‘பன் பட்டர் ஜாம்’ திரைப்பட விமர்சனம்

புதுமுகம் ராஜு ஜெயமோகன், விக்ராந்த், ஆதியா, பவ்யா ட்ரிக்கா, சார்லி, சரண்யா, தேவதர்ஷினி, மைக்கேல் , டாக்டர் லங்கேஷ், நிஹாரிகா, விஜே பப்பு, பாரதி நடித்துள்ளனர்.ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார்.
இசை: நிவாஸ் கே பிரசன்னா,ஒளிப்பதிவு: பாபுகுமார்,சுரேஷ் சுப்பிரமணியம் தயாரித்துள்ளார்.

ஆள் வளர்ந்திருந்தாலும் சற்றே கூச்ச சுபாவம் உள்ளவன் சந்துரு. குறிப்பாக பெண்கள் என்றால் எதிர்கொள்ளத் தயக்கம்,  தாழ்வுணர்ச்சி கொண்டவன்.பெண்களை எப்படி அணுகுவது என்பது என்று நண்பர்களிடம் பயிற்சி பெற்று வருகிறான்.அப்படிப்பட்ட சந்துரு பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி செல்கிறான்.தன்னிடம் வகுப்பறை எங்கே இருக்கிறது என்று சந்தேகம் கேட்கும் நந்தினியைப் பார்க்கிற பொழுது உளறிக கொட்டுகிறான்.அவனது வெள்ளந்தி குணம் நந்தினிக்குப் பிடிக்கிறது.எனவே மனதால் நெருங்குகிறார்கள்.காதல் பூக்கிறது. ஆனால் சந்துருவிடம் நெருக்கமாக இருக்கும் உயிர் நண்பன் சரவணன் எதிர்பாராத வகையில் சண்டை போட்டுவிட்டுப் பிரிந்து செல்கிறான் அதற்கு காரணம் நந்தினிதான். இது சந்துருவுக்குத் தெரியாது.இதற்கிடையில் சந்துருவின் பக்கத்து வீட்டு பெண் மதுவை திருமணம் செய்து வைக்க சந்துரு அம்மா ஏற்பாடு செய்கிறார். மதுவோ வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். சரவணனை நெருங்கி நந்தினி பேசும்போது அவனது காதல் அவளுக்குப்புரிகிறது.அவளது மனம் மாறுகிறது.சந்துருவா சரவணனா என்று என்ற கேள்வியில் அவள் அதிர்ச்சி முடிவு எடுக்கிறாள்.முடிவு என்ன என்பதுதான் படத்தின் உச்சகட்ட காட்சி.

படம் இன்றைய தலைமுறையின் அவசரக் காதலைப் பேசுகிறது.அவர்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோரின் ஆற்றாமையையும் கவலையையும் முன்வைக்கிறது.அத்துடன் உண்மையான காதல், நட்பு, காதல் திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் பற்றியும் காட்சிகள் வைத்து பேசி இருக்கிறார்கள்.தலைமுறையின் மாற்றங்கள் செய்திருக்கும் மாயத்தையும் அதன் விளைவுகளையும் இந்த பன் பட்டர் ஜாம் விவாதிக்கிறது.

சந்துருவாக நடித்துள்ள அறிமுக நாயகன் ராஜு தோற்றத்திலும் நடிப்பிலும் புதுமுகம் போல தெரியாமல் வெளிப்பட்டுள்ளார்.இயல்பாக நடித்து கவர்கிறார். அம்மா சரண்யா பேச்சைச் கேட்கும் அம்மா பிள்ளையாக நடித்து பெண்கள் மனதிலும் ஒட்டிக்கொள்கிறார்.

இந்த ராஜு, நந்தினியாக வரும் பவ்யாவுடன் செய்யும் காதல் கலாட்டாக்கள் இளைஞர்களைக் கவரும்.
இந்தக் கதாபாத்திரங்களுக்குள் சந்தர்ப்பங்கள் ஆடும் விளையாட்டு ரசிக்கக் கூடியவை.அவை திரைக்கதையின் திசை மாற்றத்திற்கு உதவக்கூடியவை.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு இன்ஃப்ளூயன்ஸர் ஆக ஆசைப்படும் பவ்யா அழகான நடனம், இயல்பான நடிப்பு என்று வெளிப்படுகிறார்.

ராஜுவின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா சொந்த மகனிடம் காட்டும் பாசம், கோபம் போல் காட்டி அந்தக் கதாபாத்திரத்தை நிஜமாக்குகிறார். தேவ தர்ஷினியும் அவருக்கு ஈடு கொடுக்கிறார். இருவரும் சேர்ந்து பேசிக் கொள்வதே நகைச்சுவைக் காட்சிகள் ஆகின்றன.எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருக்கும் சார்லி அவ்வப்போது சில வார்த்தைகள் பேசியே சிரிப்பூட்டுகிறார்.

வி ஜே பப்பு காமெடி காதலனாக வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஆதியா தொடக்கத்தில் துறுதுறுப்பாக நடித்து இறுதியில் படத்தின் கதையில் மாற்றம் செய்யும் கதாபாத்திரமாக மாறி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.

கல்லூரியின் முன்னாள் மாணவனாக செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் வரும் விக்ராந்த் கெஸ்ட் ரோலில் நடித்து அப்ளாஸ் பெறுகிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் தாளம் போட வைப்பதுடன் முணுமுணுக்க வைக்கிறது. படத்துக்கு பாடலும், இசையும் பலம்.

பாபுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது கேமரா இளமையின் வண்ணக் கொடிகளைப் பறக்க விடுகிறது.

ராகவ் மிர்தாத் இன்றைய சமகால சமுதாயப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமைத்து விறுவிறுப்பான திரைக்கதை உருவாக்கி இயல்பான பளிச்சென வசனங்கள் எழுதி நல்லதொரு கலகலப்பான திரைப்படத்தை அளித்துள்ளார்.

‘பன் பட்டர் ஜாம்’ – சமகால இளைய -மூத்த தலைமுறைகளில் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படமாக ரசிக்க வைக்கிறது.கலகலப்பான காட்சிகள் நிறைந்த இந்தப் படம் நிச்சயம் கேளிக்கை அனுபவத்தை முழுமையாக்கும்.