‘வீரவணக்கம்’ திரைப்பட விமர்சனம்

சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ் பிஷராடி,சுரபி லட்சுமி, பி கே மேதினி ,ஆதர்ஷ் , சிதாங்கனா, ஆயிஷ்விகா நடித்துள்ளனர். அனில் வி.நாகேந்திரன் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு- கவியரசு,இசை- எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர்.விசாரத் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சமுதாயப்புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் .இக்கதையின் மூலம் கேரளாவில் நிலவிய சமூக சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதுடன் கேரள தமிழ்நாடு உறவு பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.கேரள சமூக சீர்திருத்த வரலாற்றையும் ஏழை மக்களின் உரிமை மீட்புப் போராட்டத்தையும் கதையினூடாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘வீரவணக்கம்’ படம்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நடப்பதாக இந்தக் கதை அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் ஒரு பொதுவுடமைவாதியாக இருக்கிறார் பரத். ஜாதி மத பேதம் இன்றி அனைவருக்கும் உதவுபவராக இருக்கிறார்.அவரது மகள் பக்கத்து ஊரிலுள்ள ஒரு ஏழை அடித்தட்டு வர்க்கத்து வாலிபனைக் காதலிக்கிறார்.இதற்கு மேல் ஜாதிக்காரர்கள் பல்வேறு இடையூறுகளைக் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவ்வூர் ஏழை மக்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுக்கிறார்கள்.அவர்களுக்கு விடுதலை உணர்ச்சி ஊட்டி அவர்களை சீர்திருத்த நினைக்கிறார் பரத். அவர்கள் அந்த உணர்வைப் பெறுவதற்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்று ஒரு முன்னாள் சீர்திருத்தவாதியான பெண்மணி பி.கே. மேதினியைச் சந்திக்க வைக்கிறார்.அந்தப் பெண்மணி முன்கதை போல் தனது வரலாற்றைச் சொல்கிறார் .அப்போது போராளி கிருஷ்ண பிள்ளையின் வரலாறும் கேரளத்தில் பொதுவுடமை இயக்கம் வளர்ந்த வரலாறும் விரிகின்றன. அவற்றை விவரிப்பது தான் ‘வீரவணக்கம்’.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1940 தொடங்கும் கதை 1946 வரை செல்கிறது. இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனை வெளியேற்ற ஒரு தரப்புத் தலைவர்களும் தொண்டர்களும்போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் இந்திய கிராமங்களில் பண்ணையார்களும் ஜமீன்களும் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்து கொண்டு கீழ்த்தட்டு மக்களை வதைத்து வருகிறார்கள்.கொத்தடிமை போல நடத்தி வருகிறார்கள்.அப்படி அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மீட்டு, புதிய மக்கள் புரட்சியை ஏற்படுத்தி பொதுவடைமை சித்தாந்தத்தை மலரச் செய்தது எப்படி என்பதை இயல்பாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

சமுத்திரக்கனி பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் வருகிறார்.நிமிர்ந்த நடை ,நேர்கொண்ட பார்வை ,உணர்ச்சி பூர்வமான வசனங்கள் என்று அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் -.சமுத்திரக்கனி தன் நடிப்பின் மூலம் , படத்திற்கும் பி.கிருஷ்ண பிள்ளை பாத்திரத்திற்கும் மிகப்பெரிய அடையாளமாகப் பங்களிப்பாற்றியுள்ளார்.

பரத் பெரிய மீசையோடு கம்பீரமான தோற்றத்தில்,அந்த தாராள குணம் உள்ள பொதுவுடமை இயக்க வீரராக வருகிறார். அவருக்கு அது வயது தாண்டிய பாத்திரம் என்றாலும் அதில் அவர் பொருந்துகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ் பிஷராடி, சுரபி லட்சுமி, புரட்சிப் பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பொருத்தமான தேர்வுகளாக இருப்பதுடன் ஏற்ற பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர்.

கவியரசுவின் ஒளிப்பதிவில் கண்களை மிரள வைக்கும் காட்சி பிரம்மாண்டங்கள் இல்லை என்றாலும் கதையில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பின் மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளனர்.

எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்திருக்கிறார். உரிமை மறுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டுக் கொள்ளும் வரலாற்றை அறிய இந்த படம் உதவும்.சிவப்பு சட்டைத் தோழர்கள் தங்கள் உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் உதவும்.

ஒற்றுமையுடனான போராட்டம் தான் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதை இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன். மொத்தத்தில், ‘வீரவணக்கம்’ கவனிக்க வைக்கிறது.