‘சல்லியர்கள்’ திரைப்பட விமர்சனம்

சத்திய தேவி, எஸ் கருணாஸ், திருமுருகன் ,ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் நடித்துள்ளனர். தி.கிட்டு எழுதி இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு சிபி சதாசிவம் ,இசை கென் & ஈஸ்வர் ,கலை இயக்கம் – முஜிபுர் ரஹ்மான், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத்தொகுப்பு -சி.எம். இளங்கோவன். இந்தியன் சினிவே சார்பில் எஸ் கருணாஸ் மற்றும் பி கரிகாலன் தயாரித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நிகழ்ந்த போர்ச் சூழலில் போராளிகள் பதுங்கு குழி அமைத்து தற்காத்துக் கொள்ளவும் தாக்குதல் தாக்குதலுக்கானவர்களுக்குசசிகிச்சை செய்யவும் பயன்படுத்திய பின்னணியில் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. வலிமைமிக்க ராணுவத்திற்கு எதிராகப் போராளிகள் போராடிய போது காயம்பட்டவர்களைக் காப்பாற்றவும் சிகிச்சை அளிக்கவும் பதுங்கு குழிக்குள் மருத்துவமனைகளை அமைத்துக் காப்பாற்றினர். அப்படி அங்கே மருத்துவச் சேவையாற்றிய செவிலியர்கள் தான் சல்லியர்கள் எனப்படுகிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பும் உழைப்பும் பற்றி விவரிக்கும் படைப்பு தான் இந்த ‘சல்லியர்கள்’.

கதை நிகழும் பின்புலம் தமிழ்ப் பிரதேசம் – சிங்கப் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டாலும்,அந்தக் குறியீடுகளை அது தமிழர்- சிங்கள ராணுவத்தினர் மோதல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பதுங்கு குழிக்குள் செயல்படும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்தான் நாயகி சத்யதேவி. கடமையை கருத்தில் கொண்டு மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது பணியாற்றி வருகிறார்.அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் வருகிறார்.

இதற்கிடையே, போராளிகளின் மருத்துவக் குழுவை அழித்தால் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று ராணுவம் திட்டம் போடுகிறது.போர் அறத்தை மீறி போராளிகளின் மருத்துவப் பணிகளுக்கு எதிராக தனது செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் மருத்துவ சேவையாற்றும் அவர்களுக்கு போராளியாக இருந்தாலும் ராணுவத்தினராக இருந்தாலும் ஒன்றுதான்.உயிருக்குப் போராடுபவர்களை மனிதநேயத்தோடு காப்பாற்றவே செய்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் மனிதர்கள் என்றே பார்க்கிறார்கள் அப்படிப்பட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இப்படம் பேசுகிறது.

இந்தப் படத்தில் மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் சத்யதேவி நடித்துள்ளார்.மிகை நடிப்பு வெளிப்படாமல் அளவான நடிப்பு ,அதற்கேற்ற உடல் மொழி, வசனம் என்று கச்சிதமாகப் பொருந்துகிறார். பதுங்கு குழிக்குள் அவர் செய்யும் தனது செயல்பாடுகளின் மூலம் போராளிகளின் வைத்தியரை கண்முன் நிறுத்துகிறார்.

மருத்துவர் செம்பியனாக வரும் மகேந்திரன், தோற்றம் நடிப்பு என்று சரியாகப் பொருந்துகிறார்.ஒரு நடிகர் நடித்தது போல் தெரியாதது அவரது சிறப்பு.

மதியழகன் என்கிற பெயர் கொண்டவராக நாயகியின் தந்தையாக சேது கருணாஸ் சிறப்பாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளாகப் படம் பார்ப்பவர் மனதில் பதியம் போடுகிறது.

சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களுக்குரிய நடிப்பை வழங்கி உள்ளார்கள்.காதலர்களாக வந்து போராளிகளாக மாறும் நாகராஜ் – பிரியலயா ஜோடி கவனம் பெறுகிறார்கள்.

கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், வைரமுத்து மற்றும் தி.கிட்டு ஆகியோரது வரிகளில் பாடல்கள் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளன.பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் கூடுதல் பலம் என்றே கூற வேண்டும்.  
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக உள்ளன.குறிப்பாகப் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது. படத்தில் தெரியும் பின்புலக் காட்சிகள் அனைத்தும் ஈழத்தை நினைவூட்டுகின்றன.

படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன் படத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கருத்தும் வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார்.

போர்க்களத்தின் நடுவே புனிதப் பணி செய்யும் மருத்துவர்களின் மனநிலையையும், அவர்களது வாழ்வின் சூழலையும் படம் பார்ப்பவர் உணரும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

படத்தின் பின்புலத்தில் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் பதுங்கு குழிகளை,அங்கே உள்ள மருத்துவமனைகளை கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மான் சரியாகவே அமைத்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் தி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத பலவற்றையும் ஒரு திரைப்படத்துக்கு ஏற்ற சுவாரசியத்தோடு சொல்லியுள்ளார்.சேவையின் முன்பே இன பேதம் பார்க்காத அந்த மனிதநேயத்தை அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார்.

படத்தில் இயக்குநர் கிட்டு,எழுதியிருக்கும் பல வசனங்கள் மனதில் தைக்கின்றன.உதாரணத்திற்கு ஒன்று “நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்”

மொத்தத்தில், ‘சல்லியர்கள்’ பூமிக்கடியில் பதுங்குழிகளுக்குள் மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளது எனலாம்.