இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ பேண்டஸி திரில்லர் வெப் மூவி!

தன் உதவி இயக்குநர் இயக்கும் ‘மோகினிப் பட்டி’ என்கிற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஜெயவீரன் காமராஜ் இயக்கி உள்ளார்.

பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு
ஃபிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் .இவர்
மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற
சுமார் பத்து குறும்படங்கள், இசை ஆல்பங்கள் என்று இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ஜெய வீரன் காமராஜ் பேசும்போது,

“மோகினிப்பட்டி என்பது கற்பனையாக
உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தைச் சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை ”
என்று படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயவீரன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது,

“இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்” என்று கூறுகிறார் .

முறையான கதையையும் நடிப்புக் கலைஞர்களின் திறமையான நடிப்பையும் நம்பி சிறிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளதாகக் கூறும் இயக்குநர்,இப்படத்திற்கு எஸ். ஏ. சந்திரசேகரன் நடிப்பதற்குக் கொடுத்த ஒத்துழைப்பைப் பற்றி வியந்து மகிழ்ந்து கூறுகிறார்.

” ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரான எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் உண்டு .சின்னச் சின்னதாகக் கதைகள் அமைத்துப் பார்ப்பேன். ஆனால் இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் நான் ஃபிலிம்அகாடமி ஒன்றில் சேர்ந்து படித்தேன். அங்கு சினிமாவில் இயக்கம், ஒளிப்பதிவு ,எடிட்டிங் என அனைத்தையும் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. எனக்கு இயக்கம் மட்டுமல்ல ஒளிப்பதிவு செய்யவும் எடிட்டிங் செய்யவும் தெரியும் என்கிற நம்பிக்கை அங்கு கற்ற பிறகுதான் வந்தது. அதன்படியே நான் இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லாமும் செய்து கொண்டிருக்கிறேன்.
அகாடமி படிப்புக்குப் பிறகு நான் எஸ். ஏ .சந்திரசேகர் அவர்களிடம் ஒரு பைலட் பிலிமில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன். அதன் பிறகு அவர் சமுத்திரக்கனியை வைத்து இயக்கிய ‘நான் கடவுள் இல்லை ‘ என்ற
படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அப்போதெல்லாம் அவரிடம் ஏராளம் கற்றுக் கொண்டேன். அவர் மிகவும் கண்டிப்பானவர், கோபக்காரர் என்றெல்லாம் சொல்வார்கள்.நெருங்கிப் பார்த்தால் அவர் மிகவும் அன்பானவர். அவர் உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்குச் சமமான மரியாதை கொடுப்பவர். அனைவரிடம் சமமாகப் பகிர்ந்து கொள்வார். சமமாகவும் சொல்லிக் கொடுப்பார். சொல் பேச்சு மாறாமல் இருப்பவர்.
சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு அவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன் .அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார். அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன.ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது. நாம் உயரத்தில் வைத்து இயக்குநராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். சில காட்சிகளில் எனக்குத் திருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது.குறிப்பாக கல்லுப்புலியான் கோவில், காவேரிப் பாலம், ஏர்போர்ட் அருகே உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்.

மோகினிப் பட்டி என்பது ஒரு சித்தரிக்கப்பட்ட பேண்டஸி கிராமம் .அந்த ஊரில் தான் இந்தக் கதை நடக்கிறது.திருச்சியில்தான் பெரும்பாலும் எடுத்தோம்.சென்னையில் சில ஷூட்டிங் ஹவுஸ் களிலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப் படத்தில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சினிமா தாகத்தோடு உள்ள பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் .அப்படி சங்கீத் , நிரஞ்சன் சிவசங்கர், தெளபிக்கா, ஜெயஸ்ரீ என்று நடிக்க வைத்தோம். ஒளிப்பதிவு எம்.கே.கமலநாதன், இசை மனோஜ் குமார் பாபு.


ப்ளூ மூன் ஸ்டுடியோ சார்பில் ஜெயபாரதி காமராஜ் தயாரித்துள்ளார். இது
பேண்டஸி திரில்லர் படமாக உருவாகியுள்ளது

வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர்.