Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’, வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர்.
Zee Studios, தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை – நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்குத் தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.
இப்படத்தில் பிரபல முன்னணி திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்தசுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே.. மேலும் உலகம் முழுக்க பல விருதுகளை குவித்திட்ட இசைப்புயல் பத்மஶ்ரீ ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குநர் கிஷோர் P பெலேகர் கூறுகையில்…
மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதைசொல்லலின் ஒரு வடிவம் என்றார். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட என்றார்.
Zee Studios ன் CBO, ஷாரிக் படேல் கூறுகையில்,
இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது.