அஞ்சலி சிவராமன், சாந்திப்பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரீத்து ஹாருண் , டிஜே அருணாச்சலம், சஷாந்ங்க் பொம்மி ரெட்டி பல்லி,எம்.ஜே. ஸ்ரீராம்,பார்வதி பாலகிருஷ்ணன், நேகா,இஷா, உமாதேவி, மித்ரா,தியானாஅக்ஷரா ரத்தீசன், விக்ரம் மோசஸ் ,பிரியா, பிரபாகரன் ,ராகுல் ரவிக்குமார், காயத்ரி, அம்ரிதா நடித்துள்ளனர். வர்ஷா பரத் இயக்கியுள்ளார் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது.
மனித உடல் வளர்ச்சியில் வளர்சிதை மாற்றம் ஏற்படும் போது உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் சில தாக்கங்கள்,மாற்றங்கள் ஏற்படும். அப்போது அந்த பதின்ம வயதில் மனம் அலைபாயும் ; உணர்வுகள் ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்.பருவ மாற்றம் தந்த கிளர்ச்சி புதுவிது புதிரான அனுபவமாக உணர வைக்கும். கிளர்ச்சிக்கும் மீறலுக்கும் இடம் கொடுக்கும்.அதைச் சுதந்திரம் என்றும் கட்டுடைப்பு என்றும் கருதிக் கொள்ளும்.ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.அந்த ஊசலாட்டத்தைச் சரிவர நிர்வகித்தால் அந்த கட்டத்தைக் கடந்து விடலாம்,தவறிவிட்டால் அந்த உணர்வு எழுச்சியைக் காதல் என்று நம்பித் தடம் மாறி விடக்கூடும். அந்த உணர்வெழுச்சி மாற்றங்களை உரையாடவேண்டியது அவசியம்.இந்தச் சூழலில் வந்திருப்பது தான் ‘பேட்கேர்ள்’ திரைப்படம். அப்படம் சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
பள்ளி வயது நாயகி அஞ்சலிக்கு உடன்படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு,கண்மூடித்தனமாக அவனை நம்புகிறார். இது பெற்றோருக்குத் தெரிகிறது. கண்டிக்கிறார்கள். கைமீறிப் போவது தெரிந்தவுடன் வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி,மீறல் குணம் கொண்டவராக மாறுகிறார். ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகெல்லாம்,எனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி தான் வாழ்வேன்”, என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். விடுதியில் தங்கிப் படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், உறவு என்று போகிறார்.அதன் மூலம் இந்த சமூகத்தைப் பழிவாங்குவதாகவும் சுதந்திரம் பெற்றதாகவும் நினைக்கிறார்.ஒரு நிலையில் அது பொய்யான காதல் என்பதை உணர்ந்து புழுங்குகிறார்.பிறகு வேலைக்குப் போகும் பருவத்தில் மனம் போன ஒரு வாழ்க்கை. அதிலும் சண்டை பிரிவு என்று வருகிறது.ஒரு கட்டத்தில் தன்னை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.இந்த குழப்பங்களுக்கு இடையே தான் யார் ?தனக்கான பயணம் எது? என்பதை நாயகி அஞ்சலி தேடிச் செல்வது தான் ‘பேட்கேர்ள்’ படத்தின் மீதிக்கதை.
தவறான கட்டுப்படுத்தல்கள் மூலம் அதை மீறி செல்ல வேண்டும் என்று அந்த உணர்ச்சி வேகத்தில் தடம் மாறிப் போகிறார்கள் என்பதைச் சொல்கிறது படம்.அப்படி வரும் பாதிப்புகளுக்கு கட்டுப்படுத்தும் சமூகமே காரணம் என்கிறார்கள்.பெண்களைத் தங்கள் போக்கில் நிதானமாக சிந்திக்க வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்கள், ஒவ்வொரு ரீதியாக அடிமைப்படுத்தப் படுவதையும் அதில் இருந்து மீண்டு வருவதையும் இயக்குநர் வர்ஷா பரத் சொல்லியிருக்கிறார்.ஆனால் படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் பெற்றோரை பதற்றத்துக்குள்ளாக்கும். பெண்கள் விடுதலை அடைய வேண்டிய ஏராளமான தளைகள் உள்ளன .ஆனால் பாலியல் சுதந்திரம் பற்றி மட்டும்தான் படம் பேசுகிறதோ என்று தோன்றுகிறது.
பள்ளிப் பருவத்தில் பாதை மாறிச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சி ஊட்டுபவை.அதனால்தான் இந்தப் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்கும் போலிருக்கிறது.இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கான படம் தான்.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், முழு படத்தையும் சுமந்துள்ளார். பள்ளி மாணவியிலிருந்து, கல்லூரிமாணவி, வளர்ந்த நிலை என்று வெவ்வேறு தோற்ற மாற்றங்களைக் காட்டுகிறார். தன் நடிப்பாலும் கவர்கிறார்.திரைக்கதை , காட்சியமைப்புகள் மெல்ல நகர்ந்தாலும், அஞ்சலி சிவராமனின் நடிப்பு அதனை ஈடு செய்கிறது.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்திபிரியாவின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் கச்சிதம். இருதலைக் கொள்ளியாக அவர் தவிப்பது நல்ல நடிப்பு வெளிப்பாடு.சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹரூன், டீஜே, சுஷாங் பொம்ம ரெட்டிபல்லி என மற்ற பாத்திரங்களில் நடித்தவர்களும் குறையில்லாமல் செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக வந்துள்ளன.அமித் திரிவேதியின் இசையிலும் குறையில்லை. ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு கதாபாத்திர உணர்வுகளைக் கடத்துகின்றது.
எழுதி இயக்கியிருக்கும் வர்ஷா பரத், பெண்களுக்கு பூட்டப்படும் அடிமைச் சங்கிலி அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வதையும்அதை ஏற்றுக் கொண்டு தொடரும் பெண்களையும் காட்டியுள்ளார்.
இந்தச் சமூகத் தளைகளும் கட்டுப்பாடுகளும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்துக் காட்டி இருப்பது ஒருபக்கச் சாய்வாகத் தோன்றுகிறது.
படஉருவாக்கத்தைப் பொறுத்தவரை வர்ஷா பரத் ஒரு கைதேர்ந்த திரைப்பட படைப்பாளியாக வெளித்தெரிகிறார்.திரை மொழி புரிந்து கொண்டு அவர் இயங்கி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ‘பேட் கேர்ள்’ திரைப்படமாகப் பார்ப்பவர்களுக்கு பிடிப்பதாகவும் உணர்வு ரீதியாகப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் படியும் இருக்கும்.


