ரஜினிகாந்த் பேசியபோது,
மதிப்பிற்குரிய இயக்குநர் எஸ். பி. முத்துராமன் பற்றி பேசிய அவர், “அவர் என்னுடைய இன்னொரு சகோதரர். அவர் என் மேல் காட்டிய அக்கறை, அன்பு, அவர் எனக்கு கத்துகொடுத்த பாடங்கள் பல. அவரிடமிருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். சினிமா துறையில் அவரை போல நேர்மையான மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.
ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் தான் நான் முத்துராமன் அவர்கள் படத்தில் முதன்முறை கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் அவரால் பஞ்சுவாலிட்டியை கற்றுக் கொண்டேன்.”என்றார்.
மேலும், “முதலில் நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அடுத்த படங்களுக்கான வேலைகளில் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை.
அதேசமயம், இலங்கை செல்ல பயணத்தை ரத்து செய்த பொழுதும் சிலர் நான் பின் வாங்கிவிட்டது போல் பேசினார்கள். ரஜினி முடிவு எடுக்க திணறுகிறார், தயங்குகிறார், பயப்படுகிறார் என்றார்கள். நான் எந்தவொரு முடிவு எடுக்கும் போதும் நான் என்னளவில் கொஞ்சம் யோசிப்பேன். சில விஷயங்களில் நாம் முடிவு எடுத்த பிறகு அதில் பிரச்சனைகள் இருப்பது தெரியும். அதுபோன்ற தருணங்களில் நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.
தண்ணீரில் கால் வைக்க வேண்டும், கால் வைத்த பிறகு தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் இருக்கிறது என்று. எடுத்த வைத்த காலை பின்னால் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன ஆகும். முரட்டு தைரியம் இருக்க கூடாது. பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.
என்னை பற்றி மற்ற விதமாகவும் பேசுகிறார்கள். ரஜினி, தன் பட ரீலீஸின் போது மட்டும் தான் ஏதாவது யுக்திகள் செய்வார் என்றெல்லாம் செய்கிறார்கள். என் ரசிகர்களின் ஆசிர்வாதத்தால் எனக்கு அது போன்று யுக்திகள் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
என் ரசிகர்களை, தமிழ் மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றி விட முடியாது, அவர்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் ஏமாறுவது ஒரு விஷயத்தில் மட்டும் தான் அது பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.” என்று கூறினார்.
“அரிசி வெந்தால் தான் சோறாகும், படம் நன்றாக இருந்தால் தான் வெற்றியடையும். என்னை இயக்கியவர்கள் நல்ல கதை, பாடல், கருத்து அமைத்து நல்ல படம் கொடுத்ததால் தான் நான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
அரசியல் பற்றி பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “அரசியல் விஷயம் வரும் போது, ரசிகர்களை படம் பார்க்க வைப்பதற்காகவே நான் அரசியல் மாயை காட்டுவது போன்ற செய்திகள் வருகின்றன. 21 வருடங்களுக்கு முன்பாக ஒரு அரசியல் விபத்து என்று சொல்லலாம் அந்த நிகழ்வை, அப்போது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்ற சூழ்நிலை உருவானது. அப்போது சில ரசிகர்கள் அரசியலில் சற்று ஆர்வம் காட்டினார்கள். அதில் சிலர் தவறான வழிகாட்டுதலிலும் சென்றார்கள். அதற்கு பிறகு தான் நான் எந்த ஒரு கட்சிக்கும் நான் ஆதரவு கொடுக்கவில்லை என்று பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ஒரு நடிகனாக நான் இப்போது என் கடைமையை சரிவர செய்து வருகிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அது போல நாம் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு பொறுப்புக்கும் உண்மையாக இருக்க வேண்டும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது மாதிரியான தவறான நோக்கத்தோடு அரசியலை அணுகுபவர்களுக்கு என்னிடத்தில் இடமில்லை.” என்று கூறினார்.
—