‘லியோ’ விமர்சனம்

விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார்கள். 7ஸ்க்ரீன் ஸ்டுடியா சார்பில் எஸ் .லலித் குமார் தயாரித்துள்ளார். இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. இயக்கம் லோகேஷ் கனகராஜ்.

ஒரு சிறிய மலைப்பகுதிக் கிராமம். அது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது.
அங்கே காபி ஷாப் வைத்திருக்கிறார்  விஜய்.அவரது பெயர் பார்த்திபன். அவர் மனைவி, பிள்ளைகள் என நல்ல குடும்பஸ்தராக நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் .
அவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர் மட்டுமல்ல,அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பீதி கிளப்பும் காட்டு விலங்குகளைப் பிடித்து மீண்டும் வனத்துக்குள் விடுபவர். அப்படி ஒருமுறை ஊருக்குள் வந்து விடும் கழுதைப்புலியை திறமையாக தைரியமாகப் பிடிக்கிறார். அதன் மூலம் ஊர் மக்களிடம் நல்ல பெயரைப் பெறுகிறார்.

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் அந்த மலைப்பகுதியில் சாலை விபத்துகளை ஏற்படுத்திப் பணம் பறிக்கிறது மிஷ்கின் கும்பல். அந்தக் கும்பல் விஜயின் காபி ஷாப்புக்குள் நுழைந்து விடுகிறது. அவர்களால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து என்று வரும் நெருக்கடியான சூழலின் உந்துதலால் அந்த மொத்தக் கும்பலையும் சுட்டுக் கொன்றுவிடுகிறார்.தற்காப்பு முயற்சி என்பதால் சிறை சென்று ,நீண்ட காலத் தண்டனை கிடைக்காமல்  வெளியே வருகிறார்.
அவரது புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன லியோ தாஸ் தான் இந்தப் பார்த்திபன் என்று சஞ்சய்தத் தலைமையிலான ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் நினைக்கிறது.
இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல தொல்லைகள் வருகின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா? இறந்துபோன லியோ யார்? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதே ‘லியோ’ திரைக்கதை செல்லும் பாதை.

விஜய் அமைதியான குடும்பத் தலைவனாக பார்த்திபன் பாத்திரத்திலும், ஆக்‌ஷனில் ஆவேசம் காட்டும் லியோ பாத்திரத்திலும் வித்தியாசம் காட்டிச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  உள்ளார். ஆக்‌ஷன், அழுகை, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மனைவி தன் மீது சந்தேகப்படுவது தெரிந்து மனமுடைந்து குமுறிஅழும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.

பொதுவாக ஆக்சன் படங்களில் ,குறிப்பாக லோகேஷ் கனகராஜ் படங்களில் கறிவேப்பிலை போல் கதாநாயகிகள் பயன்படுத்தப் படுவார்கள் என்பதில் இருந்து மாறுபட்டுத் தெரிகிற த்ரிஷா பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்க ப்பட்டுள்ளது. அவரது தோற்றம் என்றும் மாறா இளமைக்குச் சாட்சி. விஜய் – த்ரிஷா இடையிலான ரசாயன சேர்மான மாற்றம் நன்கு வெளிப்பட்டுள்ளது.

இதில் சஞ்சய் தத், அர்ஜுன் என்ற இரண்டு வில்லன்கள் இருந்தும் இருவருமே பலவீனர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள்.யானைப் பசிக்காரர்களுக்கு சோளப்பொரி போல் அவர்களுக்கு எடை குறைந்த வாயப்புகள் அளிக்கப்பட்டுள்ளன ,பெரிதாக அவர்களின் நடிப்பைப் பயன்படுத்தவில்லை .

வனத்துறை அதிகாரியாக வரும் கெளதம் மேனன் ஏற்ற கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.
படத்தில் வரும் ஜார்ஜ் மரியானும் பயன்படுத்தப்பட்டு மனதில் பதிகிறார்.
இவர்கள் தவிர பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி ஆகியோர் சரிவரப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளனர். அனுராக் காஷ்யப் கதாபாத்திரம் மிகப் பரிதாபம்.

தன் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வான் என்கிற கருத்தை இதில் மேலோங்க வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ்.

அனிருத் இசையில் ‘நான் ரெடிதான் வரவா’ பளிச்.பின்னணி இசையில் பக்கா கமர்ஷியல். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு இமாச்சலின் வெண்பனிப் பரப்பு அழகைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறது. சஞ்சய் தத்தின் போதைப் பொருள் கிடங்கு, விஜய்யின் வீடு, காபி ஷாப் ஆகியவை கலை இயக்குநரின் உழைப்புக்குச் சான்றுகள்.

திரைக்கதையில் உழைப்பைக் காட்டாமல் செயற்கை உந்துதலில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை லோகேஷ் அதிகரித்துள்ளார் என்றே கூற வேண்டும்.முன்பே யூகிக்க வைக்கக் கூடிய சில காட்சிகள் இதற்கு உதாரணம்.

புதிய பின்புலக் காட்சிகள் விஜய்யின் நடிப்பு, ஸ்டைலிஷ் மேக்கிங், அதிரடி ஆக்‌ஷன் என்று முதல் பாதி செல்கிறது.
இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்சன் மசாலாவாக மாறிவிடுகிறது. இரண்டாம் பாதியை இயக்கியவர் சண்டை இயக்குநர் அன்பறிவோ என்று நினைக்கும் அளவிற்கு ஏராளமான சண்டைக் காட்சிகள் வருகின்றன.

ஒரு திரைப்படத்திற்குக் கதையை விட காட்சிகளே முக்கியம் என்ற நினைப்பில் இந்தப் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் லோகேஷ். . கடைசி வரை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இசையமைப்பாளர் அனிருத்தும் லோகேஷ் கனகராஜின் ஆக்சன் அமர்க்களத்தில் கை கொடுத்துப் படத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

இப்படம் ஆக்சன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து