‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்பட விமர்சனம்

நிஷாந்த் ருச்சோ, வர்ஷினி வெங்கட், ஷாலினி, கேபியு ராஜா, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நவீத் எஸ். ஃபரீத் இயக்கியுள்ளார்.

கதாநாயகன் ராஜா ஓரளவு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் .தலை முடி கொட்டியதால் வழுக்கையாகிவிட்டவன் ..அதனால் அவனுக்குத் திருமணம் தள்ளித் தள்ளிப் போகிறது. பெண்ணே கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு பெண் பிரியா அவனது வழுக்கையையும் ஏற்றுக்கொண்டு திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். திருமணம் நிச்சயமாகிறது. அந்த நேரத்தில் ஒரு வீடியோ வருகிறது. அதைப் பார்த்துவிட்டு பிரியா மீது சந்தேகப்படுகிறான் ராஜா.நிச்சயமான திருமணம்,திருமண ஏற்பாட்டு சமயத்திலேயே நின்று விடுகிறது
அதன் பிறகு வெறுத்துப் போனவன் சென்னை செல்கிறான். சென்னை சென்று தலைமுடிப் பிரச்சினைக்குச் சிகிச்சை அளிக்க முயற்சி செய்கிறான். பலனளிக்கவில்லை . இறுதியில் தலையில் விக்கோடு ஊரில் வந்து இறங்குகிறான் .அவனுக்கு சொந்த முடி என்று அனைவரும் நம்புகிறார்கள். இந்த நிலையில் அவனுக்கும் ஸ்ருதிக்கும் திருமணம் நிச்சயமாகிறது .மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.அவனுக்கு உள்ளது போலித்தலைமுடி என்று தெரிந்ததும் அந்த பெண் அவனைத் திட்டி விட்டுத் திருமணத்தை நிறுத்தி விடுகிறாள். அவனது வழுக்கைத் தலையை ஏற்று முதலில் சம்மதம் சொன்ன பிரியாவுடன் அவனைச் சேர்த்து வைக்க நண்பர்கள் முயற்சி செய்கிறார்கள். முடிவு என்ன என்பதுதான் ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தின் கதை.

பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படம் இது. இன்றைய வாழ்க்கை முறை மாறிப் போனதால் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக இருக்கும் வாலிபர்களின் எண்ண ஓட்டத்தை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு கதை உருவாக்கி இப்படி ஒரு முழு திரைப்படமாக எடுத்து இருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்துள்ளார்  நிஷாந்த் ருச்சோ.வாலிப வயதில் படத்துக்காக அவர் தலையை மழித்துக் கொண்டு வழுக்கைத் தலைக்கார வாலிபனாக நடித்திருக்கும் அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு பாராட்டு. அதேபோல் பிரியாவாக அடக்கமாக வந்து இரண்டாவது பாதியில் சீறும் பெண்ணாக நடித்துள்ள , நாயகி வர்ஷினி வெங்கட் சுமாரான தோற்றத்தில் வந்தாலும் சுயமரியாதை உள்ள பெண்ணாக நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.ஸ்ருதியாக இரண்டாவது மணப்பெண்ணாக வரும் நடிகை  ஷாலினி  துறுதுறுவென வந்து கலகலப்பூட்டுகிறார். ரீல்ஸ் மோகம் கொண்ட அவர் செய்யும் அலப்பறைகள் ஜாலி கலகலப்பு.

கேபியு ராஜாவின் டைமிங் காமெடி டைமிங் சில நேரம் சிரிக்க வைக்கிறது. சில நேரம் அலுப்பு ஊட்டுகிறது. இரண்டாவது முறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணத்தை நிறுத்துவதற்கும் பழைய பெண்ணுடன் ராஜாவைச் சேர்த்து வைப்பதற்கும், கேபியு ராஜா ,புகழ் மற்றும்  நண்பர்கள் செய்யும் தகிடு தத்தங்கள் மிகையான நாடகங்கள்.ராஜா வைத்திருப்பத விக் என்பதை நிரூபிப்பதற்கு அவர்கள் படும் பாடுகள் நீளம்.சில நேரம் கலகலப்பும் பல நேரம் அலுப்பும் ஊட்டும் காட்சிகள் அவை .இவ்வளவு சிரமப்பட்டுத் தங்கள் நண்பனின் திருமணத்தை நிறுத்த வேண்டுமா என்பது முரண்பாடான ஒன்று.படத்தில் துணைப்பாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவருமே அந்தந்த பாத்திரத்தோடு பொருந்துகிறார்கள்.

இப்போதைய தொழில் நுட்ப யுகத்தில் தலைமுடி தொட்டுவது பெரும்பாலான இளைஞர்களின் பிரச்சினையாக உள்ளது .
தலைவழுக்கையாக இருப்பவர்களைப்பார்த்து உடற்கேலியாக மாற்றி  இந்த சமுதாயம் எப்படிக் கேலி செய்யறது என்பதை வரிசையாகப் பிட்டுப் பிட்டு வைக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது அவர்கள் மீது அனுதாபம் வருகிறது.”உயிரைக்காப்பாற்ற ஆயிரம் சாமிகள் உள்ளன. மயிரைக் காப்பாற்ற ஏதாவது உள்ளதா?’ என்று நாயகன் கேட்கும்போதுதான் அந்த வலி புரிகிறது.

முதல் பாதி சலிப்பூட்டினாலும் இரண்டாவது பாதியில் இந்த பிரச்சினையைத் தீவிரமாக பேசி அதிலிருந்து மீண்டு வருவது பற்றியும் உரையாடி நம்மை உட்கார வைக்கிறார்கள். தலை முடி கொட்டுவது என்பது ஒரு துரதிர்ஷ்டமான பிரச்சினைதான் இருந்தாலும் முடியே வாழ்க்கையின் முடிவல்ல என்று கதாநாயகி பிரியா பேசும் வசனங்கள் சரியான சாட்டையடி. முடி கொட்டுவது என்பதை இயல்பாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து கடந்து மீண்டு வர வேண்டும் என்பதைக்  கதாநாயகன் மூலம் சித்தரித்து கருத்து சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அந்த வகையில் படம் ஆறுதல் அளிக்கிறது.

இன்றைய ஐடி இளைஞர்களின் பிரச்சினையை பிரதிநிதித்துவப்படுத்தி இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு படமாக்கியிருக்கும் இயக்குநரை சில குறைகளை மறந்து நிச்சயமாகப் பாராட்டலாம் .