இந்தியாவின் உயரிய இலக்கிய அங்கீகாரமான ஞானபீட விருதுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து தேர்வாகியிருக்கிறார்.அதையொட்டிப் பாராட்டு மழை, வாழ்த்து மழை என்று ஒரு பக்கம் அவர் நனைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்கள் என்கிற பெயரில் தூற்றல்களும் காழ்ப்புகளும் பரப்பப்பட்டு வருகின்றன.இந்தச் சூழலில் அவரிடம் பொது சமூகம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு ஒரு பிரபல இதழுக்கு அளித்த நேர்காணலில் அவரே பதில் அளித்துள்ளார்.
ஞானபீடம் பெற்றவர்களெல்லாம் ஞானிகள் ஆகிவிட முடியுமா?
செஞ்சிக் கோட்டையில் ஏறியவர்களெல்லாம் தேசிங்கு ராஜன்கள் ஆகிவிட முடியாது. ஞானபீட விருது பெற்றவர்களெல்லாம் ஞானிகள் ஆகிவிடவும் முடியாது.
அப்படியானால் யார் ஞானி?
நான்மறையைக் கற்றவனல்ல ஞானி; ‘நான்’ மறையக் கற்றவனே ஞானி.
ஞானபீடம் வரலாறு சொல்ல முடியுமா?
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்திய மொழிகள் அனைத்துக்குமான ஓர் ஒற்றை விருதை நிறுவ நினைத்தார்; பெரும் செல்வந்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது முன்வந்த சாந்தி பிரசாத் ஜெயின் ஏற்படுத்திய பண்பாட்டு இலக்கிய அமைப்புதான் ஞானபீடம். 1965 முதல் இந்தியாவின் உயர்ந்த படைப்பாளிகளுக்கு அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 60ஆம் விருது நமக்குக் கிட்டியிருக்கிறது.
ஞானபீடத்தின் தனித்தன்மை என்ன?
அதன் கறார்த்தன்மை; கட்டமைப்பு; சமரசம் இல்லாத சத்தியம்; இலக்கியத்தைத் தவிர நபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத கட்டுக் காவல்; விருதுக்கு அவர்கள் வகுத்திருக்கும் நீதி வழுவாத நெறிமுறைகள். நாடாளுமன்றமோ – உச்சநீதிமன்றமோ – அதிகார மையமோ அதன் உறுதியை அசைத்துவிட முடியாது. நான்கடுக்குப் பாதுகாப்புக் கொண்ட ஞானக் கோட்டை அது. அதனால்தான் அந்த விருதுக்கு அவ்வளவு வீரியம் இருக்கிறது
உங்களைக் கவிஞர் இல்லை என்கிறார்களே சிலபேர்?
அதனால் என்ன? சூரியனை, சூரியன் இல்லை என்றால் கதிரவன் என்று அழைக்கலாம். கடலைக் கடல் இல்லையென்றால் ஆழி என்று அழைத்துவிட்டுப் போகலாம். நான் கவிஞன் இல்லை என்றால், என்னைப் படைப்பாளி என்று வேறொரு பேர்சொல்லி விளிக்கலாம்.
எதிர்ப்பாளர்களை நீங்கள் ஏன் எதிர்த்தடிப்பதில்லை?
நகைச்சுவை செய்கிறவர்களை யாராவது திருப்பி அடிப்பார்களா? நகைச்சுவையே வன்மம் ஆகும்போது நாம் அடிக்க வேண்டியதில்லை; காலமே திருப்பி அடிக்கும். நல்ல வேளை காலம் செருப்புப் போட்டு நடப்பதில்லை.
ஞானபீடம் உங்களுக்குத் தகுந்த நேரத்தில் வந்திருக்கிறதா? தாமதமாக வந்திருக்கிறதா?
8 ஆண்டுகள் நிராகரிக்கப்பட்டு 9ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக நான் நிராகரிக்கப்படவில்லை; தடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை வயிற்றெரிச்சல்காரர்களின் வாக்குமூலம் சொல்கிறது.
உங்கள் இலக்கியம் எதைநோக்கிப் பயணிக்கிறது?
வலியிலிருந்து வாழ்வுக்கு.
உங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு?
விளைந்த கல்லைத்தானே உளி பதம் பார்க்கும். தங்கச் சுரங்கத்தில்தானே அதிகம் வெடிவெடிக்கும். பொறாமையால் வருவதைப் புறந்தள்ளிவிடுகிறேன்; அர்த்தமுள்ள எதிர்ப்பை நான் ரசிக்கிறேன். உமி இல்லையென்றால் அரிசி முளைக்காது; எதிர்ப்பு இல்லையென்றால் புகழ் நிலைக்காது.
ஞானபீட விருது பெற்றதில் எந்த அம்சங்களில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?
இரண்டு அம்சங்களில். கால்நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் கொண்டு வந்தோம் என்பது முதல் மகிழ்ச்சி. நான் நேசித்த பெருங்கீர்த்திமிக்க இந்திய எழுத்தாளுமைகளின் பட்டியலில் என் பெயரும் இடம்பெறுகிறது என்பது இரண்டாம் மகிழ்ச்சி.
சங்கர குரூப்(மலையாளம்), தாராசங்கர் பந்தோபாத்தியாய்(வங்காளம்), சுமித்ரானந்தன் பந்த்(இந்தி), வி.ச.காண்டேகர் (மராத்தி), சிவராம காரந்த்(கன்னடம்), அம்ரிதா பிரீதம்(பஞ்சாபி), தகழி சிவசங்கரப் பிள்ளை(மலையாளம்), அனந்தமூர்த்தி(கன்னடம்), எம்.டி.வாசுதேவன் நாயர் (மலையாளம்), பிரதிபா ராய்(ஒடியா) போன்ற இந்தியப் புகழ்பெற்ற உலக ஆளுமைகளோடு இணைகிறோம் என்பதில் ஒரு ஞானச் செருக்கு இருக்கவே இருக்கிறது.
உங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டீர்களா?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? திராவிடச் சார்புள்ளவன் விருது பெறுகிறான். நம் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டே இருக்கிறான். இலக்கியத் துறையில் இருந்துகொண்டு கலைத்துறையிலும், கலைத்துறையில் இருந்துகொண்டு இலக்கியத் துறையிலும் ஒருவன் அரைநூற்றாண்டாக இயங்கிக்கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒன்று; காசு உள்ளவனுக்கே காசு சேர்கிறது போன்ற காரணங்கள்தாம். நான் என்ன செய்யட்டும்? மேற்சொன்ன எதையுமே நான் திட்டமிட்டுச் செய்யவில்லை.
இழிமொழிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
காலந்தோறும் எனக்கெதிராக விஷச்சொற்கள் வீசப்பட்டே வந்திருக்கின்றன. நான் வெள்ளாடு மாதிரி வாழ்ந்து வருகிறேன். வெள்ளாடு மட்டும்தான் எல்லா விஷச் செடிகளையும் உண்டு செரிக்கும் ஒரு ஜீவன். ஆடுதொடா இலையைத் தவிர எருக்கிலை முதல் விஷப்பூடு வரை எல்லாச் செடிகளையும் உண்டு மென்று தின்று அதைப் பாலென்ற அமுதமாக வெளியேற்றும். தாய்ப்பாலுக்கு ஈடாகத் தன்பால் தரும். நானும் எல்லா விஷங்களையும் உண்டுகொள்கிறேன்; என் படைப்பு மட்டும் அமிர்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.
அவமானங்களை எப்படிக் கடந்துபோகிறீர்கள்?
அவமானம் கவிஞர்களின் பரம்பரைச் சொத்து. 1960களில் ஞானபீடத்தின் முதல் விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டவர்களில் பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவர். உறுப்பினர்களில் ஒருவர் அவரைப் ‘பிரசாரக் கவி’ என்று கழித்துவிட்டதாகச் செவிவழிச் செய்தி உண்டு. எங்கள் புரட்சிக் கவிஞரே புறந்தள்ளப்பட்டிருக்கிறார். உ.வே.சாமிநாத அய்யருக்கு நிகழ்ந்த பாராட்டு விழாவில், அவரைப் பற்றிக் கவிதை பாடவந்த பாரதியை ‘அவர் தமிழ் மரபு சார்ந்த கவியல்ல’ என்று தடுத்த வரலாறும் உண்டு. இப்படி மகா கவிகளுக்கெல்லாம் ஒருகூட்டம் அவமானங்களையே ஆபரணங்களாகத் தந்திருக்கிறது; ஏன் எனக்கும் அது நேர்கிறது?
நீங்கள் பாடலாசிரியர்தானே; உங்களுக்கு இந்த விருது பொருந்துமா என்கிறார்களே?
அடிப்படையின் நான் ஒரு கவிஞன். 1972இல் வைகறை மேகங்கள், 1979இல் திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற இரண்டு படைப்புகளாலும் கவிஞன் என்ற அடையாளம் பெற்ற பிறகுதான், 1980இல் திரைத்துறைக்கு வருகிறேன். நான் எழுதிய முதல் பாடலே ஒரு கவிதைதான். 46 ஆண்டுகளுக்குப் பிறகும் வானம் போதிமரமாகவே இருக்கிறது; இன்னும் பல நூறாண்டுகளுக்கும் இருக்கும்.
நான் எழுதிய 8000 பாடல்களில் 5000 பாடல்கள் இசை இலக்கியங்கள்; மெட்டுக்களைக் கழற்றிவிட்டால் கவிதைகள். எனவே பாடலாசிரியன் என்பவன் இழிந்த ஜாதி அல்ல. ஒன்றை மறந்துவிடாதீர்கள். ‘பாப் டிலன்’ என்ற இசைப் பாடலாசிரியனுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கே தகுதியுடைய பாடல் என்ற கலைவடிவத்தை ஞானபீடத்துக்கா கூடாதென்கிறீர்கள்? ஓ.என்.வி.குரூப், குல்சார் இரண்டுபேரும் ஞானபீடம் பெற்றவர்கள். இவர்கள் பாடலாசிரியர்களா இல்லையா? பாடல் என்று பார்க்கக் கூடாது; பாடலின் தரம் பார்க்க வேண்டும்.
ஞானபீட விருதுபெறும் ஒரு படைப்பாளிக்கு முதல் தகுதி என்ன?
எழுத்தாளனின் படைப்புகளும், எழுத்தாளன் பெயரும் சில பத்து ஆண்டுகள் தேசிய வானத்தில் மிதந்துகொண்டே இருக்க வேண்டும். அந்தப் பெயர்களில் ஒன்றைத்தான் ஞானபீடம் அடையாளம் காணும்.
உங்கள் படைப்புகள் சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்துவிட்டனவா?
இல்லை. அவை சேரவேண்டிய தூரம் நட்சத்திரங்களைத் தாண்டி இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசத்திலும், கருவாச்சி காவியத்திலும், வைரமுத்து கவிதைகளிலும், ஆயிரம் பாடல்களிலும் சொல்லப்பட்ட வாழ்வும் கண்ணீரும் நம்பிக்கையும் மனித குலத்தின் கடைசிப் பெருமூச்சுவரை நீளவேண்டியவை; மொழி எல்லையைக் கடக்கவேண்டியவை; உலகத்தின் முக்கிய மொழிகளிளெல்லாம் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை; மொழிபெயர்க்கப்படும். ஒருநாள் நோபல் பரிசின் கனத்த மேஜையைத் தொடும்; அதற்கு ஞானபீடம் வாசல் திறந்து வழிவிடும்.
– சோழன்


