ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே .அந்த செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் ‘ரெட் சாண்டல் உட்’. படத்தை குரு ராமானுஜம் இயக்கி உள்ளார்.JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்த ” RED SANDAL WOOD ” படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் , சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா,இசை – சாம் CS,பாடல்கள் – யுகபாரதி,சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரசுல் பூக்குட்டி
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்.
படத்தில் நாயகன் வெற்றி சென்னை வியாசர்பாடியில் வசித்துவருகிறார்.அவரது நண்பனின் அப்பாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. நண்பனைப் பார்க்க குடும்பம் பரிதவிக்கிறது. இந்நிலையில் நண்பனைத் தேடி வெற்றி ஆந்திரா செல்கிற இடத்தில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வதுடன் செம்மரக் கடத்தல் பழியும் இவர் மீது விழுகிறது. திருப்பதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார். அங்கே அவரைப் போல் பல அப்பாவித் தமிழர்கள் இப்படிச் சிக்கி அடிபடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் மூர்க்க குணம் கொண்ட காவல் அதிகாரி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக அந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள முயற்சி செய்கிறார்.இதனை அறிந்த நாயகன் வெற்றி, காவல் நிலையத்தில் இருந்து அந்த அப்பாவித் தமிழர்களுடன் தப்பிக்கிறார். இதற்குக் காரணமாக உள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் சாகச செயலில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
செம்மரத்தின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக அறிமுகம் தந்து, செம்மரக் கடத்தல் கும்பல் என்பது எப்படி பெரிய வலைப் பின்னல் அமைப்பாக அமைந்து இதில் ஈடுபடுகிறது என்பதைப் படத்தில் காட்டுகிறார்கள்.
சாதாரணமாகத் தொடங்கும் படம் திரில்லராக மாறி, காவல் துறையினரின் அத்து மீறல்கள், குற்றங்களைச் செய்பவர்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள நெருக்கம் பற்றி எல்லாம் பேசுகிறது.இரண்டாவது பாதி அடிதடி, ஆர்பாட்டமான வில்லன், துரத்தல், பரபரப்பு என்று ஒரு முழு நீள ஆக்சன் சூத்திரத்திற்கு மாறுகிறது.படத்தில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் திருப்பதி மலையின் கம்பீரம் தெரிகிறது.
நாயகன் வெற்றியின் நடிப்பில் முந்தைய படங்களை விட முன்னேற்றம் தெரிகிறது.எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு கிராம வெள்ளந்தி மனிதரை வெளிக்காட்டுகிறது. படத்தில் ஏனைய பாத்திரங்களில் நடித்தவர்கள் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி உள்ளார்கள்.கதையின் பாதையில் ஒளிப்பதிவும் இசையும் பயணம் செய்துள்ளன.நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்குப் பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் உள்ளதைப் பார்க்கும் போது வியப்பாக அதிர்ச்சியாக இருக்கிறது.
20 பேர் சுட்டுக் கொலை என்று தமிழக மக்கள் சாதாரணமாகக் கடந்து சென்ற ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு ஒரு முழு நீள விறுவிறுப்பான பரபரப்பான துயரம் நிறைந்த கதை கொண்ட திரைப்படமாக வழங்கி உள்ளார் இயக்குநர்.
சற்று பிசகி இருந்தாலும் ஆவணத் தன்மை வந்து விட வாய்ப்புள்ள கதையை ஒரு ஆக்சன் படமாக எடுத்துள்ளார் இயக்குநர்.