‘ஆல் பாஸ்’ திரைப்பட விமர்சனம்

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,ஜனனி,ஜெயப்பிரகாஷ் ,செந்திகுமாரி ,இயக்குநர் சுப்பிரமணிய சிவா ,வினோதினி,பிரசன்ன பாலச்சந்திரன்,சரத் லோகித்ஷவா,மோகனா,ஆர் ,சத்யா ,சஞ்சய்,கோகுல் ,நிகில் ,,ரோஷன் பஷீர் ,அருவி மதன்,இயக்குநர் மூர்த்தி,கலையரசன் கண்ணுசாமி  நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.இந்தப் படத்திற்கு தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார் .பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
எஸ்.பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில்
மோகனா .ஆர் தயாரித்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் மூவரும் வடசென்னை வாசிகள் .இவர்கள் உடன் பிறக்காதவர்கள் என்றாலும் சகோதரர்கள் போலப் பழகுகிறார்கள்.அவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர்களது மனைவி,பிள்ளைகள் குடும்பத்தினரும் வாழ்கிறார்கள்.ஒற்றுமையாக இருக்கும் அவர்கள், மூத்தவரான ஜெயபிரகாஷ் வார்த்தைகளை மதித்து நடக்கிறார்கள்.

அந்த ஊர் எம்எல்ஏவாக இருக்கும் சரத் லோகித்ஷவா தனது கணக்கில் வராத பணத்தை எல்லாம் ஓரிடத்தில் பதுக்கி வைக்கிறார்.அப்படி அவரால் ஓரிடத்தில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை இந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் எடுத்து வந்து விடுகிறார்கள்.

பணத்தை வீட்டுக்குக் கொண்டு வரும் அவர்களின் அந்தச் செயலை ஜெயப்பிரகாஷ்,  ஆதரிக்கவில்லை.பணத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்கிறார். பணம் பத்தும் செய்யும் அல்லவா? எப்போதும் அவர் சொல் தட்டாத அந்தக் குடும்பத்தினர் இப்போது பணம் கைக்கு வந்ததும் அதை மீறுகிறார்கள்.கைக்கு வந்த அந்தப் பல கோடி ரூபாய் பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்யலாம் என்று குடும்பத்தினர் ஆளாளுக்கு கனவு காண்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள்.

மறுபக்கம் பணத்தை பறிகொடுத்த எம்.எல்.ஏ, தன் பணத்தையும், அதை எடுத்தவர்களையும் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டிக் தேடுகிறார். இதனால், குடும்பத்தார் பணத்தை செலவு செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.இறுதியில் பணம் எம்எல்ஏவுக்குக் கிடைத்ததா? எடுத்தவர்களுக்குச் சொந்தமானதா என்பது தான் ’ஆல் பாஸ் ’படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கும் போது இது ஏதோ சாதாரணமாக எப்போதும் சொல்லப்படும் வடசென்னை வாழ் மக்களின் கதை என்று தான் தோன்றுகிறது.ஆனால் எம்எல்ஏவின் பணத்தைச் சிறுவர்கள் எடுத்த பிறகு படம் ஒரு திரில்லர் போல டாப் கியரில் செல்கிறது.

இந்தக் கதையின் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் தங்களது வரம்பு தாண்டாத இயல்பான நடிப்பின் மூலம் அந்த சென்னை வாழ் எளிய வர்க்கத்தின் மன இயல்புகளை அழகாகப் பிரதிபலித்துள்ளார்கள். இவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா. ஆர் ஆகியோர் தாங்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு ஊறு செய்யாமல் உதவியிருக்கிறார்கள்.அந்த வகையில் கொடுத்த வேலையைச் குறையின்றி செய்தவர்களாகப் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இளம் காதல் ஜோடியாக கார்த்திக், பிரியா பாத்திரங்களில் நடித்துள்ள துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி இருவரது தோற்றமும் நடிப்பும் இணக்கம் பெற்று ரசிக்க வைக்கின்றன.இந்தப் படத்தில் வரும்மூன்று குடும்பத்துப் பிள்ளைகளாக நடித்திருக்கும் சிறுவர்கள் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர் தங்கள் வயதுக்கு ஏற்ப நடித்து பார்ப்பவர் மனதில் பதிகிறார்கள்.

எம்.எல்.ஏ பாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலர் பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருவி மதன் உள்ளிட்ட துணைக்கதாபாத்திர நடிகர்களும் தாங்கள் ஏற்ற சிறு வேடப் பங்களிப்பையும் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.அந்த வகையில் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் தில்ராஜு வடசென்னை மண்ணையும் மக்களையும் அவர்களது மொழியையும் எதார்த்தம் குறையாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் எனக் கூற வைக்கின்றன. பின்னணிஇசையும் படத்தின் வேகத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர், படத்தைத் தொய்வின்றி நகர்த்தியவர் இரண்டாம் பாதியில் அதைத் தவற விட்டிருக்கிறார்.

அரசியல்வாதியின் கறுப்பு ப பணத்தையும் எளிய மக்களின் வாழ்வியலையும் இணைத்து ஒரு திரில்லர் அனுபவத்தைப் படமாகக் கொடுத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் மைதீன்.

அதே சமயம், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் பராமரித்து இருந்தால் இந்தப் படம் மேலும் சுவாரஸ்யப்பட்டிருக்கும்.

ஒரு குடும்பத்துக் கதையை எடுத்துக்கொண்டு  அதில் மனித மனவுணர்வுகளைக்காட்டி  திரில்லர் அனுபவமாக மாற்றி இருக்கும் வகையில் இந்த ’ஆல் பாஸ்’ படக்குழுவினர் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள்.