அபர்ணதி, இளவரசு , ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய் ஜி மகேந்திரன், காளி வெங்கட், சரவண சுப்பையா, சுரேஷ் சக்கரவர்த்தி நடித்துள்ளனர்.ராகுல் அசோக் இயக்கி உள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ பி அசோக்குமார் தயாரித்துள்ளார்.
சிறுவயதில் பெற்றோரைப் பிரிந்த அபர்ணதியைக் காளி வெங்கட் பாசத்துடன் வளர்க்கிறார்.அவரையே தந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும் அவர் மனதில் ஒரு தாழ்வுணர்ச்சி உள்ளது, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று.அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறார். காளி வெங்கட் ஊக்கப்படுத்திப் படிக்கச் சொல்கிறார் .ஒருமுறை முதல் மதிப்பெண் பெற்ற போது அனைவரும் பாராட்ட அந்தப் பாராட்டின் மீது ஒரு போதை வந்து, தினசரி அனைவரும் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் . அதற்காகச் சில அதிர்ச்சிகரமான செயல்களைச் செய்கிறார்.இப்படியே அவர் படித்து கலெக்டர் ஆகிறார்.அவர் தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடம் புகழ் பெறுகிறார்.ஆனாலும் தன்னை ஒரு முதல்வர் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை.தான் சொல்வதை முதல்வர் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான நகர்வுகளில் அப்படியே நடக்கிறது.அதன்படி தேர்தல் வியூகம் வகுப்பாளராக மாறுகிறார்.தனக்கான நேரம் வரும்போது தன்னைச் சிறுமைப்படுத்தியவர்களை ஒரு வகையில் அவர் பழி வாங்க ஆரம்பிக்கிறார் .முடிவு என்ன என்பதுதான் ‘வெஞ்சென்ஸ் ‘ படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் தமிழக, இந்திய அரசியலைப் பிரதிபலிப்பதாய் உள்ளன.கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவூட்டும் படியும் உள்ளன.குறிப்பாக ஜெயலலிதாவை நினைவூட்டுகின்றன.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத குணம்,ராஜதந்திர வியூகங்கள், அதிரடி நடவடிக்கை என்று சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். அதை ஏற்கும் படியும் செய்துள்ளார்.
முதலமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் இளவரசு, மத்திய அமைச்சராக வரும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக வரும் காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக வரும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக வரும் சரவண சுப்பையா ஆகியோர் தோன்றும் காட்சிகளில் தமிழகத்து அரசியல் சூழ்நிலைகள் நினைவுக்கு வருகின்றன.
டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா என மற்ற பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபுவின் முதிர்ந்த ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ப பயணம் செய்துள்ளன.
இம்ரானின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வின்றி கொண்டு சென்றுள்ளது .
மெல்லக் கொல்லும் விஷமாகத் தனக்குள் புகைந்து கொண்டிருந்த பழி வாங்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பெண்ணின் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் கதையில் தமிழக அரசியல் சம்பவங்களை இணைத்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாக்கியுள்ளார்.இயக்குநர் ராகுல் அசோக்.தமிழக அரசியலின் அதிகார ஆட்டங்களும் காட்டப்பட்டு படம் அரசியல் வாசனையுடன் உருவாகியுள்ளது.எனவே அவரவரும் கடந்த கால சம்பவங்களுடன் இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியும்.
மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’ அதிர வைக்கும் அரசியல் சதுரங்கம் .


