‘தேரே இஸ்க் மே’ திரைப்பட விமர்சனம்

தனுஷ், கிருத்தி சனோன்,பிரகாஷ் ராஜ், ப்ரியன் ஷூ பெயின் யூலி,புஷ்பராஜ் போட்டா ராய் சவுத்ரி, பரம் வீர் சிங் சீமா, விரேன் பார்மன்,முகமது ஸீ ஷான் அயூப்,சித்தரஞ்சன் திரி பாதி , ஜயா பட்டாச்சார்யா, கமல் பாத்ரா,ஆசிஷ் வர்மா, பசந்த் குமார் ,வினீத் குமார் மற்றும் பலர்நடித்துள்ளனர். இயக்கம் ஆனந்த் எல் ராய், ஒளிப்பதிவு -துஷார் காந்திராய், இசை- ஏ ஆர் ரகுமான்.தயாரிப்பு நிறுவனம் டிசீரீஸ் கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ். தயாரிப்பு -பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹுமான் ஷூ சர்மா.

இந்திய விமானப்படையில் தனுஷ் பணியாற்றுவதாகப் படம் தொடங்குகிறது. அவரது அறிவுக்கூர்மை அதிகமாக இருந்தாலும் அவருக்கு ஒரு கட்டுப்படுத்த முடியாத கோபம் இருப்பதால் அதைக் காரணம் காட்டி அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.அவரவர் கோணத்தில் முன் கதை காட்சிகளாக விரிகின்றன.

சாதாரண நோட்டரி பப்ளிக் வக்கீலான  பிரகாஷ் ராஜின் மகன் தனுஷ். அவர் படிக்கும் சட்டக் கல்லூரியில் யாருக்கும் அடங்காதவராக இருக்கிறார். அடிதடிகளில் ஈடுபடுகிறார் அவரது கோபத்தை மாற்றுகிறேன் என்று ஒரு ஆராய்ச்சி மாணவியாக அறிமுகமாகிறார் கிருத்தி சனோன்.மானிடப் பிறவியில் பெரிய அழிவைத் தேடித் தரும் தீய அம்சம என கோபத்தையும் வன்மத்தையும் நினைக்கிறார் கிருத்தி.தனுஷிடம் உள்ள கோபம்,வன்முறையை மாற்ற முடியும் என்ற நம்புகிறார் கிருத்தி. அதற்காக தனுஷுடன் நெருங்கிப் பழகுகிறார். அதைக் காதல் என்று தனுஷ் எடுத்துக் கொண்டு காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் சொன்னதையெல்லாம் தனுஷ் கேட்கிறார்.

தன் ஒரு தரப்புக் காதலை மட்டும் நம்பிக்கொண்டு நாயகி வீடு சென்று தன் காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் தனுஷ். ஆனால் நாயகியின் தந்தை பெரிய உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி. அந்தஸ்தில் உயரத்தில் இருப்பவர். அவர் தனுஷை உதாசீனப் படுத்துகிறார். ”எனக்குச் சமமாக வந்து பெண் கேட்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் முதலில் யூபிஎஸ்சி ஆரம்பகட்ட தேர்வு எழுதிவிட்டு வா” என்கிறார். அவமானத்தின் உச்சத்தில் வெளியே செல்கிற தனுஷ், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு மூன்று வருடங்களில் அந்தத் தேர்வை நிறைவு செய்கிறார் .மீண்டும் காதலியைப் பார்க்க போகிறார். அவர்  வேறொருவரின் மனைவியாக இருக்கிறார்.
தன்னை ஏமாற்றி விட்டதாக தனுஷ் அங்கே வன்முறையில் இறங்குகிறார். அதன் முடிவு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனுஷுக்கு இதில் உணர்ச்சிகளைக் காட்டும் அடர்த்தியான வேடம்.அதிகமான கோபத்தைக் காட்டும் போதும் காதலுக்காக மனம் மாறும் போதும் விமானப்படையில் கம்பீரமாகத்தன்னை வெளிப்படுத்தும் போதும் எனப் பல்வேறு விதமான நடிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு பளிச்சிடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி சனோன்  தோற்றத்தில் அழகு.உடல் மொழியிலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். படத்தின் பாதி எடையை அவர் தன் தோள்களில் சுமந்திருக்கிறார்.ஏற்ற பாத்திரத்தின் துயரங்கள் மூலம் அனுதாபத்தையும் அள்ளுகிறார்.

தனுஷின் தந்தையாக சாதாரண வக்கீல் ஆக வரும் பிரகாஷ் ராஜ் தனது தனித்துவமான நடிப்பில் மின்னுகிறார்.சில காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்.நாயகியின் தந்தையாக வரும் நடிகர் புஷ்பராஜ் போட்டா ராய் சவுத்ரி அவரது பாத்திரத்தில் அனாயாசமாக வெளிப்பட்டுள்ளார்.

இப்படி இந்தப் படம் வெறும் அலங்காரங்களும் பிரம்மாண்டங்களும் வைத்து பின்னப்படாமல் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அவரவர் கோணத்தில் உயிரோட்டமாக அமைந்துள்ளது சிறப்பு.குறிப்பாக தனுஷின் தந்தை எரியூட்டிய பிறகு புரோகிதர் தனுஷிடம் பேசும் வசனங்கள் நிலையாமைத் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.வாழ்க்கையின் சாரத்தையும் கூறுகின்றன.


ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ராய் தன் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளைப் பிரமாதப்படுத்தியுள்ளார்.குறிப்பாக விமானப்படையின் நடைமுறைகள் இயங்கு முறைகள் சார்ந்த காட்சிகள் தமிழுக்குப் புதுசு.
ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மெட்டுகள் சில சுமாராக உள்ளன பாடல்களில் மொழிமாற்றுப்படம் என்பதைக் காண்பிக்கும் அன்னியத்தனம் தெரிகிறது.

இந்தப் படம் இந்தியில் உருவாகி தமிழில் வந்துள்ளது. தமிழிலேயே தலைப்பை வைத்திருக்கலாம். ஹாலிவுட் படங்களே தமிழ் பேசும் இந்தக் காலத்தில் ஆரம்பத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆங்கிலத்திலேயே வசனங்கள் உள்ளது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.புரிதலுக்காக பிராந்திய மொழியை ப்பயன்படுத்துவது தவறே கிடையாது.

இப்படம் தனுஷ் நடிப்பை வெளிப்படுத்தும் படமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.