திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படமான உத்தம வில்லன் படத்துக்கு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.. ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
இப்படம் ஏப்ரல் 10 -ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது .
கலைஞானி கமல்ஹாசன் உத்தம வில்லன் தொடர்பாகவே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.செய்தியாளர்களுக்குக் கமல் கொடுத்த சுதந்திரத்தில் அது தனிப்பட்ட அவரது சந்திப்பாக மாறிவிட்டது.செய்தியாளர்களோ தமிழிலும் ஆங்கிலத்திலும் சரமாரியான கேள்விகள் கேட்டனர். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு கமல் சளைக்காமல் பதில் அளித்தார். இதோ அதன் தொகுப்பு :
இந்த உத்தம வில்லன் என்கிற படம் அதை விடப் பெரியதா? இதை விடப் பெரியதா? என அளவு பார்க்காமல் என்னுடைய வாழ்க்கையில் என்னையும் அறியாமல் அது முக்கியத்துவம் பெற்று விட்டது. இதை எடுக்கும் போது ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் இருந்தோம். அது இப்போது மறக்க முடியாத படமாக எங்களுக்கு மாறியிருக்கிறது. கே.பி.சார் அதில் நடிக்க ஒப்புக் கொண்டதும், நடித்து முடித்துக் கொடுத்ததும் ஆச்சரியமானது. நல்ல திறமையாளர்கள் இதில் இருக்கிறார்கள். எல்லா கோணங்களிலும் இந்தப் படம் முழுமையாக வந்திருக்கிறது. ‘தேவர் மகன்’ படத்தை பற்றி பேசப்படும் பேச்சுக்கள் இந்தப் படத்தை பற்றியும் பேசப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளதுஎன்ன மாதிரியான கதை?
இது ஒரு மனிதனின் வாழ்க்கை.இது ஒரு நடிகனின் கதை. கலைஞனின் கதை. ஜெயகாந்தனின் கதையில் எங்காவது அவர் இருப்பார். என் படங்களிலும் நான் எங்கேயாவது இருப்பேன். இது ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் இருக்கும் கதை.
‘நாயகனி’ல் கூட நான்இருப்பேன். ஆனால் கடத்தல் வேலை. கொலை எல்லாம் செய்ததில்லை என்றாலும் அதில் நான் இருக்கிறேன்.எந்த இந்திய நடிகர் பார்த்தாலும் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியின் பிரதிபலிப்பாக இது இருக்கும். மற்றபடி இது சினிமாத்துறையை கிண்டலடித்து எடுக்கப்பட்ட படம் அல்ல. .
உத்தம வில்லன் படத்தில் என்ன இருக்கிறது? என்ன இல்லை?
இதில் நல்ல வேளையாக எல்லா பாகங்களும் சரியாக, சிறப்பாக அமைந்துள்ளன. அப்படி சில படங்களுக்கு மட்டுமே அமையும்.இதில் நாசர்,தம்பி எம். எஸ். பாஸ்கருக்கு நல்ல பாத்திரங்கள். லாரிகள் தலை குப்புற விழுகிற காட்சிகள் இல்லை முகத்திற்கு நேரே காலை வைத்து அடிக்கும் காட்சிகள் இல்லை சண்டைகள் வன்முறைகள் காட்சிகள் இல்லை.
இதை வேண்டுமென்று தவிர்க்கவில்லை. இந்தக் கதைக்குத் தேவைப்படவில்லை.எனவே வன்முறையற்ற படமாக வாய்த்துள்ளது.
உத்தமன் யார்? வில்லன் யார்?
இரண்டும் ஒரு ஆள்தான் .வில்லன் என்பதை ஆங்கில வார்த்தையாகப் பார்க்க வேண்டாம். வில்லாளன்,வில்லாளி, வில்லாதிவில்லன் வில்வித்தைக்காரன் வில்லன் என்று பாருங்கள். இதில் வில்லுப்பாட்டும் இருக்கிறது.
பாலசந்தரை நடிக்க வைத்தது பற்றி..?
இதற்கு முன்பே அவரை பயன்படுத்திருக்கலாமே? என கேட்பவர்களும் உண்டு. முன்பே முயற்சி செய்தோம். தவிர்த்து வந்தார்.இனியும் விடக் கூடாது என்று முடிவு செய்து நடிக்க வைத்து விட்டோம். கேட்ட போது முதலில் வேண்டாம் என்றார். பாதியில் இந்தப் படத்தை நிறுத்த வேண்டி வரும் எனக் கூட அவர் கேட்டார். அவர் எதை மனதில் வைத்து அப்படி சொல்கிறார் என்று தெரிந்தது. அப்படி நிறுத்தினால் கதையை மாற்றி எழுதிக் கொள்கிறேன் சார், தயவு செய்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ஒருவாரம் அவகாசம் கேட்டார். நடிக்கும் முதல் நாளில்கூட முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்றார். நான் வயதானவன் இடையில் ஏதாவது ஆனால் என்ன செய்வது என்றார் பரவாயில்லை என்றேன். சரி சீக்கிரம் எடுத்து முடியுங்கள் என்றார். முடித்தோம். சீக்கிரம் டப்பிங் முடியுங்கள் என்றார். முடித்தோம்.படத்தையும் போட்டுக் காட்டுங்கள் என்றார். இவர் இப்படித்தான் பயமுறுத்திக் கொண்டே இருப்பார் என நினைத்து விட்டேன். இப்போதைக்கு புலி வராது என்று எண்ணினேன். ஆனால் வந்து விட்டது.
கேபி என்னவாக வருகிறார்?
மார்க்கதரிசி என்பது அவர் பெயர். அது யார்.. அவர்தான்.. அவருக்கு மதிப்பு கொடுத்து நடிக்க வைத்தோம்.
அவரை நடிக்க வைத்த போது அவரிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிப் போனது நினைவுக்கு வந்தது. அப்போது வழக்கமாக நான் இரவல் வாங்கிச் செல்லும் பழைய ஸ்கூட்டர் கூட இல்லை. நடந்தால் வேர்த்து விடும் என்று பயந்து வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு போனேன். போகிற போது அம்மா கேட்டார். யாரை பார்க்க எதற்கு என்று கேட்ட பிறகு போட்டோ எடுத்துக்கிட்டு போ.. என்றார். நான் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுப் போகிறேன் திறமைதானே முக்கியம் போட்டோ எதற்கு என்றேன். சரி.. எடுத்துக்கிட்டு போடா என்றார். டைட் பேண்டில் போட்டோவைத் திணித்துக் கொண்டு போய் கேபியைப் பார்த்தபோது போட்டோ இருக்கா என்று கேட்டார். .அப்போது நினைத்துக் கொண்டேன் கிழவி.. நீ அறிவாளிதான் என்று.. .அவர் கூட இருக்கும் போது சிலநேரம் அதிர்ஷ்டக் காற்று அடிக்கும்.அது என்னைப் போன்ற சிலருக்குசிலநேரம் அப்படி அடித்துள்ளது. அவருக்கு பிடித்திருந்தால் அவருடைய உதவி இயக்குநர்களை சில சமயம் இயக்குநராகவே பணியாற்ற வைப்பார். காலம் சென்ற அமீர்ஜான் கூட அப்படி சில சமயங்களில் இருந்திருக்கிறார். அவரிடம் வேலை பார்த்த போது புன்னகை மன்னன் சமயம் சில காட்சிகளை நான் இயக்கி இருக்கிறேன்.இப்படி பழைய நினைவுகள்எல்லாம் நினைவில் வந்தன
அவரது கதாபாத்திரம் எப்படி ?
அவர் ஒல்டஸ்ட் யங்மேன். ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. இரண்டு விதமான காலக் கட்டங்களில் நடக்கிற இந்தக் கதையை இணைப்பதே அவர்தான்மார்க்கதரிசி என்ற கதாபாத்திரம் அவருடையது. அந்தப் பாத்திரம் யாரென்றால் அது நான்தான் என அவரே ஒப்புக் கொண்டுள்ளார். நாங்கள் அவரிடம் பார்த்து வியந்த கதாபாத்திரத்தை அவர் மூலமாக நிழலாட வைத்திருக்கிறோம். அப்படி நான் நேரில் பார்த்த விஷயங்கள்தான் பாலசந்தரின் கதாபாத்திரம். அவரை நடிக்க வைத்து வைத்துள்ளது பெருமையாக இருக்கிறது.
உங்கள் இயக்கத்தில் அவரை நடிக்கவைக்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டா?
நான் இயக்கினால் என்ன? ரமேஷ்அரவிந்த் இயக்கினால் என்ன?நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள். ஒரு பள்ளியின் மாணவர்கள். அவர் இயக்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அந்த அளவுக்கு நல்ல நண்பர்கள்.
எந்த அளவுக்கு.நல்ல நண்பர்கள். என்றால் என்னிடம் 30 கதைகள் இருக்கின்றன என்றால் அவரிடம் அதில் 20 கதையாவது சொல்லி அவருக்குத் தெரியும்.அந்த அளவுக்கு நல்ல நண்பர்கள். நான் கதை யாரிடமாவது சொல்ல வேண்டும் மனம் புண்படாத வகையில் கருத்தும் குறையும் சொல்லும் நண்பர்கள் என்கிற சில நண்பர்களில் அவரும் ஒருவர்.அந்த அளவுக்கு நாங்கள் நல்ல நண்பர்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய கேரக்டர் இருக்கிறதா?
இந்த கேள்வி கேட்கும் போது எனக்கு சிரிப்பு வரும். சொல்வதற்கே 30 கதைகள் என்னிடம் இருக்கும். அப்படி இருக்கும்போது செய்ய வேண்டிய கேரக்டர் இருக்கிறதா என்றால் சிரிப்புதானே வரும்.?
ரமேஷ் அரவிந்த் எப்படி இதில் இயக்குநர்ஆனார்?
ரமேஷ் அரவிந்த்என்னுடன் பல கதை விவாதங்களில் கலந்து கொண்டவர் தசாவதாரம் மட்டுமல்ல, விஸ்வரூபம்,விருமாண்டி, இப்படி பல படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொண்டவர் பல ஆண்டுகளாக நாங்கள் பேசி வருகிறோம். அதை அவர் தன் சொந்த பயிற்சியாக எடுத்து கொண்டிருக்கிறார்.. அதனால் அவரிடம் கதை சொல்லிப் பார்ப்பேன். என் மீது பாசமுள்ளவர்களிடம் கதையை சொல்லிப் பார்ப்பேன். என்ன குற்றம் இருக்கிறது என கேட்பேன். அப்படி பல கதைகளை பேசியிருக்கிறேன். இந்தக் கதையை இயக்க சொன்ன போது அவருக்கு சந்தோஷம் மட்டுமே இருந்தது. வியப்பு எதுவும் இல்லை.ரமேஷ் அரவிந்த் தேர்ந்தெடுத்த கதைதான் இது.
இதில் உங்களுக்கு ஜோடியார்?
முக்கியமாக 2 பேர் இருக்கிறார்கள், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதிமேனன், ஜெயராம், இயக்குநர் கே.விஸ்வநாத் ,நாசர்,பாஸ்கர் எல்லாருக்கும் நல்ல வேடங்கள்தான்.
இதற்கான தொடக்கம் எது?தூண்டுதல், எது,,?
பல உள்ளன உலகசினிமா பல உண்டு. சிலர் அழுவார். சிலர்சிரிப்பார். சிலரைப் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியாது. அப்படி ஒரு கேரக்டர் உத்தமவில்லன். மிருத்யுஞ்ஜெயன்.. கலைஞன் கர்வமுள்ளவன் அவனது கர்வம் பற்றிய கதை.
எல்லாப் படங்களிலும் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருகிறதே?
என்ன செய்வது ? இடையூறு என் அட்ரஸ் ஆகிவிட்டது. என் அட்ரஸ் எண் 4 இடையூறு தெரு என்று ஆகியிருக்கிறது.
எந்தப் படத்தை எடுத்தாலும் அது என் கதை என்று வம்பு வழக்கு போடுவது சகஜமாகி வருகிறதே..?
தசாவதாரம் என் கதை என்றார்கள். அந்த வழக்கு என்னாயிற்று? போட்டவர் எங்கே? இதை எல்லாம் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. விடிவுகாலம் வரும் எதெதற்கு வழக்குகள்..?
‘மும்பை எக்ஸ்பிரஸ்’ எதிர்த்து பிரச்சினை..எக்ஸ்பிரஸ் என்று ஏன் இருக்கிறது என்று ரயில்வே ஸ்டேஷனில்தானே போராட வேண்டும்? என்னிடம் வருகிறார்கள். விரைவு புகை வண்டி என்று யாரும் சொல்வதில்லை எக்ஸ்பிரஸ் என்று சொல்லிக் கொள்பவர் கள்தான்.. இப்படி தமிழ் என்று பேசுகிறார்கள். மும்பையை தமிழில் எப்படி சொல்வது.?
சண்டியர் கூடாது என்று ஒரு பிரச்சினை பிறகு அதே பெயரில் ஒரு படம் வந்ததாகச் சொன்னார்கள்.
தணிக்கை குழு கெடு பிடிகள், கதை திருட்டு, நீதிமன்ற வழக்குகள் என படைப்பாளிகளின் சுதந்திரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறதே…?
தணிக்கைத் தறையின் சில நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்கவையாக மாறிவருகின்றன .படைப்பாளியின் சுதந்திரத்தை தேச முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருக்கிறது. வெறும் சான்றிதழ் கொடுக்கும் துறையாக இருக்க வேண்டியது தணிக்கை குழுவாக மாறியிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன். நான் ஒரு விஷயத்தை சொல்லத் துடிப்பவன்.
உங்கள் 3 படங்களில் தொடர்ந்து ஜிப்ரான் இசையமைப்பது பற்றி?அவர் முதலில் ‘விஸ்வரூபம் 2’ என்கிற ஒரு படத்துக்குத்தான் வந்தார். நல்ல புரிதல் இருந்தது. அது பிடித்துப் போய் அடுத்தபடம்.உத்தமவில்லன். 3 வது படம் தயாரிப்பு நிறுவனம் தந்த வாய்ப்பு.
இளையராஜா ஏன் இதற்கு இசையமைக்கவில்லை?
அமையவில்லை. சிங்காரவேலனுக்குப் பிறகு அவர் ஏன் என்னை வைத்துப் படமெடுக்க வில்லை என்று நான் கேட்க முடியுமா? அது போல்தான்.
மருதநாயகம் மீண்டும் தொடருமா?
பலர் கேட்டிருக்கிறார்கள். அது பெரியபடம்ஆங்கிலப் படமாக பிரெஞ்சுப்படமாக உலகப்படமாக வரக் கூடடியது. இதையும் கூறி எச்சரிக்கை விடுத்திருக்கிறேன். தொடரும் என்று நினைக்கிறேன்.
கே.விஸ்வநாத் நடித்துள்ளது பற்றி..?
அவரும் கேபியும் மனஸ்தாபமுள்ள பழைய நண்பர்களாக வருகிறார்கள்.
‘விஸ்வரூபம் 2’ எப்போது வரும்?
எப்போது வரும் என்று ஆஸ்கார் நிறுவனத்துக்குத்தான் தெரியும். ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எனக்கும் ஆர்வம் இருக்கிறது. உத்தம வில்லன், பாபநாசம் படங்கள் வெளிவந்த பின்னர் விஸ்வரூபம் 2 வரும். அதன் பின்னும் ஆஸ்கார் நிறுவனம் தாமதித்தால் எனது இன்னொரு படம் வரும்.
‘விஸ்வரூபம்-2’ படத்தை தயாரித்திருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கு மனஸ்தாபம் உள்ளதா?
நிச்சயமாக இல்லை. எனக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் இடையில் எந்த மனஸ்தாபங்களும் இல்லை. அவர் இந்த படத்தை வெளியிடுவதற்கு ஒருசில காரணங்கள் சொல்கிறார். ஆனால், அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. எனக்குப் புரியவில்லை.அவர் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை .
வரிசையாக தொடர்ந்து 3 படங்களில் நடித்து முடித்துள்ளீர்களே?
என்னால் சுமமா இருக்க முடியாது, நேரத்தை வீணடிக்க முடியாது. ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள். வேலை செய்யும் ஆசை இருக்கிறது. கொஞ்சம் திறமையும்இருக்கிறது..
வேறு மொழிப் படங்களைச் காப்பியடிப்பது அதிகம் உள்ளதே?
உண்மையில் இப்போதுதான் குறைந்து இருக்கிறது. முன்பு அதிகம் கேசினோ தியேட்டரில்ஆங்கிலப் படம் வந்தாலே தேங்காய் உடன் சென்று பூஜைபோடுவது உண்டு ஒரு காலத்தில்.
நம் மண், நம் கதை என்கிற கர்வம் இப்போது வந்திருக்கிறது.
ஒரு மொழியில் வந்ததை வேறு மொழியில் இன்ஸ்பயர் ஆகி எடுப்பது தவறில்லை. இந்த கெட்ட குணத்தைக் கற்றுக் கொடுத்தவன் கம்பன். தக்கயாகப் பரணி கூட சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்கிறார்கள்.
இதில் பிறபடங்களின் சாயல் இருக்குமா?
இங்கே எதுவும் ஒரிஜினல் இல்லை. நானே ஒரிஜினல் இல்லை, அப்பா, அம்மா முகச் சாயலுடன்தான் இருக்கிறேன். அப்புறம் எப்படி ஒரிஜினல்? இரண்டு மூக்குடன் இருந்தால்தான் தனித்தன்மை எனலாம்.
பார்த்த படங்கள், பழகிய நண்பர்கள் கேட்ட கதைகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.
ஒரு நண்பரிடம் சிறிது நேரம் பேசினாலே அவரது நல்ல கெட்ட குணங்கள்,வார்த்தைகள் எனக்குள் வந்து விடுகின்றன. தானே முயற்சி செய்தால் தனி மனித கர்வம்தான் வெளிப்படும். என்னிலிருந்து வெளிப்பட்ட தனித்துவத்துக்குதான் நீங்கள் கமல்ஹாசன் என பெயர் சூட்டியூள்ளீர்கள். என்னை கமல் என யாராவது அழைக்கும் போது, அவர் மூன்றாவது மனிதராகத்தான் தெரிகிறார். என்னை நான் கமல் என நினைத்துக் கொள்வதில்லை. என்னை நான் என்று மட்டுமே நினைத்துக் கொள்கிறேன். பாலசந்தர் சார் சினிமாக்களில் சோகமும், நகைச்சுவையும் கலந்திருப்பதை பார்க்க முடியும். உலக சினிமாக்களில் சாப்ளின் போன்றவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு படம்தான் உத்தம வில்லன்.
திருட்டு விசிடிக்கு எதிராக போராட வேண்டி இருக்கிறதே..?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை முதலீடு செய்கிறார்கள். தயாரிப்பாளர் பணத்தைமுதலீடு செய்கிறார் நான் என் நேரத்தை உழைப்பை முதலீடு செய்கிறேன். பைரசிக்காரர்கள். முதலீடே இல்லாமல் செய்பவர்கள். அவர்களுக்கு வேறு தொழில் இருக்கும். இதையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்களை எதிர்த்து உண்ணா விரதம் இருப்பது உதவாது. காந்திக்குப்பிறகு உண்ணா விரதம் என்பதற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. திருட்டு விசிடியை ஒழிக்க என்ன கருவி இருக்கிறது. என்று எனக்குக் தெரியவில்லை.
படம் நஷ்டமடைந்தால் பணம் வேண்டும் என்ற நிலை உள்ளது.திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பணத்தின் மேல் யாருக்குதான் ஆசை இல்லை. அந்த ஆசையில் எல்லோரும் இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. இந்த குணாதிசயம் படம் பார்க்கும் ரசிகனுக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பாதி சினிமா பார்த்தேன் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி கொடு என்று கேட்டால் என்னவாகும் என நினைக்கிறேன். ஆனால், அந்த மாதிரி நிறைய படங்களை எடுக்கிறோம். பாதி வரை பார்ப்பது பெரிய விஷயமாக இருக்கும் அளவுக்கு படங்களை நாம் எடுக்கிறோம்.
தமிழ் சினிமாவின் வெற்றி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதே?
தமிழ் சினிமா அழியக் கூடாது என்பதுதான் என் விருப்பம். ஏனென்றால் மொழியின் அழிவையும் அது சுட்டிக் காட்டும் விஷயமாகி விடும். தமிழ் சினிமா என்பது இல்லாமல் போய் விட்டால் தமிழ் இல்லாமல் போய் விடும் என்ற கவலை எனக்கு உண்டு. மொரீசியஸ் நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் மேல் அவ்வளவு பற்று. ஆனால், அவர்கள் வீட்டில் யாருக்கும் தமிழ் பேச வராது. ஏனென்றால் அங்கே தமிழ்க் கலை சென்று அடையவில்லை. எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததே தமிழ் சினிமாதான். சண்முகம் அண்ணாச்சி உள்ளிட்ட வாத்தியார்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கி்ன்றன. தமிழ் சினிமா எனக்கு கற்றுக் கொடுத்த தமிழ் எனக்கு மீண்டும் தமிழ் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறது.
சம கால வலியை பதிவு செய்வது சினிமாக்களின் கடமை… ஆனால் ஈழப் போரின் பதிவுகள் இன்னும் சினிமாவில் முழுமையாகவில்லையே…?
தொட முடியுமா சொல்லுங்கள்? சுற்றி வளைத்து தொட்டதற்கே பிரச்னைகள் இல்லாமல் என்னால் அணுக முடியவில்லை. ‘தெனாலி ‘படம் அதற்கான உதாரணம். தெனாலியை ஏன் எடுக்க வேண்டும் என கேட்டார்கள். நான் தமிழன். அது என்னுடைய ஆசை. குழந்தை தடுக்கி விழும் போது, அது கிறிஸ்து குழந்தையா? முஸ்லீம் குழந்தையா? என்று பார்க்க மாட்டோம். குழந்தை என்கிற உணர்வுதான் முதலில் வரும். இந்த உயிர்க்கொலைகள் எந்த இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், குரல் கொடுக்க வேண்டிய கடமை 21-ஆம் நூற்றாண்டு மனிதனுக்கு, உலக குடிமகனுக்கான உரிமை. பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளும் எனக்கு நடக்கும் கொடுமைகளாக நான் நினைக்க வேண்டும்
-நமது நிருபர்