‘குபேரா ‘திரைப்பட விமர்சனம்

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா , சுனைனா, ஹரிஷ் பெராடி, சாயாஜி ஷிண்டே ,கே. பாக்யராஜ்,நாசர் ,பக்ஸ் பகவதி பெருமாள்,ஜிம் ஷர்ப் நடித்துள்ளனர் .ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இசை தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு தோட்டா தரணி ,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் , சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் ஸ்ரீ,தமிழ் வசனம் அகோரம் பன்னீர்செல்வம், தமிழ்நாடு திரையரங்க வெளியீடு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.

இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு வளத்துக்கான ஒப்பந்தத்தை  அதிகார வர்க்கத்தைக் கைக்குள் போட்டுக்  கைப்பற்றி நீரஜ் மித்ரா என்கிற பெரிய பணக்காரர் மாபெரும் பணக்காரராக நினைக்கிறார்.அதைப் பெறுவதற்காக லட்சம் கோடி கைமாற வேண்டியுள்ளது.இதைச் செய்வதற்கு சிறையில் உள்ள சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவின் உதவி நாடுகிறார் .நாகார்ஜுனாவோ நியாயமான அதிகாரியாக இருந்தவர். அநியாயத்துக்கு துணை போகாததால் சிலரது சதியால் சிறை சென்றவர். எனவே முதலில் மறுக்கிறார். நியாயம் கிடைக்கும் தான் வெளியே வருவோம் என்று நினைக்கிறார். ஆனால் அது நிகழாமல் பொய்த்துப் போகவே இந்த சட்ட விரோத செயலுக்குச் சம்மதிக்கிறார். இந்த சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்காக நான்கு பிச்சைக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பினாமி ஆக்கி தொழில் நிறுவனங்கள் தொடங்கி பணப்பரிமாற்றம் செய்கிறார். . அதில் ஒருவர் தான் தேவா என்கிற தனுஷ்.தங்கள் வேலை முடிந்து பிறகு சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்கிறார்கள்.பிச்சைக்காரர்கள் நான்கு பேரில் ஒருவரான தனுஷ் தப்பித்து வெளியேறி விடுகிறார். இதனால் அவர்களது சதித்திட்டம் தடை படுகிறது. தனுஷைத் தேடி பிடிக்க வேண்டும் என்று நாகார்ஜுனாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தன்னைத் தவறாகப் பயன்படுத்தியதை அறிந்து கொள்கிறார் தனுஷ்.அவர் உயிரோடு கிடைத்தால் தான் பணப்பரிவர்த்தனை நடக்கும் என்று பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தனுஷைத் தேடுகிறார்கள் .அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்.அப்படியான ஒரு ஓட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் சமீரா என்கிற பெயர் கொண்ட ராஷ்மிகாவைச் சந்திக்கிறார் .அவரோ தனது காதலனுக்காக வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கிறார். ராஷ்மிகாவின் அலைபேசியில் தனுஷ் பேசியதால் ராஷ்மிகாவும் சிக்கலுக்கு உள்ளாகிறார்.அவரும் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார். தன்னைக் கருவியாகப் பயன்படுத்தி தன்னை இழிவு படுத்துவதை நாகார்ஜுனா அறிந்து வருத்தப்படுகிறார்.அவரது மனம் பண முதலைகளுக்கு எதிராக மாறுகிறது. அவர்கள்
தப்பித்தார்களா? தனுஷ் பெயரில் இருந்த பணம் தனுஷ் கைக்கு கிடைத்ததா? மனம் மாறிய நாகார்ஜுனா எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் ‘குபேரா’ படத்தின் மீதிக்கதை.

படம் ஆரம்பித்ததுமே கடல், கப்பல், கோடீஸ்வரர்கள் வீடு, அவர்களின் கனவுத் திட்டங்கள் என்று பெரிய கேன்வாஸ் ஆக காட்சிகள் திரையை நிறைக்கின்றன.
அப்போதே தெரிகிறது இது ஒரு பேன் இந்தியா படமாகவே உருவாகி இருக்கிறது என்று.போகப்போக படத்தில் காட்சிகள் சூடு பிடித்து அதைக் கடைசி வரை பராமரித்துக் கொண்டு செல்கிறார்கள். இடையிடையே நெஞ்சை தொடும் காட்சிகளும் வந்து திரில்லராகவும் மாறி பயணக் கதையாகவும் கடத்தல் கதையாகவும் நாட்டு நடப்பை வெளிப்படுத்தும் வகையாகவும் நாட்டு மக்கள் நிலைமை கூறும் சமூகப் பார்வை கொண்டதாகவும் என்று பல்வேறு பரிமாணங்களுடன் முடிவை நோக்கிச் செல்கிறது படம்.

படத்தில் தனுஷ் ,தேவா என்கிற பிச்சைக்காரனாக வருகிறார் .அவரது வலது கையில் பாதிக்கப்பட்டதால் வலது கையால் சரியாக இயங்க முடியாது. அவரது உடல்மொழியே முற்றிலும் மாறி இடது கைப் பழக்கம் உள்ளவராக வருகிறார்.இந்த சித்தரிப்பு கொண்ட அந்தப் பாத்திரத்தில் உடல் மொழியிலும் பேச்சு மொழியிலும் தடம் மாறாமல் கடைசி வரை நடித்திருக்கிறார்.தனுஷ் நட்சத்திர அங்கியைத் துறந்து விட்டு கதையின் நாயகனாக நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார் எனலாம்.பாடல் காட்சிகளிலும் நடனமாடி ரசிகர்களைக் கவர்கிறார்.

ஏமாற்றமும் வெறுப்பும் சேர்ந்து அழுத்தப்பட்ட சமீரா கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா வருகிறார். கடைசி வரை ஒரு சிரிக்கும்படியான காட்சியும் இல்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பார்வையில் நெருப்பைச் சுமந்து கொண்டு அனைத்து காட்சிகளும் அற்புதமாக நடித்திருக்கிறார். தனுசுக்கு உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவர் தவிப்பதும் கண்களில் கோபத்தைக் கக்குவதும் மிகப் பிரமாதமான நடிப்பு.”உன் சாவு உனக்கு ,என் சாவு எனக்கு” என்று அவர் பேசும் வசனங்கள் அவரது பாத்திரத்தைக் கூறும்.

தீபக் பாத்திரத்தில் நாகார்ஜுனா வருகிறார்.நியாயமான சிபிஐ அதிகாரியாக இருந்து சதியால் சிறைக்குச் சென்றவர் .முதலில் அறத்தையும் சத்தியத்தையும் நம்புகிறார் .ஆனால் அது தோல்வியில் முடியவே பிறகு அநியாயத்தின் பக்கம் செல்கிறார். அவர்களும் தன்னை ஒரு கருவியாக பயன்படுத்துவது தெரிந்து நீதியின் பக்கம் செல்கிறார். இந்தப் பாத்திரத்தில் நாகார்ஜுனா அலட்டிக் கொள்ளாமல் அருமையாக நடித்திருக்கிறார்.அவரது தோற்றமும் அலட்டல் இல்லாத பேச்சும் கூடுதல் பலம்.

நான்கு பிச்சைக்காரர்களில் தனுஷுடன் வரும் குஷ்பூ என்கிற பாத்திரத்தில் வருபவருக்கு களையான முகம் ,கர்ப்பிணியாக வந்து அனுதாபங்களை அள்ளுகிறார். மற்ற இரண்டு பேரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

வில்லன் நீரஜ் மித்ரா வாக வரும் நடிகர் ஜிம் ஷரப் ,அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார் .அவரது ஒவ்வொரு அசைவும் ஒரு அனுபவம் உள்ள நடிகர் என்பதைப் பறை சாற்றுகிறது. அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக ஹரிஷ் பெராடி வருகிறார்.தமிழ் பேசும் போலீஸ்காரராக சாயாஜி ஷிண்டே வருகிறார்.சில காட்சிகளுடன் சுடப்பட்டு இறந்து போகிறார்.

தனுஷ் உடன் இருக்கும் பிச்சைக்காரராக கே. பாக்யராஜ் நடித்திருக்கிறார்.தலை முழுக்க முடி ,தாடி என்று வருகிற அவரது தோற்றமே சரியாக அமைந்து பாத்திரத்திற்கு அசல் தன்மையை வழங்கி உள்ளது.நாகார்ஜுனாவின் மனைவியாக கண்ணாடி அணிந்தபடி வரும் சுனைனா,அந்தக் குடும்பத் தலைவி பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார்.சிறுவர்களை தவறாகப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலில்  நாசர் ,பகவதி பெருமாள் குரூர முகம் காட்டுகிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.பொதுவாகத் தெலுங்குப் படங்களுக்கு கமர்சியல் குத்துக்களைப் போடுவதில் கெட்டிக்காரர் .ஆனால் இதில் தீவிரமாக இறங்கி வேலை பார்த்திருக்கிறார்.பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் சரி சிறப்பு செய்திருக்கிறார்.பாடல்களில் போய் வா நண்பா, பச்ச புல்வெளி ,ஆராரோ, கதகதகத என ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு ரகத்தில் ஒலித்து ஈர்க்கின்றன.விதவிதமான விவேகாவின் பாடல் வரிகளும் அர்த்தமுள்ளவை.பின்னணி இசையிலும் உலகத் தரத்தைத் தொட முயன்றுள்ளார். 

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் திருப்பதி, மும்பை என்று இந்தியப் பகுதிகளில் அவரது கேமரா சுழன்று சுழன்று படப்பதிவு செய்துள்ளது.ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தைக்கூட்டி பிரமிப்பூட்டுகிறது.

தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு ,கலை இயக்கம் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.கோடீஸ்வரர்களின் வீடுகள் ,மும்பை தெருக்கள்,குப்பைமேடுகள், பிச்சைக்காரர்கள் இருக்கும் இடம் ,ரயில் நிலையங்கள், கோடிக் கணக்கான ரூபாய் பணம் ,கப்பல் என்று எல்லாமும் கண் முன் நிற்கின்றன.

படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தின் பிரம்மாண்டத்தையும் விறுவிறுப்பையும் இடையூறு செய்யாமல் தொகுத்துள்ளார்.

படத்தில் தமிழில் வசனங்கள் எழுதி இருப்பவர் அகோரம் பன்னீர்செல்வம். உறுத்தல் இல்லாத அழகான ஆழமான வசனங்களை எழுதியிருக்கிறார்.’பணமும் பவரும் இருந்தால் தான் நியாயம் ஜெயிக்கும் இதுதான் சரித்திரம்’ , ‘பத்து நாள்ல வெளியே வருவியா ?பத்து வருஷம் உள்ளே இருப்பியா?’, ‘ பணமும் பவரும் இருந்தா தான் நியாயம் ஜெயிக்கும் நீதியும் நியாயமும் இல்லை .இது சரித்திரம்’, ‘எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.ஏதோ ஒரு விதத்தில் பிச்சை எடுப்பவர்கள் தான்’ ,’உன் சாவு உனக்கு என் சாவு எனக்கு’, ‘பாதிக்கப்பட்ட ஆளுங்க பக்கம் நிற்காதவரை பணமும் பவரும்தான் ஜெயிக்கும் இதுதான் சரித்திரம்’, ‘ வாழறதுக்கு பிழைக்கணும்’ போன்றவை உதாரண வரிகள்

மொத்தத்தில் இந்தப் படம் சாதாரண கமர்சியல் படம் போன்று இல்லாமல் இந்தியாவின் சராசரி மக்களின் நிலையைக் கூறி சமுதாயத்தின் சமகாலத்தை பிரதிபலிக்கிறது.
இந்த ‘குபேரா’ மொழி கடந்து அனைத்தும் மொழிகளிலும் வெற்றி பெறும் சாத்தியக் கூறுகளுடன் உருவாகியுள்ளது.