ஜீவா ,பிரார்த்தனா நாதன், தம்பி ராமையா,இளவரசு, அனுராஜ், ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த் ,ராஜேஷ் பாண்டியன்,அமித் மோகன், சுபாஷ் கண்ணன், ஷரத் ,சாவித்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இசை – விஷ்ணு விஜய், தயாரிப்பு – கண்ணன் ரவி புரொடக்சன்ஸ் சார்பில் கண்ணன் ரவி.
வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருக்கிற ஜீவரத்தினம் என்கிற ஜீவா, அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.மூத்த அரசியல்வாதிகள் செய்யும் தில்லுமுல்லுகளை பார்த்து வியந்து ,அவர்களை அறிந்து வளர்ந்து வருகிறார்.ஊரில் உள்ள நல்லது கெட்டது என்று சுக துக்கங்களில் அவர் தலைமையேற்றும் முன் நின்றும் நடத்தி வைக்கிறார்.
அந்த ஊர்க் காரர் இளவரசுவின் மகளின் திருமணப் பணிகள் நடக்கின்றன. அதில் ஜீவாவும் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.திருமண நாளை நெருங்கும்போது அதாவது மறுநாள் திருமணம் என்கிறபோது முதல் நாள் பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவின் நோயாளித்தந்தை இறந்து விடுகிறார்.தம்பி ராமையாவின் மகள் பூரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தம்பி ராமையாவுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் இளவரசுக்கும் ஏற்கெனவே முன்பகை இருக்கிறது.மறுநாள் காலை 10:30 மணிக்குத் திருமணம் நடைபெற வேண்டும். ஆனால் திருமணம் நடைபெறும் அதே 10:30 மணிக்குத்தான் தனது தந்தையை எடுத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் தம்பி ராமையா. இருவரது ஆணவங்களும் மோதிக் கொள்கின்றன .கோபத்தில் இருவரது மனங்களும் குரூரமாகச் சிந்திக்கின்றன.தம்பி ராமையா இளவரசைப் பழி வாங்குவதற்காக எவ்வளவு கீழ் நிலைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊரே இந்தப் பகையை வேடிக்கையுடன் அடுத்து என்ன நடக்கிறதோ என்று வேடிக்கை பார்த்தும் விபரீதமாகச் சிந்தித்தும் அவதூறுகள் பேசியும் திரிந்து கொண்டிருக்கிற ஒரு நிலையில் அந்த ஊர்க்கார பஞ்சாயத்து தலைவர் ஜீவா இந்தப் பிரச்சினைகளை எப்படிக் கையாண்டு எதிர்கொள்கிறார் என்பதுதான் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் மீதிக் கதை.
சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒரு வாக்கு என்கிற வகையில் புன்னகை பூசிய முகத்துடன் காண்கிற அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்டும் ஒரு கலகலப்பான இளைஞராக வருகிறார் ஜீவா. அவர் யாரைச் சந்தித்தாலும் அந்தக் காட்சி கலகலப்பாக மாறிவிடுகிறது.இது வழக்கமான கதாநாயகன் வேடமல்ல என்றாலும் படத்தின் மையத் தூணாகத் தாங்கி நிற்கிறார் ஜீவா.அவரைச் சுற்றி நிற்கும் சின்ன சின்ன உதிரிப்பாத்திரங்கள் செய்யும் அலப்பறைகளுக்கும் இவர் பதிலடி கொடுக்கிறார். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன்எங்கோ பார்த்தது போல் உள்ளது என்று யோசிப்பார்கள்.அவர் ’பார்க்கிங்’ படத்தில் மகளாக வந்தவர்.எளிமையான தோற்றம் ,அளவான அழகு ,எதார்த்தமான நடிப்பு என்று தனது பாத்திரத்தில் அவர் மிளிர்ந்துள்ளார். கதையின் சிக்கல்கள் யாவும் ஒரு கட்டத்தில் அவரைச் சுற்றி வந்து நிற்கும்போது அதை எதிர் கொள்ளும் விதத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் முகபாவனைகள் அந்த பாத்திரத்திற்கு வலுவூட்டுகின்றன.
கதையின் பிரச்சினைகள் மையம் கொள்ளும் இரு துருவங்கள் என்று கூறும் வகையில் தனது அகங்காரத்தின் மூலம் பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொண்டே செல்லும் முக்கிய பாத்திரங்களாக வரும் தம்பி ராமையாவும் இளவரசுவும் அடித்தே ஆடியுள்ளனர்.குறிப்பாக தம்பி ராமையா இதில் காட்டும் மிகைநடிப்பு கூட ரசிக்க வைக்கிறது.இந்த இரு பாத்திரங்களின் முரண்களும் மோதல்களும் திரைக்கதையைச் சுவாரசியம் உள்ளதாக மாற்றுகின்றன.
படத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகும் சௌமியாவுடன் கன்னியப்பன் மொபைலில் பேசிக் கொள்ளும் அன்புத் தொல்லை ஒரு கலகலப்பு என்றால் கன்னியப்பனின் உடன் இருக்கும் நண்பன் அடிக்கும் கமெண்டுகள் வேறொரு கலகலப்பு. அதேபோல தம்பி ராமையாவின் சித்தப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து அலப்பறை செய்யும் அந்த மூவர் கோஷ்டி செய்யும் அட்டகாசம் ரணகளம் என்றால் தவிடு பாத்திரத்தில் வரும் ஜென்சன் திவாகர் செய்யும் சேட்டைகள் குசும்பு ரகம். திரை ரசிகர்களிடம் முகப்பதிவு காணாத பல முகங்களும் இதில் வந்து தங்கள் அடையாளப் பதிவுகளை செய்கிறார்கள். அப்படி இந்தப் படத்தில் வருகிற சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் படம் முழுவதும் அந்தந்தப் பாத்திரமாகவே வந்து சிரிக்க வைக்கிறார்கள்.
திரைக்கதையே கலகலப்பாக செல்லும் போது வண்ணங்களின் மூலம் அதைத் தூக்கி நிறுத்தும் வகையில் ஒளிப்பதிவாளர் பப்லு அஜு பணியாற்றி இருக்கிறார்.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளன.பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
கதை சில குறிப்பிட்ட இடத்தில் நிகழ்ந்தாலும் திரைக்கதையில் உள்ள சுவாரசியமும் அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பும் அதை மறக்கடிக்கச் செய்து விடுகின்றன.திரைக்கதையின் பயணத்தில் சிறிதும் தொய்வு ஏற்படாத வகையில் படத்தைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் அர்ஜுனே பாபு.
திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று சொல்லும் வகையில் திரைக்கதையில் பலரும் பணியாற்றியுள்ளனர்.
சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதைப் பங்களிப்பு அந்தக் கூட்டு முயற்சியின் விளைவைக் கொடுத்துள்ளன.
நகைச்சுவையாகப் பல காட்சிகள் சொல்லப்பட்டிருந்தாலும் நாட்டு நடப்பினை ஆங்காங்கே பிரதிபலிக்கும் வகையில் வருகிற காட்சிகள் சிந்திக்கவும் வைக்கின்றன.
‘அமெரிக்கா நாட்டில் ஐரோப்பா நாட்டில் அப்படி வாழ்கிறார்கள் என்கிறார்கள்.அவர்கள் தலைவிதி அப்படி.நீங்கள் இந்த நாட்டில் வாழ்கிறீர்கள் உங்கள் தலைவிதி இப்படி’ என்ற எம் ஆர் ராதாவின் வசனத்தை ஆரம்பத்திலும் இறுதியிலும் போட்டுக் காட்டி படத்தில் மக்கள் பழமையில் மூழ்கி இருக்கும் அவலத்தைச் சூசகமாக வலியுறுத்தி இருக்கிற விதம் சிறப்பு.
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் சல்லித்தனங்களும் பகைமைகளும் கயமைகளும் குரூரங்களும் வெளிப்படும் வகையில் வருகிற காட்சிகளை இயல்பான கதாபாத்திரங்களின் மூலம் இந்தப் படத்தில் வெளிக்காட்டி உள்ளார் இயக்குநர்.
இது தமிழ் சினிமாவின் வழக்கமான சட்டங்களில் இருந்து மாறி இருப்பதால் அடுத்து என்ன என்பதை யோசிக்க முடியாத அளவிற்கு இந்தக் கதை சொல்கிறது. நிச்சயமாக இது நல்ல திரையரங்க அனுபவமாக மாறி உள்ளது.
மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரை உலகில் ஒரு கொண்டாட்டம் என்கிற அளவிற்கு கலகலப்பான படமாக இருக்கிறது.


