‘பராசக்தி’ திரைப்பட விமர்சனம்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா டகுபதி, சேத்தன்,ஆனந்த், குரு சோமசுந்தரம்,குள்ளப்புல்லி லீலா,பிருத்வி ராஜன்,காளி வெங்கட் ,பாசில் ஜோசப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

ட்ரை பண்ணி வாக் பண்ணி கட் பண்ணி டர்ன் பண்ணி போன் பண்ணி என்று பண்ணி லாங்குவேஜ் செய்யும் இந்தக் காலத்தில் தமிழ்நாடு கடந்து வந்த மொழிப் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகிற படம் இது. வரலாற்றின் சில பக்கங்களைப் பின்னணியாக வைத்து கதையமைத்து இந்த ‘பராசக்தி’ உருவாகியுள்ளது.

மூடநம்பிக்கைக்கு எதிராக அந்தக்கால ’பராசக்தி’ அன்று பரபரப்பாகப் பேசப்பட்டது. மொழி உரிமைக்கு ஆதரவான இந்த ’பராசக்தி’ உருவாகி உள்ளது.

இந்தியாவில் இந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு பிறமொழி பேசும் மாநிலங்களில் மக்களின் விருப்பத்திற்கும் ஜனநாயக உரிமைக்கு எதிராகத் திணித்து தனது வல்லாதிக்கத்தைக் காட்டிய வடவராதிக்கத்திற்கும் எதிராகத் தமிழ்நாட்டில் புறநானூற்றுப் படை என்கிற மாணவர் திரள் கிளர்ந்து எழுகிறது. அது  தனது பிரச்சாரத்தின் மூலம் மக்கள் இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.அதை அடக்கி ஒடுக்கி நசுக்கி ஒழிக்க ஆளும்அதிகார வர்க்கம் முயல்கிறது . இப்படி ஒரு கிளர்ச்சி மக்கள் புரட்சியாக மாறிய அந்த வரலாறு கதையாக மாறி 162.43 நிமிடங்கள் கொண்ட இந்த ’பராசக்தி’  திரைப்படமாக உருமாறி இருக்கிறது.இந்தப் படத்தில் மாணவர் தலைவர் செழியனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் .இது சிவகார்த்திகேயனின் 25 வது படம்.மாணவப் பருவத்தில் இருந்து மெல்ல வளர்ந்து அவர் ஆளுமையாக விளங்கி ஒரு திரளின் தலைவனாக உருவாகும் அப்பாத்திரத்தினைச் சரியாகப் புரிந்து நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் மிகை நடிப்பு காட்டாமல் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .எதிர் வீட்டுக் காதலியாக வரும் ஸ்ரீலீலா இப்படத்தில் ரத்ன மாலா பாத்திரத்தில் வருகிறார். தெலுங்கில் பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழியுரிமையின் தன்மையைப் புரிந்து கொண்டு இவர்களுக்கு ஆதரவு தருபவராகவும் அவர் நடித்துள்ளார். அவரது தோற்றம் உடல் மொழி வசனம் நடிப்பு அனைத்தும் படத்திற்குப் பக்கபலமாக இருக்கின்றன.


எப்போதும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஓர்ஆதிக்க சக்தி எழும். தன் அதிகாரத்தை கொண்டு அடக்க முயலும்.தன்னுள் எழும் ஆணவத்தின் உச்சிக்குச் சென்று இவர்களை ஒடுக்கி ஒழிக்க நினைக்கும் .அப்படி ஒரு போலீஸ் அதிகாரியாக திரு என்கிற பாத்திரத்தில் ரவி மோகன் நடித்துள்ளார்.
அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக கொடுங்கோலனாக வருகிறார் . இரக்கம் இல்லாத அந்தப் பாத்திரத்தில் சரியாகவே பரிமளித்துள்ளார் . நடிகர் ரவி மோகனை வெறுக்க வைக்கும் அளவிற்கு அந்தப் பாத்திரம் இருக்கிறது. அது அவரது நடிப்பிற்கான வெற்றி எனலாம்.

பேரறிஞர் அண்ணா பாத்திரத்தில் சேத்தன் வருகிறார். சார்ந்த காட்சிகள் குறைவு என்றாலும் அது படத்திற்கு சரியான இடத்தில் இடம்பெற்று செறிவூட்டுகிறது.

சிவகார்த்திகேயன் தம்பியாக சின்னத்துரை பாத்திரத்தில் வரும்  அதர்வா முரளி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அவரது பாத்திரத்தின் முடிவு படத்தின் வேகத்தை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.படத்தில் புறநானூற்று படைக்கு ஆதரவாக மொழி உரிமைக்கு ஆதரவாகவும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவராக மைக்கேல் ரெட்டி பாத்திரத்தில் நடிகர் ரானா டகுவதி வருகிறார் .அவரது திரையிருப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.

கதை சென்னை, மதுரை, திருச்சி,கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி. சிதம்பரம் , டில்லி என்று பல இடங்களுக்குத் தாவிச் செல்கிறது.இயல்பான காட்சிகள் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றன. ஒரு வரலாற்றுத் தன்மையோடும் ஒரு முழு நீள திரைப்படத்திற்கான காட்சித் திருப்பங்களோடும் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சுதா.அவரைப் புரிந்து கொண்டு ஒரு முழுப்படத்தையும்  வரலாற்று தன்மையோடு ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தில் ஏராளமான காட்சிகள் ரயிலில் படமாகியுள்ளன. பின்புலமாக வரும் ரயில் வரலாற்று சாட்சியம் கூறும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

தனது நூறாவது படமாக இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தின் பின்னணி இசையில் அந்த வரலாற்று இசையைக் கொண்டு வந்து அந்தக் காலகட்டத்தை நிறுவியுள்ளார்.பாடல்களிலும் குறையில்லை.

மொழி உரிமை நமது உரிமை இன்னொரு மொழியின் மேலாதிக்கம் என்பது மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பதை பிரச்சார தொனி இல்லாமல் இயல்பான வசனங்கள் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் .மொழி என்பது ஒரு அடையாளம் அடையாளத்தை அழிப்பது ஆன்மாவை அழிப்பது போன்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள். அடையாள அழிப்பு அந்த இனத்தையே அடிமைப்படுத்தி விடும் என்ற விழிப்புணர்வுக் கருத்தையும் விதைத்துள்ளார்கள்.
மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் என்று மொழியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சரியான பதிலாகவும் அந்த வசனங்கள் இருக்கும்.

செழியன் பாத்திரம் நாட்டின் ஒற்றுமை பற்றி கவலை இல்லையா என்கிற இந்திரா காந்தியிடம் பேசும் ஒரு வசனம் உண்டு.’வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம்.
எங்களுக்குத் தேவை யூனிட்டி. உங்களுக்கு தேவை யூனிபார்மிட்டி இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மேடம் ‘கூர்மையான வசனங்களுக்கு இது ஒரு சோறு பதம்.

மொழி ஆதிக்க அதிகாரத்துக்கு ஒரு பயம் வந்தால் அங்கே  யார் ஆட்சி செய்தாலும் அங்கே நடப்பது அண்ணாதுரை ஆட்சி தான் என்று அண்ணா சொன்னது இன்றும் நினைத்துப் பார்க்க வைக்கும்.

இந்தியை எதிர்ப்பதில்லை இந்தி ஆதிக்கத்தையே, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என்கிற புரிதல் ஏற்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளன.
’தீ பரவட்டும்’ என்கிற முழக்கம் ’நீதி பரவட்டும்’ என்று தணிக்கையால் மாற்றப்பட்டுள்ளது. அது கூட இன்று பொருத்தமாகத்தான் இருக்கிறது.சமூகம், பாலினம் போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அந்த ’நீதி பரவட்டும்’  முழக்கம் இன்று தேவைப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது என்று கூறலாம்.      

1959 இல் தொடங்கி 1967 இல் இருமொழிக்கொள்கை தமிழகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கதை முடிகிறது. வரலாற்று புத்தகங்களை வைத்துக்கொண்டு அப்படி இல்லை இப்படி இல்லை என்று சிலர் கூறக்கூடும் .அது சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்களின் கருத்து .ஏனென்றால் ஒரு திரைப்படம் எடுக்கும் போது அதற்கெனச் சில இலக்குகள் மட்டுமல்ல விதிமுறைகளும்வரைமுறைகளும் உண்டு .தணிக்கை விதிகளுக்கு உட்பட்டுத் தான் எடுக்க வேண்டும். எனவே அந்த எல்லைக்குள் இந்த கதையைப் பின்னி அழகாக உருவாக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.வரலாற்று நாவல் போல வரலாற்றையும் புனைவையும் கலந்துதான் இப்படிப்பட்ட படங்கள் எடுக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கரா வெற்றி பெற்றுள்ளார்.

படத்தில்  ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, அறிஞர் அண்ணா, கலைஞர், பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம் போன்ற அரசியல் தலைவர்களும் வருகிறார்கள். அவரவர்களுக்கான தோற்றத்திலும் குணச்சித்திரத்திலும் வருகிறார்கள்.

இந்தப் படத்தில் பிற மொழி பேசும் பாத்திரங்களும் வருகின்றன. உண்மையில் இன்று ஒரு மேலாதிக்க மொழிக்கு எதிராக அனைத்து தனியுரிமை கொண்ட மொழிகளும் உரிமையும் விழிப்புணர்வு பெற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அந்த வகையில் இது மொழி கடந்து ரசிக்கப்பட வேண்டிய திரைப்படமாக மாறி உள்ளது.

காயத்தின் வடு எப்போதும் வலியைப் பேசிக்கொண்டே இருக்கும். அப்படியே இப்படிப்பட்ட வரலாற்று வடுக்களை நாம் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் சரியான நேரத்தில் வந்துள்ள திரைப்படம் என்று கூறலாம் .இந்த மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.