, நாஞ்சில் விஜயன், பாலசுப்பிரமணி, மகேந்திர குமார், கும்தாஜ், தங்கம் , ஓட்டேரி சிவா, மாஸ்டர் ஹிருத்திக் பாரதி, மாஸ்டர் ஸ்ரீனிக்  நடித்துள்ளனர்.
கதை எழுதி வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிதா தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்..  ஒளிப்பதிவு ராஜபாண்டி ,எடிட்டிங் பாலகுரு.

வனிதா – ராபர்ட் ஜோடி தாய்லாந்தில் பாங்க்காக்கில் வசிக்கிறார்கள். வனிதாவுக்கு வயது 40 ஐத் தொட்டுவிட்டது.தனது உருவத்தில் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுவது பற்றி மிகவும் கவலைப்படுகிறார். ‘கோடையில் ஓர் நாள் மழை வரலாம், இந்தக் கோலத்தில் இனிமேல் எழில் வருமா?’ என்ற கவலையில் தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்.அவருக்குக் குழந்தைகள் இல்லை.குழந்தை மீது ஆசை வருகிறது. எதிர்காலத்தில் தனக்குத் துணையாக குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு விவாதங்கள், மனத்தடைகளைக் கடந்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். ஆனால் கணவர் ராபர்ட் அதற்கு எதிராக இருக்கிறார். குழந்தை வேண்டாம் என்கிறார் .இந்த நிலையில் வனிதாவும் பிடிவாதமாக இருக்கிறார் .கணவருடன் சிருங்கார சங்கீதம் பாடி குழந்தைக்கு ஏற்பாடு செய்கிறார்.அவருக்குக் குழந்தை உருவாகிறது. ஆனால் அது முறையாக நலமாக பிரசவம் ஆவதற்குள் சிக்கலாகி தாயைக் காப்பாற்றுவதற்கு டி அண்ட் சிசெய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது .தனது குழந்தைக் கனவு இப்படி ஆனதில் வனிதா மிகவும் மனம் உடைகிறார். இன்னொரு குழந்தை மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள் அதையும் மீறி பின்னர் குழந்தை உருவாகிறது.

இரண்டாவது குழந்தை உருவானதை ராபர்ட்டுக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள்.உடல்நிலை பலவீன ஆபத்தான சூழ்நிலையில் அந்தக் குழந்தை நன்றாகப் பிரசவம் ஆனதா அதை ராபர்ட் எப்படி எடுத்துக் கொண்டார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்தில் வனிதா விஜயகுமார் தனக்கு நாற்பது வயது ஆகிவிட்டது என்று அவர் உணர்வுகளைச் சொல்வது அந்த நேரத்து பெண்களின் உணர்வுகளைக் காட்டுவதாக உள்ளது. இந்த படமே பெண்ணியல் நோக்கில் உருவாகியிருக்கிறது.

கதை சொல்லும் பாதையும் காட்சிகளும் பெண் மைய நோக்கில் உள்ளது. எனவே வருகிற பெண் பாத்திரங்கள் எல்லாம் ஆண்களை மட்டம் தட்டுகிறார்கள். ஷகிலா,கும்தாஜ் , பாத்திமா பாபு போன்ற ஓய்வு பெற்ற நடிகைகளை எல்லாம் அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வனிதா. அவர்கள் அடிக்கும் லூட்டிகள் ஓவராக உள்ளன.கிரணும் ஒரு பாடல் பாட்டில் வருகிறார்

காலம் கடந்து குழந்தைப் பேறு அடையும் பெண்ணின் கதையாக இதை எடுத்திருக்கலாம் அல்லது
அடல்ஸ் ஒன்லி படமாக எடுத்திருக்கலாம்.இரண்டையும் கலந்து குழப்பி இருக்கிறார் வனிதா.

பாத்திரங்கள் நிறைய பேசிக் கொண்டிருக்கின்றன. வனிதா விஜயகுமார் வயது மீறி கவர்ச்சி காட்டுகிறார். அது எடுபடவில்லை.
40 வயது பெண்களுக்கான பிரச்சினைகளை உணர்வு பூர்வமாகச் சொல்லி இருக்கலாம் .ஆனால் சொல்லும் விதத்தில் கோட்டை விட்டுள்ளார் வனிதா.
ராபர்ட் தன்னால் முடிந்த அளவிற்கு அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஷகிலா வரும் காட்சிகள் எரிச்சல் ஊட்டுகின்றன. அவர் ஏன் தான் தெலுங்கு பேசுகிறாரோ தெரியவில்லை.
பெரும்பாலான காட்சிகள் பாங்காக்கில் நடக்கின்றன.சித்தூரில் சில காட்சிகள் நடக்கின்றன. அந்தக் காட்சிகளில் ஸ்ரீமன் வருகிறார்.
படத்தில் ஒரே ஆறுதல் வெளிநாட்டுச் சூழல் கண்களுக்குக் குளிர்ச்சியாகும் பின்னணிகொண்டதாக உள்ளது. எனவேதான் சொல்கிறோம்.
ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.யாரோ ஒருவர் மேற்பார்வை செய்து சில குறைகளைச் சரி செய்திருந்தால் இந்தப் படம் பார்க்கும்படி அமைந்திருக்கும்.

40 வயதில் கதை நாயகியாக நடித்து கவர்ச்சி காட்டி இயக்கி தயாரித்துள்ள வனிதாவின் துணிச்சல் பாராட்டத்தக்கது.