தமிழுக்கு நேரும் கொடுமைகள் : கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

தமிழுக்கு நேரும் கொடுமைகள் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து .

இன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள், பகிரப்படும் செய்திகள் போன்றவை 99 சதவீதம் எழுத்துப் பிழைகளோடும் கருத்துப் பிழைகளோடும் வாக்கியப்பிழைகளோடும் தான் வருகின்றன.பிழையே இல்லாத பதிவைக் காண்பது அரிது.

எதைப் பகிரும் போதும் விரைவில் பகிர வேண்டும் என்கிற அவசரம் மட்டுமே தெரிகிறது. பாவம் அவர்கள் நினைத்துக் கொள்வது போல் அது ஒன்றும் அத்தனைப் புதிதல்ல. பல சுற்றுகள் வலம் வந்தவையாகத்தான் இருக்கும்.

பகிர்வதற்கு முன்பாக எதையும் ஒருமுறை படித்துப் பார்க்கலாம், சரி செய்து கொள்ளலாம் என்கிற உணர்வே கிடையாது. இந்தப் போக்கில் பாமரன் முதல் படித்தவர் வரை அடக்கம்.

இப்படிப்பட்ட அவசரக்காரர்களால் பகிரப்படும் பல தகவல்கள் பொய்யாகவும் பல்வேறு பிழைகளுடன் வருகின்றன.

இன்று பிரபல ஊடகங்களில் இருக்கும் பலர் இளையவர்கள் . தமிழ்மொழி சார்ந்த அடிப்படைப் புரிதலோ இலக்கண அறிவோ அற்றவர்கள் .சரியாக எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வும் இல்லாதவர்கள் .
எனவே சாமானியர்களால் பகிரப்படும் தகவல் மட்டுமல்ல பெரிய ஊடகங்களிலும் செய்திகள் ஏராளமான பிழைகளுடன்தான் வருகின்றன.

‘ழ’கரம் தெரியாமலேயே அவ்வளவு பிழைகள் வருகின்றன.’பணிப்பழு‘ என்று வருகின்றன. ‘கொளுந்துவிட்டு ‘ எரிந்தது என்று வருகின்றன.

பெரும்பாலான திரைப்படங்களில் ‘பின்னணி’ என்பது ‘பின்னனி’ என்றே வருகின்றது.
ஒவ்வொரு முறை திரைப்படம் பார்க்கும்போதும் பெயர்கள் வரும் போது பீதியோடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.அவ்வளவு பிழைகள்.அந்தளவுக்குத் தமிழ் மொழியில் தெளிவோடு(!) இருக்கிறார்கள்.

நிறுவனங்கள் வெளியிடும் செய்தி அறிக்கைகள் மட்டுமல்ல அரசுத்துறை வெளியிடும் செய்தி அறிக்கைகளில் கூட பிழைகள் வருகின்றன.

இது குறித்து வைரமுத்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு இன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார் .

இதோ அந்தப் பதிவு!

சமூக ஊடகங்களில்
நல்ல நகைச்சுவைகளைப்
பார்க்கிறேன்

தப்பும் தவறுமாய்த்
தமிழ் எழுதுகிறவர்கள்
சரியான எழுத்தைத்
தவறென்கிறார்கள்

‘ட’ண்ணகரம் ‘ற’ன்னகரம்
பொது ‘ள’கரம் வகர ‘ல’கரம்
எங்கே ஆளப்பட வேண்டும்
என்று அறியாதவர்கள்
தேவையில்லாத
திருத்தம் சொல்கிறார்கள்

வினைத்தொகையில்
வல்லெழுத்து மிகாது என்று
அறியாதவர்கள்
’ஊறுக்காய்’ என்று எழுதித்
தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்

’நினைவுகூறுதல்’ என்றே
எழுதிப் பழக்கப்பட்டவர்கள்
’நினைவுகூர்தல்’ என்ற
சரியான சொல்லாட்சியைத்
தவறென்று சொல்லித்
தமிழின் கற்பைச்
சந்தேகப்படுகிறார்கள்

’எலும்புவில் தேய்மானம்’
என்று எழுதுவது தவறென்று
அறிந்தவர்கள் கூடக்
’கொழும்புவில் குண்டுவெடிப்பு’
என்று எழுதுகிறார்கள்

வருமொழி வடமொழியாகவோ
மெல்லொலியாகவோ இருப்பின்
வல்லெழுத்து மிகத்தேவையில்லை
என்ற பொதுவிதி அறியாதவர்கள்
எனது தண்ணீர் தேசம் நாவலில்
‘த்’ எங்கே என்று குத்துகிறார்கள்

திருநிறைசெல்வியே சரி
என்று தெரியாதவர்கள்
திருநிறைச்செல்வி என்று எழுதிப்
பிழையே சரியென்கிறார்கள்

இவர்களோடு மல்லுக்கட்டுவதை
நான் அழகான சண்டை என்றே
கருதுகிறேன்

எமக்குத்
தமிழ் சொல்லித்தரும் பணியில்
ஈடுபடுகிறவர்களைப் பார்த்து
நான் கோபம் கொள்வதில்லை;
கும்பிட்டுச் சிரிக்கிறேன்

நல்ல தமிழ் அறியாவிடில்
கேட்டுக் கற்றுத்
தெரிந்து தெளியுங்கள்

சரியானதைப்
பழிப்பதன் மூலம்
தப்புக்குத்
தங்க முலாம் பூசாதீர்கள்

தமிழ் வளர்ச்சித்துறை,
செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தமிழ் வளர்ச்சிக் கழகம்,
உலகத் தமிழ்ச் சங்கம்
முதலிய அமைப்புகள்
தமிழர்களின் அன்றாடத்
தமிழோடு இயங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.