‘ரஜினி கேங்’ திரைப்பட விமர்சனம்

ரஜினி கிஷன், திவிகா, மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி நடித்துள்ளனர்.எம். ரமேஷ் பாரதி எழுதி இயக்கியுள்ளார். இசை -எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – என்.எஸ். சதீஷ்குமார், படத்தொகுப்பு – ஆர்.கே. வினோத் கண்ணா, மிஸ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி எஸ் பதம்சந்த் ,சி அரியந்த்ராஜ்,ரஜினி கிஷன் தயாரித்துள்ளனர்.

ரஜினி கிஷனும், திவிவிகாவும் காதலர்கள்.காதலுக்கு எதிர்ப்பு என்பதால் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஓடும்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடன் கல்கியும் அந்தக் காரில் ஏறிக்கொண்டு அவர்களுடன் செல்கிறார். இரவு நேரத்தில் பயணம் தொடர்கிறது.ஒரு கட்டத்தில் எங்கு சென்றோம் என்பது தெரியவில்லை.இவர்களைப் பலரும் தேடி வருகிறார்கள்.இந்நிலையில் ரஜினி கிஷன் – திவிகாவுக்குத் திருமணம் ஆகிறது. அதுவரை நகைச்சுவையாக சென்ற படம் வேறு விதமாகத் திசை மாறுகிறது. திவிகாவின் கழுத்தில் ரஜினி கிஷன், கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது பிறகுதான் தெரிய வருகிறது.பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேயை விரட்டியடித்தார்களா? எப்படி விரட்ட முடிந்தது? என்பது ‘ரஜினி கேங்’ படத்தின் மீதிக்கதை

ரஜினி கிஷன், ஒரு புதுமுக நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார். நகைச்சுவைக்கு அவரது தோற்றம் பொருந்துகிறது.அவருக்குத் தைரியம் அதிகம்.எனவே முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் திவிகா, சுமாரான அழகு சுமாரான நடிப்பு.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் அலுப்பூட்டுகிறார். கூல் சுரேஷ் முறைமாமன் என்று கூறிக்கொண்டு கத்திப் பேசி கத்திப் பேசி வெறுப்பேற்றுகிறார்.மொட்ட ராஜேந்திரன், கல்கி ஆகியோர் வரும் காட்சிகளிலும் காமெடியை விட எரிச்சல் அதிகம்.

ஆவி வந்த பின் படமே மாறுகிறது.இதில் நாயகன் எதிர்கொள்ளும் ஆவித் துரத்தலில் முனிஷ்காந்தும் கல்கியும் பங்கெடுத்துக்கொள்வது கலகலப்பு.. அதேபோல், ஆவியே வில்லத்தனத்துடன் இருப்பதும் அது செய்யும் சேட்டைகளும் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை ப்ளஸ் திகில் விருந்து.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள். பின்னணி இசை வணிகப்படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் வண்ணமயமாக்கி உள்ளார்.

இயக்குநரின் எண்ணத்தில்  படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா.எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, சிரிப்பு ஒன்றையே குறியாக்கி லாஜிக்குகளைப் புறந்தள்ளிவிட்டு இந்தப் படத்தை ஆவி கலந்து  உருவாக்கி இருக்கிறார்.வெறும் நடிகர்களை நம்பி இருக்கிறார்.நடிகர்களை நம்பிய அளவிற்கு கதையை நம்பி இருந்தால் திரைக்கதைக்கு உழைத்து இருந்தால் இந்தப் படம் நல்ல நகைச்சுவைப் படமாக மாறி இருக்கும்.

மொத்தத்தில், ‘ரஜினி கேங்’ காமெடி கேங்.