கலைஞானி கமல் நடிக்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘உத்தமவில்லன்’ பாடல்கள், ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை தொடங்கி இரவு வரை கோலாகலமாக நடந்தது.
நிகழ்ச்சியில் கமலுக்கு பாலசந்தர் எழுதிய கடிதம் ஒளிபரப்பப் பட்டு இடம் பெற்றது. அதற்கு கமல் எழுதிய பதில்கடிதம் உரையாக ஒலிபரப்பப் பட்டது.
நிகழ்ச்சியில் கமல் பேசும்போது” இந்தப் பதில்கடிதம் நான் பதில் மரியாதை செய்யவேண்டும் என்பதற்காக எழுதப் பட்டதல்ல. அவர் பணியை நான் ஒரு மாணவனாகத் தொடர வேண்டும் அல்லவா? அதற்காக எழுதப்பட்டது. வாயால் பேசினாலோ வாசித்தாலோ உணர்ச்சி வசப்பட்டு உளறி விடுவேன் என்றுதான் முன்பதிவு செய்து ஒலிபரப்பினோம். எனக்குக் கிடைத்த குருமாதிரி யாருக்கும் கிடைத்திருக்கமாட்டார்கள்.ரஜினிக்கும் அவர்தான் குரு அவர் கிடைத்திருக்கா விட்டால் ரஜினிகூட முரட்டுக்காளை மாதிரி படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். நான்தான் காணாமல் போயிருப்பேன்..
அவரது பாதையில் அவர் பெருமை பேசும் மாணவனாக என்றும் நான் இருப்பேன்.
இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது என் பாக்யம். அவர் மறைவு எதிர்பாராதது. அவர் இன்றும் இருப்பார் என்றே நம்பியிருந்தோம். இல்லாவிட்டால் முன்னெச்சரிக்கையாக சிலவற்றைச் செய்திருப்போம்.
இந்தப் படத்தில் தொழில்நுட்பக் குழுவை நம்பி எந்தத் தலையீடும் இல்லாமல் எங்களைப் பணியாற்றவிட்ட லிங்குசாமிக்கு நன்றி. நான் இன்னமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
இதில் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் ஞானசம்பந்தன் இடம் பெற்றிருக்கிறார்கள்.அவர்களிடமும் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.ஏதாவது செய்ய வேண்டும்.
நான் இப்படத்தில் சுத்தத் தமிழில் ஒரு பாடலை தைரியமாக எழுதியிருக்கிறேன். பல வார்த்தைகள் சினிமாப் பாடலுக்குப் புதியனவாகத் தெரியலாம். சினிமாப் பாடல்கள்தான் பல தமிழ் வார்த்தைகளை புழங்க வைத்தன.சினிமாப் பாட்டு எழுதுவது சிரமம்தான்
என் பாடலிலுள்ள கருத்துக்கள் கம்பன் சொன்னதாகக் கூட இருக்கும். என் அப்பன் சாயல் என்னிடம் இருந்தால் தவறில்லை. அதுதான் அப்பன் வழி வந்ததன் பெருமை. அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்கும் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை.
ஒரு பாடலில் சாகாவரம் எவ்வளவு கொடுமை என்கிற கருத்து வரும் சாகாவரம் போல சோகமுண்டா?என்று வரும்.வாழ்க்கை என்பது சாகவும் கற்றுக் கொடுக்கும். எனக்கு சில நம்பிக்கைகள் உண்டு. நான் மனிதர்களை நம்பு கிறவன். மரணம் என்பது வாழ்க்கையின் ஒருபகுதி. மரணம். இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்கிற வாக்கியத்தில் மரணம்தான் முற்றுப்புள்ளி. இந்த முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் அர்த்தம் பெறாது.
வாங்கி வாங்கி கொடுப்பதும் இடம் கொடுத்து விட்டு மரணம் அடைவதுதான் வாழ்க்கை ” என்று தன் குரு தொடங்கி படஅனுபவம், வாழ்க்கை, மரணம் பற்றி எல்லாம் கூறி தத்துவ உணர்வுடன் உரையை முடித்தார் கமல்.
நிகழ்ச்சியில்இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்,இயக்குநர் ரமேஷ்அரவிந்த், நடிகர் நாசர், நடிகைகள் ஊர்வசி, பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி நாயர் ,இசையமைப்பாளர் ஜிப்ரான்,வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் ஞானசம்பந்தன், பாடல் எழுதிய மதன்கார்க்கி, விவேகா ஆகியோரும் பேசினார்கள். நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் மொபைல் ஆப்ஸ் வடிவில் வெளியிடப் பட்டன. கமல் வெளியிட லிங்குசாமி முன்னிலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஸ்ருதிஹாசன் பெற்றுக்கொண்டது ஒரு தொழில்நுட்ப பாய்ச்சல்.