பவன் கல்யாண், நிதி அகர்வால் ,பாபி தியோல், அனுபம் கெர், சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, , ஈஸ்வரி ராவ், கோட்டா சீனிவாச ராவ்,விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேக்கர், ரகு பாபு, சுனில், கபிர் பேடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி நடித்துள்ளனர். ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளனர்.ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, ஞானசேகர் வி. எஸ், படத்தொகுப்பு பிரவீன் கே எல், கலை இயக்கம் ஹரி வர்மா, உடைகள் ஐஸ்வர்யா ராஜீவ். மெகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. எம். ரத்னம் தயாரித்துள்ளார்..
வீரமல்லு பல்வேறு வீரக்கலைகளையும் தந்திரக் கலைகளையும் கற்றுச் சகலகலா வல்லவனாக இருக்கிறான்.அவனை வீரத்திலும் விவேகத்திலும் யாரும் வெல்ல முடியாது என்ற திறமையுடன் இருக்கிறான்.அப்படிப்பட்ட வீரமல்லு தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை அடிமையாக வைத்திருக்கும் குறுநில மன்னர் போல் இருக்கும் திவானிடம் போட்டியில் வென்று அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை மூட்டை மூட்டையாக பெற்றுக் கொடுக்கிறான். இவனது வீரத்தை கண்டு வியந்து இன்னொரு சமஸ்தான மன்னர் தங்கள் பகுதியில் இருந்து டில்லிக்கு ஔரங்கசீப் கைப்பற்றிச் சென்று அங்கே அரசரின் அரியாசனத்தில் பதிக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை டில்லி சென்று மீட்டு வருமாறு கூறுகிறார். அந்த கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக 9 பேருடன் பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து டில்லிக்குப் பயணம் மேற்கொள்கிறான். அவனது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை முகலாயர் ஆட்சி காலத்துக் கதையோடு சில புனைவுகளையும் இணைத்து இந்த ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒளரங்கசீப் ஆட்சியில் இருந்த மொகலாயர் காலத்தில் நடக்கும் கதை.நாம் வரலாற்றுப் பாடங்களில் முகலாயர்களை எப்படி அறிந்திருக்கிறோம்? முகலாய மன்னர்களின் வீரம், ஆட்சி,நிர்வாகம் போர் மற்றும் கலை வளர்ச்சி போன்ற பெருமைகளை மட்டும் அறிந்திருக்கிறோம்..ஒளரங்கசீப் மதச் சட்டப்படி ஆட்சி நடத்தினாலும் பிற மதங்களில் காட்டிய காழ்ப்பு வரலாறு அவரை எதிர்மறைக் கதாபாத்திரமாக சித்தரித்து விட்டுச் சென்றுள்ளது.அவர் பிரதானமாக நடைமுறைப்படுத்திய கட்டாய மதமாற்றம் ,மாற மறுக்கும் பிற மதத்தினர் மீது குறிப்பாக இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட ஜிசியா வரி பற்றி இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள் கொடுமைகள் போன்றவற்றைப் பற்றியும் அவரது மதவெறியைப் பற்றியும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.இப்படி பல உணர்ச்சிகரமான பிரச்சினைகளை எடுத்து ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா.
ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண், இப்போது ஆந்திராவின் துணை முதலமைச்சர். இந்தப் படத்தில் அவர் வீரமல்லுவாக வீரப்பிரதாபங்களுடன் காட்டப்படுகிறார்.அவரின் ஒவ்வொரு அசைவையும் அரசியல் சார்ந்து நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மக்கள் நாயகனாக மாஸ் ஹீரோவாக அவரைத் தூக்கி நிறுத்தி உள்ளார்கள்.இந்து மதப் பெருமை பேசுவது, ஏழை பங்காளனாகி ஏழைகளுக்கு உதவுவது, மாற்று மதத்தவரான இஸ்லாமியருடன் நல்லிணக்கம் காட்டுவது என்று படம் முழுக்க ஒரு அரசியல்வாதியாகத் தன் புகழுக்குத் துணை நிற்கும் அம்சங்களாக வரும் காட்சிகளில் நடித்துள்ளார்.அதற்கான கிராபிக்ஸ் காட்சிகள் மேம்பட்ட தரத்தில் பார்ப்பவர்களைக் கவர்கின்றன.
நிதி அகர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். சுமாரான தோற்றம் சுமாரான பங்களிப்பு என்று வருகிறார்.
முகலாய மன்னர் ஒளரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் எதிர்மறைக் குணச்சித்திரம் கொண்ட அந்தப் பாத்திரத்தில் முகலாய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியைக் கண் முன் கொண்டு வரும் காட்சிகளில் அவர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தனது அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையேல் இறந்து போக வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் ஒப்புக் கொள் எனது சிம்மாசனம் இல்லையேல் உனக்கு மரண சாசனம் என்கிறார். ஒளரங்கசீப்பின் இந்துக்கள் மீதான வன்மத்தை தனது கண்கள் மூலம் காட்டியுள்ளார்.
சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேக்கர், ரகு பாபு, சுனில், கபிர் பேடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி எனப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வுகள்.தங்கள் அனுபவ நடிப்பைக் கொடுத்துப் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். அந்த வகையில் படத்தை ஓர் அகில இந்தியப் படமாக தோன்ற உதவுகிறார்கள்.
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் கீரவாணியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.போன தலைமுறை இசைக் கலைஞர் என்று நினைத்தால் நவீன பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.பாடல்களிலும் கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் மாஸ் காட்சிககளிலும் அவர் இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் இருவரும் படத்தை கண்கள் விரிய பார்க்கும் வகையில் காட்சிகளைப் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், கலை இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரது பணியும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா படம் பெரிய வணிக வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வணிக அம்சங்களையும் இணைத்து வண்ணமயமான காட்சிகளுடன் வரலாற்றுப் பின்னணியுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.கண்களை விரிய வைக்கும் அந்த காட்சிப் பிரம்மாண்டம் ஒவ்வொரு பிரேமிலும் இருப்பது திரைப்பட பட்ஜெட்டின் அகலத்தைக் கூறும்.
ஒளரங்கசீப்பின் பிற மதங்கள் மீது விதித்த ஜிசியா வரி சார்ந்த காட்சிகள், இந்துக்கள் கொடுமைகள் அனுபவித்த காட்சிகள், அவரது மதவெறி போன்றவை இக்காலத்தில் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கலாம் .குறிப்பாக அவை பவன் கல்யாணின் வலதுசாரிஅரசியல் பயணத்திற்கு உதவலாம்.
ஒரு சராசரி திரைப்பட ரசிகனுக்கு வரலாற்றுப் பின்னணியில் சாகசங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான திரைக்கதை உள்ள காட்சிப் பிரம்மாண்டங்கள் கொண்ட நல்ல திரை அனுபவத்தைத் தரும் திரைப்படமாக இந்த ‘ஹரி ஹர வீரமல்லு’ திருப்தி தரும் என்றே கூறலாம்.


