‘யூத்’ திரைப்பட விமர்சனம்

கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் ,பிரியதர்ஷினி யாதவ், தேவதர்ஷினி, நளினி,சுராஜ் வெஞ்சர மூடு நடித்துள்ளனர். கென் கருணாஸ் இயக்கியுள்ளார். ஜி .வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.விக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். நாஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ராமு தங்கராஜ். பர்வதா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி ராம், சுலோச்சனா குமார் தயாரித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் பதின் பருவத்தில்  வளர் சிதை மாற்றங்களைத் தொடர்ந்து வரும் பருவநிலை மாற்றங்களால் தோன்றும் உணர்வுகளை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள மூணு காதலா? என்றால் ஆமாம் என்கிறது ‘யூத்’  திரைப்படம்.அப்படி என்ன கதை அது?

ஒரு பருவத்தில் எதிர்பாலின ஈர்ப்பில் ஆண் பெண் இடையே தோன்றுவது, பருவ ஈர்ப்பா? நட்பா ? காதலா? காமமா? என்று பிரித்தறிய முடியாத குழப்பங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட  வயதில் இருக்கும் கென் கருணாஸ் படிப்பில் ஆர்வமின்றிச் சுற்றித் திரிகிறார்.பொறுப்பும் இல்லாமல் இருக்கிறார்.வீட்டிலும் கெட்ட பெயர். சக மாணவர்களிடம் வம்பு அடிதடி என்று பள்ளியிலும் பெயர் கெடுகிறது.இப்படிப்பட்டவர்,
முதலில் ஒரு சக வகுப்பு மாணவியால் ஈர்க்கப்படுகிறார் .அவரைக் காதலிக்கிறார். அதற்குள் இவரைக் காதலிப்பதாக இன்னொரு மாணவி அறிமுகமாகிறார்.அவருடன் நெருக்கமாகிறார் கென் கருணாஸ்.இதனால் முதலில் வந்தவர் கோபப்பட்டுப் பிரிகிறார்.முதல் காதலியைப் பிரிக்க வந்தவர் இரண்டாவது நபர்,என்று பிறகு புரிகிறது.அது ஒரு சதி வேலை என்றும் தெரிகிறது.இரண்டு காதலும் பொய்த்துப் போகிறது.இரண்டும் கெட்டான் நிலையில் சிக்கித் தவிக்கிறார். பிறகு கென் கருணாஸிடம் மூன்றாவதாக ஒரு பெண் அறிமுகமாகிறார்.கென்னிடம் நெருக்கமாகப் பழகுகிறார். உரிமை எடுத்துக் கொள்கிறார். அவரைக் காதலிப்பதாகக் கூறும் போது, நட்பாகத்தான் பழகினேன் அப்படி எல்லாம் ஒன்றும் நமக்குள் இல்லை என்கிறார் அவர். வாழ்க்கையில் ஒன்று சேரும் அளவிற்கு நம்பிக்கையான அம்சங்கள் எதுவும் இல்லையே என்கிறார்.உடைந்து போகிற கென்னிடம் பிளஸ் டூவில் தேறிவிட்டால் உன்னை காதலிக்கிறேன் என்ற நிபந்தனையுடன் பிரிகிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த 141.47 நிமிடங்கள் கொண்ட ‘யூத்’ படத்தின் மீதிக் கதை.

கென் கருணாஸ் இதில் பிரவீன் என்கிற பாத்திரத்தில் வருகிறார். பத்தாவது படிக்கும் மாணவனாக அறிமுகமாகி பிளஸ் டூ முடிக்கும் மாணவராக ஆகும் வரை கதை நிகழும் காலமாக இருக்கிறது .
இது 2014 -2016 காலக்கட்டக் கதை. கென் அந்தப் பதின் பருவத்தில் வாலிபனாகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார். துள்ளலான நடிப்பு நகைச்சுவை நடனம் என்று வணிக ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தியதுடன் சின்ன சின்ன முக பாவனைகள் மூலம் நுணுக்கமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இயக்குநர் என்கிற போது பல முதிர்ச்சியான காட்சிகளும் இருப்பது வியப்பூட்டுகிறது.

நாயகனின காதல் பயணத்தில் வரும் மூன்று கதாநாயகிகள் முதலில் வரும் மீனாட்சி தினேஷ் வசீகரமான தோற்றத்தில் வந்து அந்தப் பாத்திரத்தில் குறை சொல்லாமல் நடித்திருக்கிறார் .அடுத்து சோனல் பாத்திரத்தில் மிக நெருக்கமாக  நடித்துள்ள பிரியதர்ஷினி யாதவ் மீனாட்சி தினேஷின் சகோதரி போலத் தோன்றுகிறார். அவரும் தனக்குக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். மூன்றாவதாக கனகா பாத்திரத்தில் வரும் அனிஷ்மா அனில் குமார் பல்வேறு நடிப்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு நன்றாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். கதாநாயகன் கென் கருணாஸின் அம்மாவாக வரும் தேவதர்ஷினி பக்தி, வேண்டுதல், காணிக்கை, நேர்த்திக் கடன் என்று நம்பிக்கை உள்ள ஒரு நடுத்தரவர்க்க அம்மாவாக  வந்து ஈர்க்கிறார். அவரது கணவராக வரும் சுராஜ் வெஞ்சர மூடு அந்த பேக்கரி கடை முதலாளியாகவும் காதல் கணவராகவும் பிள்ளை மீது உள்ள அக்கறையை மனதில் பொத்தி வைத்துக் கொண்டு வெறுப்பை வெளிப்படுத்தும் நடுத்தர வர்க்கத்துத் தந்தையாகவும் நடித்துள்ளார். கென் படிக்கும் பள்ளியின் பிரின்சிபாலாக நளினி நடித்துள்ளார்.

இப்படி ஒரே பாத்திரத்தை மட்டும் மையப்படுத்தாமல் பல பாத்திரங்கள் தம் இயல்பைக் காட்டும் வகையில் பாத்திரச் சித்தரிப்புகள் செய்து இந்தத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

கென் கருணாஸின் நண்பர்களாக வரும் உடல் பருமன் கொண்ட வாலிபன், கண்ணாடி போட்ட, மீசை இல்லாத என்று வரும் அனைவருமே மனதில் பதிகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர்கள் காதலுக்கு குறுக்கே வரும் அந்த உடல் பருமன் கொண்ட பெண்ணும் அவரது தோழியும் என்று அனைவருமே அவரவர் இயல்பில் வந்து பதிகிறார்கள்.ஒளிப்பதிவாளர் விக்கியின் ஒளிப்பதிவில் இளமை கொண்டாட்டம் துறுதுறுப்பு என்று அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.பின்புலங்களை விட பாத்திர உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உள்ளார்கள்.

பள்ளி வகுப்பறைக் காட்சிகள் மூலம் கலகலப்பூட்ட முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் ஒரு தமிழாசிரியரைக் குரல் கேலி செய்துள்ளது உறுத்துகிறது.

சிறு சிறு பாடல்களை ஆங்காங்கே தூவி அனைத்து பாடல்களையும் கேட்கும்படி இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார் .பின்னணி இசையிலும் இளமைக் கொண்டாட்டமாகத் திகழும் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் .

பதின் பருவத்து காதல் பற்றிச் சொல்ல வந்தாலும் துளிக் கூட ஆபாசக் கலப்பில்லாமல் அருவருப்பான நகைச்சுவை இல்லாமல் சலிப்பூட்டும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் ஒரு படத்தை அதுவும் தன் முதல் படத்தை அதுவும் 24 வயதுக்குள் இயக்கியுள்ள கென் கருணாஸைக் கைக்குலுக்கிப் பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி அதற்குள் ஒரு நல்ல கருத்தையும் சொல்லும்படியாகவும் சென்டிமென்ட் காட்சிகளை இணைத்தும் தன் வயதுக்கு மீறிய படமாக இயக்கியுள்ளார் இயக்குநர்.அந்த வகையில் ஓர் இயக்குநராக ஓர் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு திரையரங்கு அனுபவமாக மாற்றித் தன் முதல் படத்திலேயே அவர் சராசரிக்கு அதிகமாக மதிப்பெண் பெற்று தேறியுள்ளார் என்று கூறலாம்.