‘ஹாட் ஸ்பாட் 2’ திரைப்பட விமர்சனம்

பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா, பவானி ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்சன்,அஸ்வின், சஞ்சனா திவாரி, கே ஜே பாலமணிமார்பன், விக்னேஷ் கார்த்திக் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கே ஜே பி டாக்கீஸ் கே ஜே பாலு மணிமார்பன், அனீல் கே ரெட்டி தயாரித்துள்ளனர்.

இது சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் கதை. ஏற்கெனவே ’ஹாட் ஸ்பாட்’ என்ற ஒரு படம் வந்தது. இயக்குநராகும் கனவில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் நான்கு இயக்குநர்களின் வெவ்வேறு கதையாக அது இருந்தது.அதன் தொடர்ச்சியாகத் தான் ‘ஹாட் ஸ்பாட் 2’ வந்துள்ளது.

முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். நோக்கமும் கூடஅதே மாதிரி தான் உள்ளது.என்றாலும் சொல்ல வந்த கருத்து தனி மனிதர் சார்ந்ததாக இல்லாமல் சமுதாயத்திற்கானதாக இருக்கிறது.என்னதான் அந்தக் கருத்து?அதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சமூகத்திற்கும் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் இந்த ‘ஹாட் ஸ்பாட் 2’ படத்தின் மீதிக் கதை.

திரை வெளிச்மயக்கத்தில் நட்சத்திரங்களை பின் தொடரும் ரசிகர்கள்,சுதந்திரத்தின் எல்லைகள் தெரியாத இளமைப் பருவம்,நாகரிகம் பண்பாட்டின் இயல்பு அறியாத சமகால சமூகம்,மூத்தோர் இளையோர் தலைமுறை இடைவெளி காதலின் தற்போதைய பரிமாணம் போன்ற அனைத்தையும் கலந்து இந்த கதைகளை உருவாகி இருதரப்புக் குரல்களையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
இயக்குநர் கூறும் கதைகளை தவிர்த்து அவர் கூறும் சொந்தக் கதை சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கூறுகிறது.அதை மேலும் அழுத்தமாகக் கூறி இருக்கலாம்.

எடுத்துக்கொண்ட ஒரு கதைக்கு திரைக்கதை காட்சிகள் என்ற அமைத்து ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாக்குவதை விட,அதன் மூலம் ரசிகர்களை திருப்தி படுத்துவதை விட,சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைக் கூறிய சிறு சிறு காட்சிகள் மூலம் அமைத்து இந்தக் கதையை பின்ன முயன்றுள்ளார் இயக்குநர்.இதை அவர் தனது முதல் பாகத்திலும் செய்திருப்பார்.ஆனால் இந்தப் பாகத்தில் சற்றே அடக்கி வாசித்துள்ளார் இயக்குநர்.தன் மனதிற்குள் உள்ள தீர்ப்பை தீர்மானத்தைப் படம் பார்ப்பவர்கள் மீது திணிக்காமல் இருதரப்பு உணர்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.மிரட்டும் ரகத்தில் ஒன்று அறிவுரை கூறும் ஒன்று அதிர வைக்கும் ஒன்று என்று மூன்று கதைகளைப் பின்னி இந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர். டைம் ட்ராவல் எனப்படும் காலப்பயணமும் படத்தில் வருகிறது.

இது நட்சத்திரங்கள் நடித்த படமாகத் தோன்றாமல் அந்தந்த கதாபாத்திரமாகவே தோன்றும் படி நடித்து இருக்கிறார்கள்.

கதைகளை சொல்லும் ஒரு பாத்திரமாக வருகிறார் பிரியா பவானி சங்கர். அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே அவர்காட்டும் முகபாவனைகள் ரசிக்க வைக்கின்றன என்றாலும்,அவரை உயர்த்திப்பிடித்த அளவிற்கு அவரது பாத்திரம் அமையவில்லை.

எம் எஸ் பாஸ்கர் ஒரு ரகம் என்றால் தம்பி ராமையா இன்னொரு ரகம்.பளீர் பாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறார் எம்.எஸ் பாஸ்கர்.அவரது பாத்திரம் மூத்தோர் ஆதரவு பெறும்.மாறாக இக்கால இளசுகளுக்கு வேறு மாதிரியான அறிவுரை கூறி அதிர்ச்சி அளிக்கிறார் தம்பி ராமையா.

இந்தக் காலத்து காதலின் நிலையையும் பெண்களின் மனப்போக்கையும் எண்ணிக் கலங்கிக் கவலைப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின்,தனது நடிப்பில் மகிழ்ச்சி காட்டுகிறார்.அவரது நண்பராக வந்து டைமிங் வசனங்கள் பேசி சிரிக்க வைக்கிறார் அமரன்.சற்றே கவர்ச்சியில் கவர்கிறார் பிரிகிடா.

ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, சஞ்சனா திவாரி ஆகியோர் அவரவர் தங்கள் பங்களிப்பின் மூலம் படத்தைத் தூக்கி நிறுத்திருக்கிறார்கள்.

நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான பின்புலங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் மாறுபாடு வேறுபாடு காட்டிக் கவனம் பெறுகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.

ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்திற்கான பின்னணி இசையையே மீண்டும் ஒலிக்க விட்டு அந்த மனநிலைக்கு கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன். பின்னணி இசையிலும் குறையில்லை.முத்தையனின் படத்தொகுப்பும் சி.சண்முகத்தின் கலை இயக்கமும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன.இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அடையாளமும் தரப்படுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், ஒரு சார்பு சிந்தனையாக இல்லாமல் இருதரப்பு பார்வையையும் படத்தில் பதிய வைத்துள்ளார். கதாபாத்திரங்கள் உரையாடல்களில் பார்வையாளர்களையும் சேர்த்துக் கொள்கிறார்.தற்குறிகள் இப்போது பேசுபொருள் ஆகியுள்ள இக் காலத்தில் அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.சுதந்திரத்தை தவறாக எண்ணிக் கொள்பவர்களுக்கும்,நாகரிக மோகத்தில் தடம் புரள்ளுபவர்களுக்கும் கூட அந்த வகையில் அனைவருக்குமான படமாக தர முயன்றுள்ளார்.

மொத்தத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2’ மிதமான சூடு.