கஜேஷ் நாகேஷ் ( சந்துரு ), ரித்விகா ஸ்ரேயா ( சர்மி ), மொட்டை ராஜேந்திரன்( மூணு பொண்டாட்டி முனுசாமி), அஸ்மிதா, ஹேமா, சின்னாளம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா,தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் ( டபுள் டாக்குமெண்ட் தர்மராஜ் ) நடித்துள்ளனர்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம். ஒளிப்பதிவு – யுவராஜ் பால்ராஜ், பாடல் இசை – அருணகிரி,பின்னணி இசை – கார்த்திக் கிருஷ்ணன்,பாடல்கள் – பெப்சி தாஸ், பாஸ்கர்.எடிட்டிங் – திருச்செல்வம்,
நடனம் – தினா,தயாரிப்பு – ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில் பத்ம ராஜு ஜெய்சங்கர்.
நாயகன் கஜேஷ் நாகேஷை நாயகி ரித்விகா காதலிக்கிறார். கஜேஷ் மதுவின் பிடியில் விழுந்து பொறுப்பில்லாமல் திரிகிறார். காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் மது குடித்தவருக்கு மற்ற புலன்களும் இயங்காமல் போய்விடும்.தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், நாயகன் மாதுவை விட மது மீதே அளவு மீறிய காதல் கொண்டு மயக்கத்திலேயே இருக்கிறார்.காதல் அனைத்தையும் மாற்றும் என்பார்கள். ஆனால் அவரை மதுவிலிருந்து மீட்க முடியவில்லை. போராடிப் பார்க்கிறார் நாயகி. காதலரைத் திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். அது படம் பார்ப்பவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். மதுவின் கொடுமையை சமூக அக்கறையோடு சொல்ல முயன்று நகைச்சுவை கலந்ததனால் தீவிரத்தை இழந்து ஒரு வழியாக முடிகிறது ‘உருட்டு உருட்டு’ படம்.
நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறர். அழகிய இளம் பெண் அருகில் இருந்தாலும், அவரை காதலிக்காமல் மதுவைக் காதலிப்பவராக நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான வணிகப்பட கதாநாயகியாக ஆடல்,பாடல் என்று வலம் வருகிறார். படத்தில் இறுதியில் திடீரென்று சாது மிரண்டால் காடு கொள்ளாது கதையாக அவர் செய்யும் செயல், அதிர்ச்சி ரகம்.
நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பு மொட்டை ராஜேந்திரனுக்குத் தான் பொருந்துகிறது. மூன்று மனைவிகளை அவர் உருட்டு உருட்டு என உருட்டுகிறார்அவரது மூன்று பொண்டாட்டிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி ஆகியோர், எந்தவித பாகுபாடும் இன்றி மொட்டை ராஜேந்திரனையும், பார்வையாளர்களையும் கிளுகிளுப்பு கலகலப்பு என்று குஷிப்படுத்துகிறார்கள்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், ஆரம்பத்தில் அதிரடியான வில்லனாக வந்தாலும், அதன் பிறகு அமைதியாகி மறைந்து விடுகிறார்.
சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என மற்ற வேடங்களில் டித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிற ரகம். கமர்சியல் பாணியில் பாடல்கள் ஒலிக்கின்றன. கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட சில பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டாலும்,பட்ஜெட் தடையாக இருந்தும் சலிப்படையாத வகையில் கோணங்களைக் கையாண்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், தற்போதைய சமூக சீரழிவைச் சிரிக்கும்படியான ரகத்தில் சொல்லியிருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் மூலம் குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சமூகத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் மிக முக்கியமான பிரச்சினையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, திரைக்கதையிலும் காட்சியமைப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தால் இப்படத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
சமகால சினிமாக்களைப் பார்க்காமலேயே படமெடுக்க வந்துள்ள இயக்குநரின் தைரியத்தைப்(!) பாராட்டலாம்.
நாடகத்தனமான காட்சிகள், மலிவான கதை சொல்லல் படத்தின் பலவீனங்கள். படத்தில் நல்ல கருத்து சொல்லி இருக்கும் நோக்கத்துக்காக மட்டுமே குறைகளை மறந்து இந்த பட்ஜெட் படத்திற்குக் கைதட்டலாம்.
மொத்தத்தில், ‘உருட்டு உருட்டு’ நாட்டின் சமகால அவலத்தைச் சொல்கிறது.


