‘பாம்’ திரைப்படத்தில் வித்தியாச முகம் காட்டும் அர்ஜுன்தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸின் தோற்றம், உடல் மொழிக்கு மட்டுமல்ல அவர் குரலுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது.பின்னணிக் குரல் கலைஞர்கள் பலரும் வியந்து பார்க்கும் குரல் அவருக்குச் சொந்தமானது.என்ன ஒரு குரல் என்று வியக்கிறார்கள்.

ஒரு நடிகராக கைதி, மாஸ்டர், விக்ரம் ,குட் பேட் அக்லி படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் .குறிப்பாக எதிர்மறை நிழல் விழும் பாத்திரங்களின் மூலம் கவனம் பெற்றவர். போர், ரசவாதி, அநீதி போன்ற மாறுபட்ட கதைக்களங்களிலும் கதை நாயகனாக நடித்துக் கவனம் ஈர்த்தவர். குட் பேட் அக்லி படத்தில் இரு வேடங்களில் தனக்கான மைதானம் கிடைத்த போது நன்றாகவே அடித்து ஆடினார். மாபெரும் பரப்பு கொண்ட அஜித் ரசிகர்களின் இதயங்களிலும் இடம்பெற்றார்.

அப்போது,ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த போது “இந்த பாராட்டுக்கள் என்னை சேர்ந்ததில்லை. என் மீது நம்பிக்கை வைத்து அஜித் சார் என்னை நம்பி படத்தில் வாய்ப்பளித்த சகோதரர் ஆதிக் இருவரையுமே சேரும்”என்று நெகிழ்ச்சியுடன் கூடியிருந்தார்.ஒரு இயக்குநரின் கைப் பாவையாக இயங்கி அந்தப் பாத்திரத்தோடு பொருந்துகிற அர்ஜுன்தாஸ் , தனக்கான ஒரு நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வருகிறார்.

அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘பாம்’. ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், ‘பாம்’ படத்தில் முழுக்க முழுக்க ஒரு மண் சார்ந்த கதையில் பழைய பழக்க வழக்கங்கள் மூட பழக்கங்கள் மூழ்கிப் போயிருக்கும் மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதி மக்களை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்புள்ள பாத்திரத்தில்நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.அந்த மண்ணின் மைந்தனாக முழுக்க முழுக்க மாறி வித்தியாசமான தோற்றத்தில் முகம் காட்டி ஈர்த்திருக்கிறார்.சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட் பாத்திரமாக இல்லாமல் அந்த பாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது.அவரது குரலுக்கும் அந்தப் பாத்திரத்தில் ஒரு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஒரு நடிப்புக் கலைஞராக தன்னைச் சுற்றி இருந்த அனைத்து உருவகங்களையும் துடைத்தெறிந்திருக்கிறார்.ஒரு நடிகர் சார்ந்து எந்த இமேஜ்ம் வரக்கூடாது என்பதை உணர்ந்து அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள அர்ஜுன் தாஸ்,’பாம்’ திரைப்படத்தில்  தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

‘பாம்’ படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு வணிக மதிப்பு கொண்ட கதாநாயகனாக உயர்த்திக் கொண்டுள்ளார் என்கிறது படக் குழு.

வாழ்வின் புதிர்களைப் பேசும் பொழுது போக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படத்தை ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட புகழ் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
இப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை மற்றும் நடிப்பால் மிரட்டிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தின்
காதல் காட்சிகள் மற்றும் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறாராம். நிச்சயம் இந்த படம் அர்ஜுன் தாஸுக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில், போகும் நபர்களை துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்…பாம்…பாம்…” என்று கூவிக் கூவி விளம்பரப்படுத்துவதும், காந்தக்குரல் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று பிரபலமாகி, தீயாகப் பரவி வருகிறது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, அதற்கு ஒரு தரமுத்திரையுடன் வணிக மதிப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையுண்டு.அவர் முதல் முறையாக முழு நீள நகைச்சுவை வணிக ரீதியிலான படத்தில் நடித்திருக்கும் ‘பாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அலையாகப் பரவிக்கொண்டிருக்கிறது.