சூரி என்கிற பெயர் கொண்ட விஜய் தேவரகொண்டா ஆந்திராவில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்,முன்கோபக்காரர்.மோசமான அப்பா,உதாசீனப்படுத்தப்படும் அம்மா அவர்களுக்குள் சண்டை, காணாமல் போன அண்ணன்,ஒரு கட்டத்தில் தந்தை இழப்பு என்கிற குடும்ப மன அழுத்தம் சூரிக்குள் உண்டு.ஒரு பிரச்சினையில் மேலதிகாரியிடம் கைநீட்டி விடுகிறார்.வேலையை விட்டுத் தூக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் அவருக்கு வேறு ஒரு வேலை தரப்படுகிறது.அதன்படி இலங்கை செல்ல வேண்டும் ஒரு அண்டர் கவர் ஆப்பரேஷனை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அது.இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் காணாமல் போன தனது அண்ணன் சிவாவை மீட்டு வரலாம் என்றும் வாக்கு கொடுக்கப்படுகிறது. எனவே அங்கே செல்லச் சம்மதிக்கிறார். ஆனால் அந்த ஆபரேஷன் அங்கே பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் தனது அண்ணனுக்கு எதிரானது என்கிற சவாலும் அவருக்குத் தெரிகிறது.
மிகவும் ஆபத்துகளும் சவால்களும் நிறைந்த பணி இது. அண்ணனை மீட்க அங்கே சென்றால் ஆதியில் சென்ற தமிழர்கள் அடிமைகளாக மிகக் கொடூரமாக நடத்தப்படுவதும் அவர்களைக் கொண்டு சட்ட விரோதக் கடத்தல்கள் நடைபெறுவதும் தெரிகிறது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிகிறார் . இலங்கை செல்லும் விஜய் தேவரகொண்டா, ஒரு இனத்தையே மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இந்நிலையில் விஜய் தேவர கொண்டா இலங்கை ஆபரேஷன்களை முடித்தாரா? அண்ணனை மீட்டாரா? அங்கு என்னென்ன சோதனைகளை எதிர்கொண்டார் ? என்பதைப் பற்றிய சாகசப் பயணம் தான் இந்த ‘கிங்டம்’ .
பாசம், வீரம் ,துரோகம், வஞ்சகம், சந்தேகம், வன்மம் போன்ற அனைத்தும் சேர்ந்த கலவையாக இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளது.
இயக்குநர் கௌதம் தின்னனூர் கண்களை விரியவிட்டு வியந்து பார்க்க வைக்கும் பெரிய கேன்வாஸில் இந்த ஆக்சன் ஓவியத்தை வரைந்துள்ளார்.படத்தின் முதல் பாதியில் குணச்சித்திரங்களை மிக நுணுக்கமாக உருவாக்கி சித்தரிப்பதற்கு உழைத்துள்ளது கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
ஆனால் கதாநாயக பிம்பம் விஸ்வரூபம் எடுப்பது இரண்டாம் பாதியில் தான்.ஒரு சாதாரண மனிதன் வளர்ந்து மக்களிடம் அபிமானம் பெற்று மக்கள் நம்பிக்கைக்குரியவனாக பேருரு கொள்ளும் அனுபவத்தைக் காட்சிகள் மூலம் உருவாக்கி உள்ளார்.
ஒரு நடிகராக நட்சத்திர நடிகராக இந்த படத்தின் கதாபாத்திரம் மூலம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளார் விஜய தேவர கொண்டா. தோற்றம் ,உடல் மொழி, அளவான வசனங்கள் என அவர் குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் பாத்திரத்தில் மிளிர்ந்துள்ளார்.அதை சாத்தியப்படுத்த கடும் உழைப்பைக் காட்டியிருக்கின்றார்.அவரது அண்ணன் சிவாவாக நடித்துள்ள சத்யதேவ் தன்னை பொருத்திக் காட்டி வெளிப்படுத்தியுள்ளது ,விழியசையில் இருந்து அதிரடி காட்டும் ஆக்ஷன் வரை அவரது அர்ப்பணிப்பு தெரிகிறது.கதாநாயகிக்கு இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடமும் அவர் வெளிப்பட்டுள்ள விதமும் குறைவுதான் என்றாலும் அவருக்கான இடம் வெற்றிடமல்ல.
பெரிய விழிகளில் மிரட்டும் தோற்றத்தில் வெங்கடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக வருகிறார்.
படத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான அளவிற்கு நடிப்பைப் பங்களிப்பாக வழங்கியுள்ளனர்.
படத்தில் தெரியும் பல முகங்கள் யார் என்று தெரியாவிட்டாலும் அகத்தில் பதிகின்றன
.அடிமைப்படுத்தப்பட்ட இனம் எங்கிருந்தோ ஒருவன் வந்து தங்களுக்கு உரிமை மீட்பு செய்வான் என்ற நம்பிக்கையோடு தான் வாழும். அப்படி ஒரு நம்பிக்கைக்குரியவனாக சூரி மாறும் தருணம் அதிர வைக்கிறது.சூரியும் அவன் சகோதரன் சிவாவும் உரையாடும் காட்சிகள் பேசும் வசனங்கள் நீளமாக இல்லாவிட்டாலும் அடர்த்தி நிறைந்தவை.ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் எதிர் எதிர் பாத்திரத்தின் இதயத்தில் கூர் பாய்ச்சுபவை.
படத்தின் அடுத்த இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கூறலாம்.
தொடக்க காலத்தில் வரும் ஆங்கிலேயர் காலத்துக் காட்சிகள் வரலாற்றை பார்வையாளர்கள் முன் உறைய வைக்கின்றன.அந்தப் படகு துரத்தல் காட்சி சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

அதிகார வர்க்கத்தின் சூதாட்டமும் அதில் சிக்கிக் கொள்ளும் மக்கள் கூட்டமும் என்கிற வரலாற்றுப் பிழையை பின்புலமாக வைத்துக்கொண்டு இந்தக் கதையை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
கிங்டம் ஒரு இனக்குழுவின் வரலாறாக மனதில் பதிகிறது .
ஆனால் அடிமைப்பட்டு கிடக்கும் அந்த இனத்தவரை தமிழர் என்று காட்டப்படும் அவர்களை அரக்கர் குலம் என்பது போல் காட்டியுள்ளது குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
மற்றபடி திரை உருவாக்கத்தில் மிரள வைக்கும் ஒரு முயற்சி தான் இந்த ‘கிங்டம்’ எனலாம்.


