‘தூள் பேட்’ இணையத் தொடர் விமர்சனம்

அஷ்வின் குமார் , குரு லக்ஷ்மணன், பாடினி குமார், ஸ்ரீத்துகிருஷ்ணன், ப்ரீத்தி ஷர்மா ,சௌந்தர்யா, ஷியமனந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விசுவாமித்திரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலைமான், லிங்கா கார்த்திக், வைஷு, முருகானந்தம், தயாளன், மணிசந்திரன், சூர்யா, ருத்ரா, சரவணன் ,வினோத்குமார், ஆர்த்தி ,இளங்கோவன், நந்தகுமார் ,குணவதி, அரவிந்த், பிரபாகரன் நடித்துள்ளனர்.

ஜே.ஜெஸ்வினி இயக்கியிருக்கிறார் .கதை, திரைக்கதை :ரமணகிரி வாசன்,ஒளிப்பதிவு :என். எஸ். சதீஷ்குமார்,
கலை இயக்கம் எஸ். ஜெயச்சந்திரன்,இசை அஷ்வத் ,படத்தொகுப்பு: சாம் ஆர் டி எக்ஸ் ,
பாடல்கள்:மஷூக் ரஹ்மான்,தயாரிப்பு நிர்வாகி பி. தமிழ்மணி பாண்டியன்,
பேரபிள் பிக்சர்ஸ் சார்பில் தேவன் சார்லஸ், பி .பிரவீன் குமார், சரண்யா வீரமணி தயாரித்துள்ளனர்.

‘தூள்பேட் ‘என்று அழைக்கப்படும் தூள்பேட்டை என்கிற ஊரில் தசராவின் பத்தாவது நாளில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது கதை. அந்த ஊரில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழாவைத் தொடர்ந்து மக்கள் கூட்டம், சாமியாட்டம், பலவிதக் கலைநிகழ்ச்சிகள் என்று ஊரே திருவிழாக்கோலம் பூண்டு அமர்க்களமாகப் பரபரக்கிறது.

ஆயுத பூஜையை முன்னிட்டு தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பூஜை போடுகிறார்கள்.நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரையும் சாமி கும்பிட அழைக்கிறார்கள்.பிரச்சினைக்குப் பெயர் பெற்ற அந்த தூள்பேட்டையிலிருந்து விடுதலையாகும்படி தனக்கு வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் .அப்படி வழிபாட்டு மனநிலையில் இருக்கும்போது கமிஷனர் அவசரமாக அழைக்கிறார்.அந்த ஏரியாவில் ஐந்து விபத்துகள் நடந்திருப்பதாக கமிஷனர் விரட்டுகிறார்.அதுமட்டுமல்லாமல் அந்த ஸ்டேஷனுக்கு என்றே கேட்டு மாறுதல் வாங்கிக்கொண்டு புதிய துணை ஆணையர் வருவதாகவும் அவர் மிகவும் கண்டிப்பானவர் என்றும் கூறுகிறார்.

அமைதியாக இருந்த அந்தக் காவல் நிலையத்தில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது ஆளாளுக்கு வெவ்வேறு வேலைகளுக்கு ஓடுகிறார்கள். காவல் நிலையம் தூய்மைப்படுத்தப்படுகிறது.அங்கு வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் மாசாணிக்கு கெட்டது எதுவோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது.அதன்படி பொழுது விடிவதற்குள் மூன்று கொலை நடக்கப் போகிறது என்று தோன்றுவதாகச் சொல்கிறார். இன்னொரு பக்கம் விசிபி லாட்ஜ் என்கிற விடுதியில் வெற்றிமாறன் என்கிற வாலிபர் வந்து தங்குகிறார்.முகவரிச் சான்று இல்லாமலேயே வந்து தங்கி இருக்கிறார்.அந்த விடுதியில் வேலை பார்க்கும் சிறுவன் அவரைப் பார்த்து முதலில் மிரள்கிறான்.

அதே நேரம் காவல் நிலையத்தில் இன்பா, சேகர் என்கிற இரு வாலிபர்கள் வெட்டப்பட்ட தலையோடு சரண் அடைகிறார்கள்.உடன் அவர்களது அம்மா சந்திராவும் வருகிறாள்.தன் தந்தை தூள் பேட்டை சங்கரைக் கொலை செய்த ரத்னத்தைப் பழிதீர்த்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.இது தனது 15 ஆண்டு காலக் கனவு, அதைத் தன் மகன்கள் நிறைவேற்றி வைத்திருப்பதாக சந்திரா பெருமைப்படுகிறாள். அது மட்டுமல்லாமல் இனி தூள்பேட்டைக்குத் தனது மகன்கள் தான் எல்லாமும் என்கிறாள். காவல் நிலையத்தில் அனைவரும் மிரண்டு நிற்கும் போது,ரத்னம் கொலையானதை அறிந்து ரத்னத்தின் கூட்டாளிகள் அங்கே வந்து மிரட்டுகிறார்கள்.சந்திராவைப் பழி தீர்க்கப் போவதாகச் சபதம் செய்கிறார்கள். போலீஸ்காரர்கள் அவர்களை சமாளித்து வெளியே அனுப்புகிறார்கள். போகும்போது சந்திராவிடம் ‘உன் சாவு என் கையில் தாண்டி’ என்று கூறிச் செல்கிறார்கள்.அதே நேரம் குப்பைமேட்டில் ஒரு வெட்டப்பட்ட தலை கிடைக்கிறது.இன்னொரு இடத்தில் மீன்பாடி வண்டியில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் தலை கிடைக்கிறது.ரத்னம் கொலையைத் தொடர்ந்து இப்படி ஒரே நாளில் வேறு இரண்டு கொலைகள் நடந்த செய்தி அறிந்து நாடே பதற்றப்படுகிறது.

காவல்துறை கதறுகிறது.நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன.கொலையாளியைத் தேடி போலீஸ் வேட்டை தொடங்குகிறது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடிய போது அது, வெற்றிமாறன் தங்கி இருந்த விடுதிக்குள் செல்கிறது. அங்கிருந்த வெற்றிமாறன் உள்பட அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொருவராக விசாரித்து அனுப்புகிறார்கள். இவன் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது என்று வெற்றிமாறனை லாக்கப்பில் தள்ளி இன்ஸ்பெக்டர் தாக்கப் போகும் சமயம், அவர்தான் அங்கே வந்திருக்கும் உதவி ஆணையாளர் என்று தெரிகிறது.அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்றால் அந்த நாய் ஏன் அங்கே சென்றது?

போலீஸ் விசாரணைக்குச் செல்கிற வழியில் ஓர் ஓட்டு வீட்டைப் பார்த்துவிட்டு ஜீப்பை நிறுத்தச் சொல்கிறார் வெற்றிமாறன் . அந்த வீடு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. உடனே ஒரு முன் கதை விரிகிறது. 2005 ஐ நோக்கிக் கதை பின்னோக்கிப் பயணிக்கிறது. பத்து வயது சிறுவன் வெற்றி. ஒரு நாள் ஐயனார் திடலில் சினிமா போடுவதாகவும் பார்க்க வேண்டி தந்தையிடம் அனுமதி கேட்கிறான். அவர் மறுக்கிறார். பாட்டி அவனை வீட்டுக்குத் தெரியாமல் அனுப்பி வைக்கிறார் .அவன் தனது தோழி ஜில்லுவுடன் போய்ப் படம் பார்த்துவிட்டு, அசந்து அங்கேயே தூங்கிவிட்டு காலையில் வந்து பார்க்கும்போது வீட்டில் கூட்டம் நிற்கிறது .தாய், தந்தை, பாட்டி அனைவரும் பிணமாகக் கிடக்கிறார்கள்.பார்த்துவிட்டுக் கதறுகிறான்.அனாதையாகிறான். ஒரு போலீஸ்காரர் அவனைக் காப்பாற்றி முகவரி கொடுத்து ஒரு வெளியூருக்கு அனுப்புகிறார்.இப்படி முன் கதை முடியும்போது, வெற்றிமாறன் மலைத்து சிலையாக நிற்கிறார்.

‘அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுவர்களைத் தவிர மற்ற அனைவரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். அந்த வீட்டுக்கு யாரும் வருவதில்லை’ என்று உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

பிறகு திருட்டு நகை சம்பந்தமாக ஒரு வாலிபன் பிடிபடுகிறான்.அவன் மீது சந்தேகப்பட்டு போலீஸ் விசாரிக்கிறது.அந்த இளம்பெண்ணைக் கொன்றவன் அவனாகத்தான் இருக்கும் என்று அவனைப் பிடித்து போலீஸ் சித்திரவதை செய்து விசாரிக்கிறது. அவளைக் காதலித்து உண்மை என்றும் ,தான் ஏன் அவளைக் கொலை செய்யப் போகிறேன் என்றும் மன்றாடுகிறான்?அப்படி என்றால் அந்த இளம் பெண்ணைக் கொன்றது யார்? குப்பைத்தொட்டியில் கிடந்த தலை யாருடையது ?

அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்து கொண்டே பரபரக்கிறது இந்தத் தொடர். ஒரு முடிச்சு அவிழ்க்கப் போய்,அது அவிழும் நேரத்தில் இன்னொரு முடிச்சு விழுகிறது. இப்படிப் பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ஒரு விறுவிறுப்பான இணையத் தொடராக உருவாகி இருக்கிறது.

இதில் துணை ஆணையாளர் வெற்றிமாறனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார் பொருத்தமான , மிடுக்கான தோற்றம், பிசிறு தட்டாத உடல் மொழி, மிகை இல்லாத நடிப்பு என்று அந்தப் பாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்திக் கவனம் பெறுகிறார். போலீஸ் கான்ஸ்டபிள் மாசாணி வேடத்தில் நடித்திருக்கும் பாடினி குமார் காக்கிச்சட்டைக்குள்ளும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் வருகிறார்.

கூடுதல் துணை கமிஷனர் அர்ஜுனாவாக வரும் குரு லக்ஷ்மணன் காக்கிச்சட்டையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறார். இப்படித் தொடரில் நடித்திருக்கும் துணைப் பாத்திரங்களில் நடித்தவர்களும், ஏன் அந்த விடுதியில் இருக்கும் சிறுவன் உட்பட அவரவர் குணசித்திரத்தில் பளிச்சிடுகிறார்கள்.திரைக்கதையின் பரபரப்பான ஓட்டத்தில் அது எங்கே நடக்கிறது கேள்வி எழாத அளவிற்கு பொருத்தமான பின்புலத்தில் எடுத்துள்ளார்கள். எனவே அலங்காரமான செயற்கையான பின்புலக் காட்சிகள் இல்லை. அந்த வகையில் இயல்பாக ஒளிப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்  என். எஸ். சதீஷ்குமார்.

டைட்டில் தொடங்கியதிலிருந்து இறுதிவரை தனது விறுவிறு பின்னணி இசையில் பரபரப்பைத் தொடர்ந்து முடுக்கி விடுகிறார் இசையமைப்பாளர் அஷ்வத். டைட்டிலில் ஒலிக்கும் ‘கொலைவெறி மாறா கொலைக்களம், ஆணவம் செய்யும் ரணகளம் ‘என்கிற பாடலில் ‘களமாடும் சிங்கம் நானோ ?’என்ற வரி, பார்த்தவர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் .அது மட்டுமல்ல கதையின் சாராம்சத்தையும் பாடல் வெளிப்படுத்துகிறது. ‘தூள்பேட்’ தொடர்,இணையத் தொடருக்கான சட்டகத்தில் சரியாக அமைந்துள்ளது .

மொத்தத்தில் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணையத் தொடர் க்ரைம் தில்லர் ரகத்தில் விறுவிறுப்பான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழிலும் தெலுங்கிலும் உருவாகி இதுவரை இரண்டு அத்தியாயங்கள் வெளிவந்துள்ள,இத்தொடர் ,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 7 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.