‘போகி’ திரைப்பட விமர்சனம்

நபி நந்தி, ஷரத், லப்பர் பந்து சுவாசிகா, பூனம் கெளர், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் எஸ். விஜய சேகரன், ஒளிப்பதிவு ராஜா சி சேகர், இசை மரிய மனோகர் ,படத்தொகுப்பு சுரேஷ் ,பாடல்கள் சினேகன், வசனம் எஸ்.டி .சுரேஷ் குமார், கலை ஏ .பழனிவேல், சண்டைப் பயிற்சி அன்பறிவ் – மிராக்கள் மைக்கேல், நடனம் அசோக் ராஜா, இணைத் தயாரிப்பு கே டி எஸ் பாஸ்கரன், கே. சுப்பிரமணியன், கே.குணசேகர பாண்டியன், எம். கார்த்திகேயன், வி. சி. சூரியன்.தயாரிப்பு வி  சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்.

உலகில் இன்று பெரிய வியாபாரமாக இருப்பது பெண் உடல்தான் .பெண் உடல் சார்ந்துதான் எத்தனை எத்தனை மோசடிகள், அநியாயங்கள், குற்றங்கள்.

இது சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த காலம். ஒவ்வொருவருமே தங்களை முன்வைத்து தங்களை விளம்பரப்படுத்தி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.ஒரு காலத்தில் புகைப்படம் எடுக்கவே பயந்தவர்கள் இப்போது தாங்களாக விளம்பரம் செய்து கொள்கிறார்கள் ,அதில் உள்ள ஆபத்தை அறியாமலேயே.இது ஒரு புறம் இருந்தாலும் ரகசிய கேமராக்களின் மூலம் எதுவும் அறியாத  அப்பாவிகளை அவர்களது அந்தரங்கங்களைப் படமாக்கி மிரட்டுவது பாலியல் சுரண்டல் செய்வது பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்கள் ஒரு பக்கம் அதிகரித்து வருகின்றன.இப்படிப்பட்ட நாச கார கும்பலைத் தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்க காவல்துறை முயல்கிறது.காவல்துறையின் வேட்டை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்தக் கொடியவர்களைத் தேடிப்பிடித்து நாயகன் நபி நந்தியும், ஷரத்தும் கொலை செய்கிறார்கள்.படத்தில் இது ஒரு திசையின் கதை என்றால் இன்னொரு திசையில் பால்யவயதில் பிரிந்து சென்ற தோழியை பல ஆண்டுகளுக்குப் பிறகு நாயகன் மீண்டும் சந்திக்கிறார். காதலியிடம் மலர்ந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் தனது கொலை வெறிப் பயணத்தை,அதாவது அந்த கொடியவர்களை களை எடுக்கும் பயணத்தைத் தொடர்கிறார். நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ?அதில் நண்பனும் இணைந்து கொண்டது ஏன்?என்ற கேள்விகளுக்குப் பதிலாக சமகாலத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் பின்னணியில் கதையாக அமைத்து உருவாக்கப்பட்டுள்ள படமே ‘போகி’.

நபி நந்தி அறிமுக நாயகன் தான் இருந்தாலும் அப்படித் தெரியாமல் அனுபவசாலி போல் நடித்துள்ளார்.பாசக்கார அண்ணனாகவும் தனது தங்கைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராகப் பழி தீர்க்கும் காட்சிகளில் ஆவேசம் காட்டுபவராகவும் நடித்துள்ளார்.

நாயகனின் தங்கையாக, வருகிறார் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, தோற்றத்தில் இளமையாக இருக்கிறார். பாந்தமான முகம்,அவர் மீது பரிதாபம் வர வைக்கிறது.போக்குவரத்து வசதிகள் எட்டாத மலைக் கிராமத்தில் இருக்கும் அவர், முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கனவோடு இருப்பவர்.அப்படிப்பட்டவர் கொடி மிருகங்களால் சிதைக்கப்படும் போது கலங்க வைக்கிறார்.

நாயகனின் பழிவாங்கி களை எடுக்கும் பயணத்தில் அவருடன் பயணிக்கும் ஷரத், ஒரு பாடலில் வந்து நடனமாடி ஈர்க்கும் பூனம் கவுர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், கொடூர தோற்றத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைக்காரன்’ கார்த்தி போன்ற துணைப் பாத்திரங்களில் வந்துள்ள பிற நடிகர்களும் கதையோட்டத்தில் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் கால மாறுபாடுகளைக் காட்சிகளில் பிரதிபலிக்கிறார்.இந்த மாற்றத்தை பார்வையாளர்கள் உணரும் வகையில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், சினேகனின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் சோடை போகாத ரகங்கள். பின்னணி இசையிலும் குறையில்லை.

படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் மற்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவ் ஆகியோரது பணிகளும் படத்திற்குப் பலம் தான் .எஸ்.டி.சுரேஷ்குமாரின் வசனமும் பளீர் வகை.

எழுதி இயக்கியிருக்கும் விஜயசேகரன்.எஸ்- சமூக பிரச்சினையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.அனைவரும் கண்டு கொள்ளாமல் கடந்து போகும் பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையைச் சமகால நாட்டு நடப்புகளோடு இணைத்துப் படமாக்கி இருக்கிறார்.படத்ததின் பட்ஜெட் குறுக்கே நின்றாலும் படம் முழுக்க சோக ராகம் பாடாமல் நகைச்சுவையாகவும், காதல், ஆக்‌ஷன், பாடல் என்று வணிக அம்சங்களையும் இணைத்துள்ளார்.

ஸ்மார்ட் போன்கள் சாதாரணமாகிவிட்ட இந்தக் காலத்தில் அதனால் விளையும் கேடுகளையும் கூறியுள்ளார் இயக்குநர் விஜயசேகரன்.எஸ்.நேரடியாகச் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கதையாக்காமல் வெவ்வேறு தளங்களில் பயணிக்க வைத்து திசை மாற்றி விடுவது பின்னடைவாகும்.

இப்படிக் குறைகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட நோக்கத்தைக் கருதி இந்தப் படத்தை பார்க்கலாம்.

மொத்தத்தில், ‘போகி’ பாலியல் கொடியவர்களுக்கு எதிரான தீ .