ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ்

pasavga-2adபசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , நயனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக இயக்குநர் பாண்டிராஜ் பேசிய போது , ” வம்சம் படத்துக்கு பிறகு இந்த மேடை தான் எனக்கு மிகப்பெரிய மேடை. வம்சம் படத்தின் நாயகன் அருள்நிதி அந்த படத்தின் பாடல் வெளியீட்டின் போது இதை போல் ஒரு மேடை உங்களுக்கு நிச்சயம் கிடைக்காது என்றார். அவர் சொன்னது போலவே எனக்கு அதை போன்ற ஒரு மேடை அமையவில்லை. இது போன்ற பாடல் வெளியீட்டு விழா எனக்கு அமைய ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாள் நான் காசுக்காக படம் பண்ணி கொண்டு இருந்தேன். இப்போது நியாயமான ஒரு படம் பண்ணி இருக்கிறேன். புரியும் வகையில் கூறவேண்டும் என்றால் இவ்வளவு நாள் ஆவின் பால் தயாரித்து கொண்டு இருந்தேன் இப்போது மறுபடியும் தாய்ப் பால் தயாரித்து உள்ளேன். நான் இந்த படத்தின் மூலமாக சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நாம் சொல்லும் நல்ல விஷயங்கள் எளிதாக மக்களிடம் போய் சேரவேண்டும் என்றால் சூர்யாவை போல் ஒரு பெரிய நடிகரை வைத்து சொன்னால் மக்களிடம் எளிதாக போய் சேர்ந்துவிடும். நாம் சொல்ல நினைக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரின் வாயிலாக கூறினால் மக்களிடம் எளிதாக சென்றடையும். கவின் , நயனா என்னும் இந்த இரண்டு சிறுவர்கள் தான் படத்தின் நாயகன் நாயகிகள்” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

” நூறு கோடி வசூல் செய்யும் நடிகர் சூர்யா பசங்க2ஐ போன்ற  தரமான படத்தில் நடித்துள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. என்னுடைய மகனை “ நீ பிள்ளை இல்லடா தொல்லைடா” என்று நான் அடிக்கடி திட்டுவது உண்டு , அந்த வரிகளை படத்தில் நான் பாடலில் சேர்த்துள்ளேன். என்னுடைய மகன் அதை கண்டுபிடித்து என்னிடம் கேட்டார் ”என்றார் பாடலாசிரியர் நா.முத்து குமார்.

 

இயக்குநர் ராம் பேசிய போது ”, எனக்கே அட்வைஸ் சொல்லும் அளவுக்கு தைரியம் இயக்குநர் பாண்டிராஜை தவிர வேறு யாருக்கும் இல்லை. என்னை வசூலில் சாதனை படைக்கும் படங்களை எடுக்க சொல்லி அடிக்கடி கூறுவார்.”

இயக்குநர் சீனு ராமசாமி பேசிய போது ,” என்னுடைய பாட்டியும் , என்னுடைய அம்மாவும் நடிகர் சிவகுமார் அய்யாவை முருகபெருமானாக பார்க்கிறார்கள் , இனி வருங்காலத்தில் நடிகர் சூர்யாவை ஆசிரியரை போல பார்ப்பார்கள்” என்றார்.

 

நடிகர் கார்த்தி பேசியபோது , ”இந்தியாவின் மக்கள் தொகையில் அதிகம் பேர் முப்பது வயதுக்கும் கீழே உள்ளவர்கள் தான். அவர்கள் கையில் தான் இந்த நாடு உள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து வந்துள்ள இந்த படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறும்” என்றார்.

 

நடிகர் சூர்யா பேசியபோது , ”எனக்கு இந்த பசங்க-2 படத்தை தயாரித்து நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் இதை போன்ற சிறந்த படத்தை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகள் அனைவரும் இந்த படத்தில் வேலை செய்த துணை இயக்குநர்கள் அனைவரோடும் இணைந்து சிறப்பாக வேலை செய்து , அவர்களுடனேயே இருந்து படத்துக்காக உழைத்துள்ளனர். படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.