பெற்றோர்கள் இல்லாமல் சமுதாயத்தில் ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்ட மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோரைத் தன் வீட்டில் வைத்து சிறுவயதிலிருந்தே தனது பிள்ளைகளைப் போல் வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்கள் சென்னை காசிமேடு பகுதியில் மீனவக் குப்பத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தனது நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மது, புகை என்று இருக்கிறார்.
அப்பகுதியில் இருக்கும் ‘N4’ காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அனுபமா குமார்.
அந்த மீனவர்களின் கடற்கரைப் பகுதியில் மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.அது அந்த ஏழைக் குடும்பத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.தவறு செய்யாமலேயேயே குற்றவளையத்துக்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள்.அதன் பின்னணியில் இருப்பது யார்? துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்?போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே ’என் 4’ படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அந்த மீனவப் பகுதி மக்களாகவே மாறி இருக்கிறார்கள்.நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வுகள்.
அவர்களில் மைக்கேல், கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோர் கூடுதல் கவனம் பெற்று மனதில் பதிகிறார்கள்.
அக்ஷய் கமல் – பிரக்யா நக்ரா இணை, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு, அபிஷேக் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையைச் சரியாகச் செய்து மனதில் நிற்கிறார்கள்.இத்தனை பேர் வந்தாலும் அவரவர் பாத்திரம் பார்ப்பவர் மனதில் அமரும்படி பாத்திரச் சித்தரிப்பைச் சரியாகச் செய்துள்ளார் இயக்குநர்.
முழுக்க முழுக்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் கதையாக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் திவ்யங் பாராட்டுக்குரியவர்.குறிப்பாக பட ஆரம்பத்தில் ஒலிக்கும் ஏலேலோ பாடலும் வரிகளும் காட்சிகளும் நம்மைப் படத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.
பாடல் இசை, பின்னனி இசை என்று கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியம்.ஜி.
காசிமேடு மீன் பிடி துறைமுகம் என்று நெய்தல் நிலப் பகுதியைக் காட்சிகள் ஆக்கி அதன் பின்னணியில் ஒரு திரில்லர் கதையை விவரித்து படமாக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் குமார். அப்பகுதி மக்கள் வாழ்வியல் என்று அவர் சொன்னதெல்லாம் ஓகே தான்.
ஆனால் ஒரு கட்டத்தில் கதையின் பயணம் எங்கு என்று புரியாமல் திசை மாறி நிற்கிறது.மீனவர் பகுதியில் வசிக்கும் ஏழைக்குடும்பத்தின் கதையா பொறுப்பற்றுத் திரியும் இளைஞர்களின் குற்ற செயல்கள் தொடர்பான கதையா?மனசாட்சி ஊசலாட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண் போலீஸ் ஆய்வாளரின் கதையா? என்று தடுமாறி நிற்கிறது.



இந்த இடத்தில்தான் திரைக்கதையின் பலவீனத்தை உணர முடிகிறது.
பலகுறைகளைக் கடந்து ரசிப்பதற்கும் படத்தில் இடம் உள்ளது. மீனவ மக்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தியதற்கும் அந்தக் காட்சிகளில் உப்புக் காற்றின் மணத்தை நம் நாசி நுகரும் அளவிற்கு நிலக் காட்சிகளை உயரோட்டமாய் காட்டியதற்காகவும் இந்தப் படத்தை ரசிக்கலாம்.