சாக்ஷி அகர்வால், அம்பிகா,இயக்குநர் செல்லக்குட்டி, பொன்வண்ணன்,யோகி பாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், விஜய் விஸ்வா , மிரட்டல் செல்வா நடித்து உள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் செல்லக்குட்டி .இசை : கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: ஜெ. லக்ஷ்மன் குமார், படத்தொகுப்பு :ஜான் ஆபிரகாம்.விஷ்வா ட்ரீம் வேர்ல்ட் சார்பில் ஸ்ரீ பட்டவன் தயாரித்துள்ளார்.
தனது பள்ளிப் பருவத்து தோழியான சாக்ஷி அகர்வாலை காதலை விட நட்பே பெரிது என்று ஒரு தோழியாக பாவித்து வருபவர் செல்லக் குட்டி. சாக்ஷி கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.அவரது தந்தை பொன்வண்ணன். சாக்ஷிக்குப் பல்வேறு திருமணத்தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் வீட்டில் உள்ளவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.சாக்சியை பல்வேறு கொலை அச்சுறுத்தல்கள் துரத்துகின்றன.
ஒரு கட்டத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு அவர் காதலித்த விஜய் விஸ்வா உடன் திருமண ஏற்பாடு நடந்து பத்திரிகைகள் கொடுத்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட தனது தோழியை ஓர் இடத்தில் அடைத்து வைத்துள்ளார் இயக்குநர் செல்லக் குட்டி. இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் இப்படி அடைத்து வைத்திருக்கிறார். தனது அம்மா அம்பிகா உடல்நிலை மோசமாக உள்ள சூழலில் சாக்ஷியை அவர் பார்க்க விரும்புகிறார் என்று நேரில் அழைத்துக் கொண்டு போய் காண்பித்து விட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அது ஒரு விபரீதமான நிபந்தனையாக இருக்கிறது. ஏனென்றால் சாக்சியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அம்பிகா விரும்புகிறார் .எனவே அம்மாவுக்காக தனது தோழியை காதலியாக்கிக் கொள்ள நினைக்கிறார் செல்லக் குட்டி. இந்த விபரீத விளையாட்டின் முடிவு என்ன என்பதுதான் ‘சாரா’ படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் சாரா பாத்திரத்தில் வரும் சாக்ஷி அந்த பாத்திரத்தில் குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.செல்லா ஆக வரும் இயக்குநர் செல்லக் குட்டி கேட்பார் இன்றி அடித்து விளையாடி உள்ளார்.அன்பு பாசம் காதல் ஆவேசம் கொஞ்சல் கெஞ்சல் என்று டி ராஜேந்தரை நினைவு படுத்தி வெளுத்து வாங்கியுள்ளார். சில இடத்தில் மிகையாகத் தோன்றினாலும் அஞ்சாமல் தைரியமாக நடித்துள்ளார். அம்மாவாக வரும் அம்பிகா பாந்தமான நடிப்பில் அனுதாபங்களை அள்ளுகிறார்.
காமெடி ட்ராக் போல் வரும் ரோபோ சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பெரிதாக ரசிக்க முடியவில்லை. சாக்ஷியின் தந்தையாக வரும் பொன்வண்ணன் குறைந்த அளவிலான காட்சிகளிலே வந்து போகிறார்.
இயக்குநர் நல்ல கதையைத்தான் எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் திரைக்கதை செய்வதில் கவனக்குறைவாக நடந்து கொண்டு நாடகத்தனமான காட்சிகள் அமைத்து படத்தை மலினம் ஆக்கிவிட்டார்.
அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மட்டும் ஆறுதல் என்று கூறலாம் .இயக்குநர் நினைத்த விதத்தில் ஒளிப்பதிவும் இசையும் அவருடன் பயணித்துள்ளன.இயக்குநர் கவனத்துடன் அடுத்தடுத்த படிகளிலே ஏறினால் அவர் நல்ல குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக வருவதற்கு வாய்ப்புள்ளது.


