தமிழ் பட உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். கடந்த வாரம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இயக்குநர் பாலச்சந்தரின் உயிர் இன்று மாலை 7 மணியளவில் பிரிந்தது.அவருக்கு வயது 84. அவருக்கு தற்போது திரையுலகினர் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள்
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்பட்ட கே. பாலச்சந்தர் ‘நீர்க்குமிழி’ படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகிற்கு இயக்குநராக அறிமுகமானார். ‘நீர்க்குமிழி’ தொடங்கி ‘பொய்’ வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.
‘பொய்’, ‘ரெட்டை சுழி’ மற்றும் ‘உத்தம வில்லன்’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலச்சந்தர்.
கே.பாலச்சந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர்
‘மேஜர் சந்திரகாந்த்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘நீர்க்குமிழி’, ‘மெழுகுவர்த்தி’ மற்றும் ‘நவக்கிரகம்’ உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.
திரைப்படத் துறையில் அவர் 1965-ஆம் ஆண்டு நுழைந்தார். தன் முதல் படத்தில் நாகேஷை குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த அவரது ‘நீர்க்குமிழி’ அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது.
அது முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஒளிவீசத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலான தாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான் நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார்.
பாலச்சந்தர் ஒரு பெரும் சாதனையாளர். அவரது பிரவேசத்தால் தமிழ் திரை உலகிற்கு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியவர். பல கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களது உயர்வுக்கு புகழுக்கு வித்திட்டவர். கதாநாயகர்களின் பக்கம் இருந்த ரசிகர்களின் பார்வையை இயக்குநர் பக்கம் திருப்பிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. இயக்குநர் படம் என்கிற போக்கை ஏற்படுத்திய முன்னோடி அவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ள இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.
திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே.
நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோரையும் நடிகைகள்:சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, ‘கல்கி’ ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன் போன்றோரையும் அறிமுகப் படுத்தினார்.
இயக்குநர்கள் விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியார் கே.பாலசந்தர் தயாரித்த படங்கள் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள்.இப்படி அவர் 65 பேரை அறிமுகப் படுத்தியுள்ளார்.